June 20, 2024
  • June 20, 2024
Breaking News
July 22, 2023

சத்திய சோதனை திரைப்பட விமர்சனம்

By 0 224 Views

நல்லவன் என்ற வார்த்தைக்கு வாழ்க்கை அகராதியில் பொருள் தேடினால் பிழைக்கத் தெரியாதவன் என்றுதான் வரும். அப்படி அப்பாவியாக இருக்கும் நல்லவனான பிரேம்ஜி நல்லது செய்யப் போய் எப்படி சோதனைக்கு உள்ளாகிறார் என்பதுதான் படத்தின் கதை.

சங்குப்பட்டி என்ற சின்னஞ்சிறு கிராமத்தில் வசிக்கும் பிரேம்ஜி வழியில் போய்க் கொண்டிருக்கும் போது ஒருவரை கொலை செய்து போட்டிருப்பதைப் பார்த்து, வெயிலில் கிடக்கும் அவரை நிழலில் இழுத்துப் போட்டுவிட்டு அவரது உடைமைகளை எடுத்துக் கொண்டு காவல் நிலையம் செல்ல, எதிர்பாராத விதமாக கொலையாளிகள் போலீசில் சரணடைய… பிரேம்ஜியும், நாமும் எதிர்பாராத திருப்பங்கள், அவரைக் குற்றவாளியாக நிறுத்துகின்றன.

பின்னர் என்ன ஆகிறது என்பது படத்தின் மீதிக் கதை.

கையைக் காலை ஆட்டாமல் சிம்பு ஸ்டைலில் விரலை உயர்த்தாமல், நாக்கைச் சுழற்றாமல், மொத்தத்தில் வெங்கட் பிரபுவின் படத்தில் செய்யும் எந்த சேட்டைகளும் இல்லாமல் அமைதியாக நடித்திருக்கிறார் பிரேம்ஜி அமரன். அப்படி அவரை இயல்பாக நடிக்க வைத்ததற்கு இயக்குனர் சுரேஷ் சங்கையாவுக்குப் பாராட்டு தெரிவிக்கலாம்.

அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி என்று பிரேம்ஜியின் நிலை ஆகிப்போக, அவர் சொல்வதைப் போலீஸ் தொடங்கி காதலி, குடும்பம் என்று யாருமே புரிந்து கொள்ளாத சூழ்நிலையில் இனி என்ன சொல்லியும் பிரயோஜனம் இல்லை என்று ஒரு கட்டத்தில் அடங்கிப் போய் விடுவதில் நம் பரிதாபத்தை சம்பாதித்துக் கொள்கிறார்.

சத்தியவானாக இருந்தால் ஆபத்துதான் என்று சொல்ல வரும் கதையில் அதை இயல்பான நகைச்சுவையுடன் சொல்லி இருக்கும் சுரேஷ் சங்கையாவின் திறமை பாராட்ட வைக்கிறது.

கிராமத்துக்குள் உபரி வருமானம் கிடைக்காமல் திண்டாடும் போலீஸ்காரர்கள் இப்படி ஏதேனும் கேசில் கிடைக்கும் பொருட்களைப் பங்கு போட்டுக் கொள்வது தான் அவர்களது ‘மேல் வரும்படி’ என்றிருக்க இறந்து போனவரது நகைகளை மீட்டுப் பங்கு போட்டுக்கொள்ள நினைக்கும் அவர்களது முயற்சிதான் படத்தின் களமாகவே அமைகிறது.

நியாயப்படி இந்தக் கேஸ் பக்கத்து ஊர் போலீஸ் ஸ்டேஷனுக்கு போயிருக்க வேண்டிய நிலையில், டெட் பாடியை நிழலில் இழுத்துப் போட்ட பிரேம்ஜியால் எல்லை மாறி இந்த ஊருக்கு மாற்றப்பட்டு விட, இந்தப் போலீஸ்காரர்கள் பெரிய அளவில் லாபம் பார்த்து விடுவார்களோ என்று மேற்படி போலீஸ் ஸ்டேஷன்காரர்கள் வயிறு எரிவதெல்லாம் காக்கிக் காமெடிகள்.

ஸ்டேஷனில் இருக்கும் கேஸ் அப்படியே பரவி ஒவ்வொரு போலீஸ்காரரின் வீட்டுக்குள் வந்து சேர்வதிலும் அந்தக் காமெடி எதிரொலிக்கவே செய்கிறது.

ஸ்டேஷனில் இருந்த பிரேம்ஜி திடீரென்று கிடைத்த கேப்பில் தப்பிக்க, இதை சாக்காக பயன்படுத்திக் கொண்டு கொலையாளிகளும்அவர் பின்னால் எஸ் ஆக, அவர்களை துரத்திக் கொண்டு இருக்கிற போலீஸ் அத்தனை பேரும் ஓட முயன்று, முடியாமல் படும் பாடு கலகலப்பான காட்சி என்றால், போலீஸ் திரும்புவதற்கு முன்னரே கொலையாளிகள் ஸ்டேஷன் திரும்பி விடுவது லகலக.

பிரேம்ஜி காதலியாக ஸ்வயம் சித்தா, சகோதரியாக ரேஷ்மா, கான்ஸ்டபிளாக சித்தன் மோகன், மற்றும் செல்வ முருகன், ஹரிதா, பாரதி, முத்துப்பாண்டி, கர்ண ராஜா என்று படத்தில் வரும் அத்தனைப் பேரும் அந்தந்த பாத்திரங்களாக இயல்பாக நடித்திருக்கிறார்கள்.

அதிலும் இன்பார்பர் ராஜேந்திரன், லட்சுமி பாட்டி நடிப்பு அதிகமாகவே கவனம் ஈர்க்கிறது.

இவர்களைத் தாண்டி நீதிபதியாக வரும் ஞானசம்பந்தம், அவரது பாணியிலேயே சிரிக்க வைத்து சிந்திக்க வைத்து வழக்கை நடத்திச் செல்வது இன்னும் சுவாரசியம் கூட்டுகிறது.

ரகுராமின் இசையில் பாடல்களும், தீபன் சக்கரவர்த்தியின் பின்னணி இசையும் இயல்பு மாறாமல் ஒலித்திருக்கிறது.

ஒரே லொகேஷனில் கதை நகர்ந்தாலும் இருப்பதை வைத்துக் கொண்டு இயல்பாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆர்.வி. சரண்.

இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருந்தால் பெரிய வெற்றி அடைந்திருக்க கூடிய சாத்தியம் உள்ள படம்.

எளிய மற்றும் ரசிகர்களை ஏமாற்றாத முயற்சிக்கு பாராட்டுக்கள்.

சத்திய சோதனை – சோதிக்காமல் சிரிக்க வைத்ததே சாதனை..!