July 18, 2025
  • July 18, 2025
Breaking News
July 18, 2025

சட்டமும் நீதியும் (Zee 5 ஒரிஜினல்) சீரிஸ் விமர்சனம்

By 0 19 Views

சட்டம் எல்லோருக்கும் பொதுவானது என்கிறோம். ஆனால் அதில் பெறப்படும் நீதி அப்படி எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கிறதா என்பதுதான் இந்தக் கதையின் வாயிலாக இதன் எழுத்தாளர் சூரியபிரதாப் சமுதாயத்தின் முன் வைக்கும் கேள்வி.

தலைப்பைப் போலவே இதன் முழுக் கதையும் நீதிமன்றத்தையும் ஒரு வழக்கையும் சுற்றியே வருகிறது.

நீதிமன்ற வளாகத்துக்குள் ஒரு ஓரமாக மேசை நாற்காலியைப் போட்டுக்கொண்டு நோட்டரி பப்ளிக்காக இருந்து வருகிறார் கதையின் நாயகன் சரவணன். நீதிமன்றத்துக்குள் வழக்காடும் வழக்கறிஞர் எவரும் அவரை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை என்றாலும் அவர்கள் எல்லோரையும் விட வழக்கு விவரங்கள் அதிகம் அறிந்தவராக இருக்கிறார் அவர். 

அதைப் புரிந்து கொள்ளும் பயிற்சி வழக்கறிஞர் நம்ரிதா அவர் சிபாரிசில் ஒருசில மூத்த வழக்கறிஞர்களிடம் பயிற்சி பெற முயற்சி செய்து, அவர் சிபாரிசு செய்வதாலேயே ஒவ்வொரு முறையும் தோற்கிறார்.

இதேபோல் சரவணனுக்கும் சமுதாயத்திலும் சரி, குடும்பத்திலும் சரி எந்த ஒரு மரியாதையும் இல்லாமல் போக ஒரு கட்டத்தில் தன் திறமையை உலகுக்குத் தெரிய வைக்கும் முகமாக நீதிமன்றத்தின் முன்னால் தீக்குளித்து இறக்கும் ஒருவரின் வழக்கை தானாக முன்வந்து நடத்துகிறார். 

அதற்கு நம்ரிதாவையும் தன்னுடைய உதவியாளராகவே இணைத்துக் கொள்கிறார்.

முதல் ஹியரிங்கிலேயே அவர் நீதிமன்றத்தில் மூர்ச்சையாகி விழ அது மேலும் அவரை அவமானப்படுத்துவதாக அமைகிறது. அத்துடன் அந்த வழக்கும் பல வருடங்களுக்கு முன்பே முடிந்து விட்டதாக போலீஸ் ஆவணங்கள் சொல்ல, அதிலிருந்து வெளியேற நினைக்கிறார். 

அந்த சமயம் அவரே எதிர்பாராமல் அரசு தரப்பு வழக்கறிஞர் பொய் சாட்சி ஒன்றைக் கொண்டு வந்து வழக்கை திசை திருப்ப முயல… அதிலிருந்து சூடு பிடிக்கிறது கதை. 

நினைத்தபடி சரவணன் வழக்காட முடிந்ததா, தீக்குளித்தவருக்கு நியாயம் கிடைத்ததா என்பதுதான் மொத்தக் கதையின் முடிவு. 

சரவணனுக்கு என்றே பார்த்துப் பார்த்து செய்த கதை போல் இருக்கிறது. பார்வைக்கு அத்தனை பேரும் அவரை அலட்சியப்படுத்தும் தோற்றத்திலேயே இருப்பவர், வீட்டில் மகன் கூட மதிக்காத நிலையில் படு இயல்பாக அந்த பாத்திரத்தைத் தாங்கி நடித்திருக்கிறார் சித்தப்பு. 

அவரிடம் பயிற்சி வழக்கறிஞராக வரும் நம்ரிதாவின் இளமையும் சுறுசுறுப்பும் கவர்கின்றன. சரவணனே நினைத்துப் பார்க்காத அவருடைய திறமையை மோட்டிவேட் செய்வதில் நம்ரிதாவுக்கு பெரும்பங்கு இருக்கிறது. 

கிளைமாக்ஸ் தந்த இன்ப அதிர்ச்சியில் வார்த்தை வராமல் சரவணன் விக்கித்து நிற்க நம்ரிதா இடை புகுந்து அவர் பேச வேண்டியதை நீதிமன்றத்தின் முன் வைப்பது சிறப்பான காட்சி.

பப்ளிக் ப்ராஸிக்யூட்டர் ஆக வரும் அரோல் டி சங்கரன் தனது அனுபவ நடிப்பால் அசத்துகிறார்.

படத்தில் தேடப்படும் முக்கிய பாத்திரமாக வரும் இனியா ராமின் நடிப்பும், கதைக்குள் அவரது பிரவேசமும் கதை சூடு பிடிக்க உதவுகிறது. 

நீதிமன்ற வளாகத்துக்குள் தீக்குளிக்கும் அந்தப் பெரியவரின் கதையை கொஞ்சம் கொஞ்சமாக நாம் அறிய நேரும்போது கண்கள் ஈரமாகின்றன. 

அவரது மனைவியாக நடித்திருக்கும் விஜயஸ்ரீயும் பொருத்தமான தேர்வு.

சரவணன் மனைவி மகள் மகன் என்று அத்தனை பேரும் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தை அப்படியே பிரதிபலித்திருக்கிறார்கள். 

இயக்கமும், படமாக்கமும் உரையாடல்களும் இயல்பாக இருப்பதால் ஒரு வாழ்க்கையை கண்முன் பார்க்கும் அனுபவம் நமக்கு கிடைக்கிறது. 

ஆனாலும் நீதிபதிகள் பொய்சாட்சியாக அழைத்து வரப்படும் பெண்ணின் ஆவணங்களை சரி பார்ப்பது போல், உண்மையான பெண் நீதிமன்றத்திற்கு வரும்போது எதையும் சரி பார்க்காமல் அவரது வாக்குமூலத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு தீர்ப்பு தருவது லாஜிக் மீறல் ஆக இருக்கிறது. 

அதேபோல் நீதிமன்றத்திற்கு தெரிவிக்காமல் யார் ஒருவரும் அவர்களாகவே அந்த வழக்கு நடைபெறும் போது உள்ளே வந்து கலந்து கொள்வது நடைமுறை அல்ல.

ஒரு கட்டத்தில் சரவணன் அந்த வழக்கில் இருந்து விடுபட்டு விட முயற்சிகள் எடுத்தும் அது முடியாமல் போய் அவரே எதிர்பாராமல் வழக்கு திசை திரும்பி அவருக்கு சாதகமாவது, அதிர்ஷ்டவசமாகவே அமைவதால் அதில் அவரது ஆற்றல் எதுவும் இலலாமல் போகிறது.

இந்த இயல்பான கதைக்கு வழக்கமான மாஸ் ஹீரோவுக்கான டைட்டில் பாடல் போல் “யார் இவன்..?” என்றெல்லாம் ஹீரோயிசம் தூக்கலான பாடல் வருவது கொஞ்சம் கூடப் பொருந்தவில்லை.

இந்தக் குறைகளை எல்லாம் மறக்கடித்து விடுகிறது திரைக்கதையின் அடிநாதமான உணர்ச்சிப் போராட்டம்.

பாலாஜி செல்வராஜின் இயக்கம் பாராட்டத்தக்கது.

எஸ் கோகுலகிருஷ்ணன் ஒளிப்பதிவும், ராவணனின் படத்தொகுப்பும் நேர்த்தியாக இருக்கின்றன. 

விபின் பாஸ்கரின் இசையும் கதையின் உணர்வுடன் கலந்து பயணிக்கிறது.

இன்ன பிற தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பிலும் எந்தக் குறையும் இல்லை.

சட்டமும் நீதியும் – சத்தியத்தின் வெற்றி..!

– வேணுஜி