September 16, 2024
  • September 16, 2024
Breaking News
August 30, 2024

செம்பியன் மாதேவி திரைப்பட விமர்சனம்

By 0 111 Views

தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவர் வீட்டு சாதியினரை காதலித்தால் அதை நாடக காதல் என்று வர்ணிக்கும் நிலையில், தாழ்த்தப்பட்ட ஒரு பெண்ணை காதலிப்பதால் உயர்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த காதலனுக்கு நேர்ந்த கதி என்ன என்று சொல்லும் படம் இது.

சாதி மாற்றுக் காதலால் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட, அவரது தங்கையும், நாயகியுமான அம்ச ரேகாவை நாயகன் லோக பத்மநாபன் காதலிக்கிறார்.

வழக்கம்போல் ஆரம்பத்தில் இந்தக் காதலுக்கு நாயகி எதிர்ப்பு தெரிவித்தாலும், ஒரு கட்டத்தில் நாயகன் மீது நம்பிக்கை ஏற்பட்டு அவரை காதலிக்கத் தொடங்குகிறார்.

ஆனால், ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை தங்கள் சமூகத்தைச் சேர்ந்த இளைஞன் காதலிப்பதால் தங்கள் சமூகத்திற்கு இழுக்கு என்று நினைக்கும் சாதி வெறியர்கள், நாயகியைக் கொலை செய்ய திட்டம் போட, அவர்களிடம் இருந்து நாயகி தப்பித்தாரா?, லோக பத்மநாபனின் காதல் வெற்றி பெற்றதா? என்பதுதான் மீதிக் கதை. 

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை எழுதி இயக்கியிருக்கும் லோக பத்மநாபனே கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார். அவரது தன்னம்பிக்கை பாராட்டுக்கு உரியது.

அத்துடன் நடனம் ஆடவும் சண்டை போடவுமாக ஒரு முன்னணி ஹீரோவுக்குரிய அத்தனை வேலைகளையும் அவர் பார்த்திருப்பது ஆச்சரியமளிக்கிறது. 

நாயகியாக நடித்திருக்கும் அம்ச ரேகாவுக்கு தாழ்த்தப்பட்ட இனப் பெண்ணின் கதாபாத்திரம். அதற்குப் பொருந்துவதோடு, கொடுக்கப்பட்ட வேலையை சரியாகச் செய்திருக்கிறார். குறிப்பாக இறுதிக் காட்சியில் அவர் நிலையைப் பார்ப்பதற்குக் கண்கள் கலங்கும்.

ஜெய்பீம் மொசக்குட்டி காமெடி என்ற பெயரில் அடுத்தவர் வீட்டுக்குள் புகுந்து கசமுசா செய்வதைப் பார்த்து சிரிக்க முடியவில்லை.  மற்ற நடிகர்கள் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள். 

லோக பத்மநாபன் இசையில் (இசையும் அவரே…) அரவிந்த், லோக பத்மநாபன், வா.கருப்பன் ஆகியோரது வரிகளில் பாடல்கள் சிறப்பு.

கே.ராஜ சேகரின் ஒளிப்பதிவு பட்ஜெட்டுக்கு பக்கபலமாய் இருக்கிறது.

படத்தைப் பாசிட்டிவ்வாக முடித்திருந்தாலும், அத்தனை துயருக்குப்பின் நாயகனும், நாயகியும் எப்படி சேர்ந்து வாழ முடியும் என்று தெரியவில்லை.

செம்பியன் மாதேவி – சாதிகள் உள்ளதடி பாப்பா..!