December 12, 2024
  • December 12, 2024
Breaking News
July 23, 2023

எக்கோ திரைப்பட விமர்சனம்

By 0 1783 Views

“நாம் செய்த வினை பூமராங் போல – திரும்ப வந்து நம்மையே தாக்கும்…” என்பார்கள். அதையே கொஞ்சம் மாற்றி ‘நாம் செய்த வினையின் எதிரொலி (Echo) நம்மையே தாக்கும்…’ என்கிறார் இந்தப் பட இயக்குனர் நவீன் கணேஷ்.

அவ்வப்போது திரையில் தலை காட்டும் ஸ்ரீகாந்த், இந்தப் படத்தின் நாயகன் ஆகி இருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் படத்தின் வில்லனும் அவரேதான். அதனாலேயே இப்படி ஒரு பாத்திரத்தை அவர் ஏற்றுக் கொண்டிருக்கக் கூடும்.

காதல் மனைவியைக் கைப்பிடித்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஸ்ரீகாந்தின் வாழ்க்கையில் ஒரு கெட்ட சக்தி துரத்திக் கொண்டிருக்கிறது. அவரது முதல் மனைவியும் அவ்வாறே பயத்தில் தற்கொலை செய்து கொண்டிருக்க… அவர்களைப் பிடித்து ஆட்டும் அந்த சக்தியிடம் இருந்து ஸ்ரீகாந்தாவது மீண்டாரா என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

ஸ்ரீகாந்தின் அழகில் மயங்கி அவர் பணிபுரியும் கம்பெனி முதலாளியின் மகள் பூஜா காவேரி அவரைக் காதலிப்பது பொருத்தமாக இருக்கிறது. ஸ்ட்ராபெரி நழுவி ஐஸ்கிரீமில் விழுந்து அதுவும் நழுவி அவர் வாயில் விழுந்தால் சும்மா இருக்க முடியுமா..? பூஜாவைக் கல்யாணம் செய்து கொள்வதன் மூலம் பெரும் பணக்காரராகவும் அவர் ஆகும் வாய்ப்பு இருக்க அதற்குத் தடையாக வருகிறார் அவர் அம்மா பார்த்து வைத்த பெண்ணான வித்யா பிரதீப்.

விதியே வித்யாவே என்று திருமணம் செய்து கொண்டாலும் அந்த வாழ்க்கையும் வித்யா  மரணத்துடன் முடிவடைய மீண்டும் பூஜாவுடன் இணைகிறார் ஸ்ரீ. ஆனால் வீட்டோடு தங்கிவிட்ட ஆவி, ஒரு நோக்கோடு அவரை குறிவைக்கப் பதறித்தான் போகிறார்.

இதற்கு முன் வந்த படத்தில் வில்லியாக வந்த வித்யா பிரதீப், இதில் சரியான பயந்தாங்கொள்ளியாக வருகிறார். ஆனால் இந்தப் பாத்திரத்துக்கும் அவரது அகல் விழி பாந்தமாகத்தான் இருக்கிறது. தன்னை அச்சுறுத்தும் சக்தி என்னவென்றே தெரியாமல் இறந்து போவதுதான் பரிதாபம்.

குடும்ப குத்து விளக்காக வித்யா தோன்றுவதால், கவர்ச்சி ஏரியாவை பூஜா ஜாவேரியிடம் கொடுத்துவிட்டார் இயக்குனர். அவரும் கிளாமர் காவேரி ஆகி வெள்ளப்பெருக்கே எடுத்து விட்டார்.

ஆவிகளைக் கண்டுபிடித்து சுளுக்கு எடுக்கும் நவீன மந்திரவாதியாக கோட் சூட்டுடன் வருகிறார் ஆசிஷ் வித்யார்த்தி. என்னதான் ஆவிகளை ஓட்டினாலும் அர்த்த ராத்திரியில் எல்லாம் தூங்காமல் அவரது அலுவலகம் இயங்கிக் கொண்டே இருப்பது ஆச்சரியம். அவர்தான் தூங்கவில்லை என்றால் அவர் உடன் இருப்பவர்களும் கூடவா தூங்காமல் நின்று கொண்டிருப்பார்கள்..?

ஆனாலும் நல்ல ஆவியின் பொல்லாப்புக்கு ஆளாக மாட்டேன் என்று ஜகா வாங்கும் ஆசிஷின் நேர்மையை நினைத்தால் புல்லரிக்கிறது.

ஸ்ரீகாந்தின் அம்மாவாக வரும் பிரவீனா, நண்பர்களாக வரும் ஸ்ரீநாத், கும்கி அஸ்வின் உள்ளிட்டோர் தேவைக்கு உதவும் ஊறுகாய்கள்.

சிஜி உதவியின்றி பயமுறுத்தும் உத்திக்காக ஒளிப்பதிவாளர் கோபிநாத்தையும், வால்யூமை அதிகரித்தாலும் எக்கோ அடிக்காத இசையைத் தந்ததற்காக நரேன் பாலகுமாரையும் பாராட்டலாம்.

அவ்வளவு பெரிய கோடீஸ்வரி பூஜா, வெறும் ஸ்ரீகாந்தைக் காதலிப்பதிலும், அம்மா சொல்லிவிட்டார் என்ற ஒரே காரணத்துக்காக வித்யாவை ஸ்ரீகாந்த் திருமணம் செய்து கொள்வதிலும், எப்படி முடிப்பது என்று தெரியாத கிளைமாக்சிலும் அழுத்தமே இல்லை.

திரைக்கதையின் அழகே நம்ப முடியாத விஷயங்களைக் கூட நம்ப வைப்பதுதான். மேற்படி விஷயங்களில் கவனம் செலுத்தி இருந்தால் நம்ப முடியாத இந்தக் கதையை நாம் நம்பி இருக்கக்கூடும்.

எக்கோ – எதிர்வினையான தன் வினை..!