January 21, 2025
  • January 21, 2025
Breaking News
December 7, 2018

சீமத்துரை திரைப்பட விமர்சனம்

By 0 1350 Views

வாழ்க்கையிலிருந்து சினிமா எடுப்பது ஒரு வகை. சினிமா பார்த்து சினிமா எடுப்பது இன்னொரு வகை. இது இரண்டாம் வகைப்படம் என்று உணரவைக்கிறார் இயக்குநர் சந்தோஷ் தியாகராஜன்.

ஒவ்வொரு தாய்க்கும் தன் மகன் சீமத்துரைதான் – அவன் என்னதான் ஊரைச்சுற்றி பொறுப்பில்லாமல் அலைந்தாலும். அப்படித்தான் ஏழைத்தாயான விஜி சந்திரசேகரின் மகனாக கீதன் வருகிறார். அப்பா இல்லாத பிள்ளையாக வளரும் அவரை அம்மா செல்லமாக வளர்க்க, அதன் காரணமாகவே ஊரைச்சுற்றிக்கொண்டு லந்து பண்ணித்திரியும் அவருக்கும் சினிமா வழக்கப்படியே ஊர்ப் பெரியமனிதரின் மகள் வர்ஷா மீது காதல் வருகிறது.

இனி வழக்கமாக சாதி குறுக்கே வரும் என்று பார்த்தால் அந்தஸ்து குறுக்கிடுகிறது. ஆனால், அந்தக் காதலுக்கு அந்தஸ்து மட்டும்தான் வில்லனா என்றால் ‘இல்லை… வேறொரு பிரச்சினை’ என்று முடிகிறது படம். அந்த ட்விஸ்ட் யாரும் எதிர்பாராதது.

கீதன் ஒரு பொறுப்பற்ற கிராமத்து இளைஞனாக பொருந்துகிறார். காதலுக்குப் பின்னான மாற்றத்தை சரியாகப் பிரதிபலித்திருக்கிறார். காதல் தன் அம்மாவைப் போலீஸின் காலில் விழுந்து கெஞ்ச வைத்து விட்டதே என்று மருகும் இடத்திலும், கிளைமாக்ஸிலும் பாராட்டும்படி நடித்திருக்கிறார்.

Viji Chandrasekar

Viji Chandrasekar

கோலிக்குண்டு கண்களும், குலோப் ஜாமூன் உதடுகளுமாக வர்ஷா கவர்கிறார். அந்த அப்பாவித்தனமான பார்வை மேலும் அவரை அழகாக்குகிறது. கீதன் மீது காதல் வரும் இடத்திலும், காதலுக்காக கீதன் படும் பாட்டை எண்ணிக் கலங்குவதிலும் கவர்ந்திருக்கிறார். அவரது முடிவு யாரிம் எதிர்பாராத… கல் மனதையும் கலங்க வைக்கும் ஒன்று. 

தன் கணவனைப்போல் மகன் வாழ்வும் அல்ப ஆயுளில் முடிந்து போய்விடக் கூடாதே என்று பதறும் தாயாக நடித்திருக்கும் விஜிசந்திரசேகர் சரியான தேர்வு. காவல்துறை அதிகாரியின் காலில் விழுந்து கதறும் காட்சியில் கலங்க வைக்கும் அவர் வர்ஷாவின் மாமன் சொல்வது பொய் என்று தெரியாமல் நம்பிக்கை வைக்கும்போது வெள்ளந்தித் தயாக மனத்தில் நிறைகிறார்.

கீதனின் நண்பர்களாக நடித்திருக்கும் கயல் வின்செண்ட், மகேந்திரன் நாயகியின் மாமாவாக நடித்திருக்கும் காசிராஜன் ஆகிய எல்லோரும் அவர்களால் முடிந்ததைச் செய்திருக்கிறார்கள். வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியாக நடித்திருக்கும் நிரஞ்சன் நடிப்பு பாராட்ட வைக்கிறது.

திருஞானசம்பந்தம் ஒளிப்பதிவும், ஜோஸப்ராங்க்ளின் இசையும் இந்தப்படத்துக்கான நியாயத்தைச் செய்திருக்கின்றன. 

வஞ்சம் தீர்த்த வில்லனுக்கு காதலர்களின் பெயர்களே எமனாக ஆகும் முடிவும், அவர் செய்த சதி தெரிந்த ஒரே ஒரு ஆளும் இறந்துபோன அவரிடம் “ஊர்க்குள்ள போய் சொல்லிட்டு வர்ரேண்ணே..!” என்று அனுமதி கேட்டுவிட்டுப் போகும் பிற்சேர்க்கையும் இயக்குநரின் முத்திரை..! 

சீமத்துரை – வஞ்சம் தின்ற காதல்..!