‘வட சென்னை’யில் ஒரு ஆக்ஷன் கதை என்றால் உங்களுக்குள் குப்பையும், கூளமும் அடிதடி வெட்டுக் குத்துமான ஒரு கதை ஓடுகிறதா..?
ஆனால், இந்தப்படம் பார்த்தால் நீங்கள் நினைக்கும் எந்த வழக்கமான அம்சமும் அதில் இருக்காது. அத்துடன் வட சென்னை ஏரியாவை வைத்து இத்தனை டீசண்டான ஒரு ஆக்ஷன் கதையை எந்த இயக்குநரும் கொடுக்கவில்லை என்றே தோன்றுகிறது. அந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர் இயக்குநர் ரவி அப்புலு. (விஜய்யின் ஷாஜகான் இயக்குநர் இவர்தான்… நினைவிருக்கிறதா..?)
இந்தப் படத்தில் இவர் புதுமுக ஹீரோ ராஜன் தேஜேஸ்வரை வைத்தே விஜய் ரேஞ்சில் ஒரு கதை செய்ய ஆசைப்பட்டிருக்கிறார்.
வட சென்னை மார்க்கெட்டில் கொடிகட்டிப் பறக்கும் வில்லன் ‘சமக் சந்திரா’வை(இவரும் புதுமுகம்தான்…) ஒரு அபயோக அடிதினத்தில் ஹீரோ ராஜன் தேஜேஸ்வர் பின்னியெடுத்துவிடுகிறார். மார்க்கெட்டில் வைத்து அடி வாங்கியதால் மாமூல்வாசிகளிடம் ‘மார்க்கெட்’ இழந்துபோகும் வில்லனுக்கு, தன் மார்க்கெட்டை மீண்டும் தூக்கி நிறுத்த வேண்டுமென்றால் ஹீரோவை அதே மார்க்கெட்டில் வைத்து அடித்துத் துவைக்க வேண்டும் என்ற நிலை வருகிறது.
இன்னொரு பக்கம் ராஜன் தேஜேஸ்வர், நாயகி தருஷியைத் துரத்தித் துரத்திக் காதல் செய்தும் அவர் கண்டுகொள்ளாமல் இருக்க, மேற்படி ரவுடியை ராஜன் புரட்டி எடுப்பதைப் பார்த்த தருஷியின் அப்பா, தன் மகளை அவருக்கே மணமுடித்துக் கொடுக்க நினைக்க, இனி வில்லனிடம் அடி வாங்கினால் தன் காதலும், கல்யாணமும் அம்பேல் என்கிற நிலையில் இருக்கிறார்.
இந்த சுவாரஸ்யத் துரத்தலின் முடிவு என்ன என்பதுதான் கிளைமாக்ஸ்.
ராஜன் தேஜேஸ்வர் புதுமுகம் என்பது பார்வைக்கு மட்டும்தான். நடிப்பில் நாலு படம் நடித்த முதிர்ச்சி தெரிகிறது. கவனமாக கதைகளைத் தேர்ந்தெடுத்து தன் பாதையை அமைத்துக் கொண்டால் கோலிவுட்டுக்கு இன்னொரு நம்பிக்கை நட்சத்திரம் தயார்.
வில்லன் ‘சமக் சந்திரா’வும் லேசுப்பட்ட ஆளில்லை. ஒரு பக்கம் ‘சண்டக் கோழி’ லால் ரேஞ்சில் ஹீரோவைப் புரட்டி எடுக்க நினைத்தாலும் இன்னொரு பக்கம், யாரும் எதிர்பார்க்காத காமெடி ஏரியாவில் புகுந்து விலா நோக வைக்கிறார். அடி வாங்கிக் கையில் காசில்லாத நிலையில் பெண்டாட்டிக்குக் கூட அஞ்சும் நிலை இவரைப் போல் எந்த ரவுடிக்கும் வரக்கூடாது. அவரது அல்லக்கைகளும் நல்ல காமெடிப் பீஸுகள்..!
சின்னப்பட நாயகி போலவே தெரியவில்லை தருஷியின் வனப்பு. நடிகையாவதற்கே வளர்த்த வளர்ப்பு..!
ரேணுகா, வினோதினி, முனீஷ்காந்த்தும் காமெடி ஏரியாவில் கைகோர்த்து ரசிக்க வைக்கிறார்கள்.
சித்தார்த் விபினின் இசையும், இளையராஜாவின் ஒளிப்பதிவும் ஓகே. வாங்கிய காசுக்கு வஞ்சனையில்லாமல் உழைத்திருக்கிறார் மாஸ்டர் கனல் கண்ணன்.
செயல் – திறன் சிறப்பு..!