‘ மேதகு’ படத்தை இயக்கியதன் மூலம் உலகளாவிய தமிழர்களின் இதயத்தில் இடம் பெற்ற இயக்குனர் கிட்டு இப்படத்தின் மூலம் நாம் அதிகம் அறியாத தமிழ் ஈழப் போரில் முக்கிய அங்கம் வகித்த மருத்துவப் பணிகள் பற்றி நமக்குத் தெரிவிக்கிறார்.
போர் நடந்து கொண்டிருக்கும் இடத்திலேயே காயம் பட்டவர்களுக்கு அத்தியாவசிய மருத்துவ சிகிச்சை வேண்டி அங்கங்கே பூமியில் பதுங்கு குழிகள் அமைத்து மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பணிகளும் அதற்கான சவாலும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளன.
அப்படி மருத்துவப் பணிகளை மேற்கொண்டவர்களே சல்லியர்கள் என அழைக்கப்பட்டார்கள்.
தமிழ்ப் போராளிகளுக்கு மட்டுமன்றி காயம் பட்ட பொதுமக்கள்.. அதற்கும் மேல் காயம் பட்ட சிங்களர்களுக்கும் கூட இந்த சல்லியர்கள் மருத்துவ உதவிகளை செய்ததை நாம் அறிய நேரும்போது புல்லரிக்கிறது.
அதில் நாயகி மருத்துவர் நந்தினியாக நடித்திருக்கும் சத்யதேவி, அந்தப் பாத்திரமாகவே மாறி இருக்கிறார். ஓரிடத்திலும் அவர் ஒரு நடிகை என்பதை நாம் உணராமல் மருத்துவராகவே உணர செய்திருப்பதில் அவரது உடல் மொழியும் கூட உதவி இருக்கிறது.
அவருடன் மருத்துவர் செம்பியன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மகேந்திரன். கூட நடிகராக நம் மனதில் இருந்து மறைந்து அந்தப் பாத்திரமாகவே மாறி இருப்பது இயக்குனரின் திறமை மட்டுமே என்பதை உணர முடிகிறது.
நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் சேது கருணாஸ் தன் நடிப்பிலும் உரையாடலிலும் உள்ளத்தை நெகிழ வைத்து விடுகிறார்.
காதல் போராளிகள் நாகராஜும் பிரியலயாவும் கூட நம் உள்ளத்தில் இடம் பிடித்து விடுகிறார்கள்.
ஈழத்தைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறது சிபி சதாசிவத்தின் ஒளிப்பதிவு. படத்துக்கு என்ன பட்ஜெட் என்றே தெரியாத அளவுக்கு போர்க்களக் காட்சிகளை வியக்கும் அளவில் படமாக்கி இருக்கிறார் சிபி. சபாஷ்..!
கென் மற்றும் ஈஸ்வர் இசைத்திருக்கும் பாடல்களும் பின்னணி இசையும் கூட அப்படியே. வைரமுத்து மற்றும் டி.கிட்டுவின் பாடல்கள் காதுகளில் இறங்கி நெஞ்சில் படுகன்றன.
இயக்குனரின் எண்ணத்தோடு கைகோர்த்து இருக்கிறார் படத்தொகுப்பாளர் சி.எம்.இளங்கோவன்.
கலை, ஆடை வடிவமைப்பு, ஒப்பனை உள்ளிட்ட இதர கிராஃப்டுகளில் பணிபுரிந்தவர்களும் பாராட்டுக்குரியவர்கள்.
எழுதி இயக்கியிருக்கும் டி.கிட்டு, தமிழ் இனத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் சொத்து. அதிலும் தமிழ் ஈழப் போரின் பதிவுகளைக் கலை நேர்த்தியுடன் உலகத் தரத்தில் உலக மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அவரது பணி மகத்தானது.
உலகத் தமிழர்களின் சார்பாக அவருக்கு உள்ளார்ந்த பாராட்டுகளும்… நன்றிகளும்..!
சல்லியர்கள் – மனிதம் காத்து மனம் அள்ளியவர்கள்..!
– வேணுஜி