November 22, 2024
  • November 22, 2024
Breaking News
January 2, 2022

சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை திரை விமர்சனம்

By 0 360 Views

தலைப்பை பார்த்தவுடனேயே இது ஒரு காதல் கதை என்பதை புரிந்து கொள்ள முடியும். ஆனால் படத்தின் களம் என்ன என்பதில்தான் புதுமை செய்ய நினைத்திருக்கிறார் இயக்குனர் மகேஷ் பத்மநாபன்.

அதற்கு ஏற்ற மாதிரியே நாயகனின் பாத்திரப் படைப்பை புதிதாக உருவாக்கியிருக்கிறார். இதுவரை ஆஸ்கர் நாயகன் ரசூல் பூக்குட்டி நடித்தைத் தவிர்த்து படங்களில் நாம் பார்த்திராத சவுண்ட் இன்ஜினியர் வேடம்தான் நாயகன் ருத்ரா ஏற்றிருப்பது.

தனியார் எஃப் எம்மில் ஆர்ஜே வாக இருக்கும் நாயகி சுபிக்ஷாவுக்கு நேஷனல் ஜியாக்ரபிக் சேனலில் ஒரு டாக்குமென்டரி தயாரிக்க அழைப்பு வர அதற்காக சவுண்ட் எஞ்சினியர் ருத்ராவை அமர்த்திக் கொண்டு காட்டுக்குள் செல்கிறார். காதுக்கு இனிமையான இசை அவர்களுக்குள் காதலையும் கொண்டு வந்து விடுகிறது.

ருத்ரா முதலில் தயங்க ஆனால் சுபிக்ஷாவோ அவரை துரத்தி துரத்தி காதலித்து ஒரு கட்டத்தில் போதை ஏற்றி படுக்கைக்கு அழைத்து எல்லா காரியங்களையும் முடித்து விடுகிறார். படுக்கையில் விழுந்த பின்தான் ருத்ரா காதலில் விழுகிறார்.

இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து ஒரு நபர் இந்திய திருவிழா இசையை ஒளிப்பதிவு செய்ய எண்ணி சுபிக்ஷாவை நாடுகிறார். தனக்கு உதவியாக ருத்ராவையும் அழைத்துக்கொண்டு அந்த அசைன்மென்ட்டுக்கு புறப்படுகிறார் சுபிக்ஷா.

இந்த பயணம் தன் காதலை மேலும் வலுப்படுத்தும் என்று நினைத்த ருத்ராவுக்கு ஏமாற்றம். அந்த வெளிநாட்டுக்காரருடன் சுபிக்ஷா நெருக்கமாக பழகுவதைப் பார்த்து நொந்து போகிறார்.

போதாக்குறைக்கு வெளிநாட்டிலிருந்து சபிக்ஷாவுக்கு நிச்சயிக்கப்பட்ட வாலிபன் என்று ஒருவன் வந்து சேர ருத்ராவும் சுபிக்ஷாவும் இணைய முடிந்ததா என்பதுதான் மிச்ச சொச்ச கதை.

அசப்பில் ஆரம்பகால கார்த்தி போல் இருக்கும் ருத்ரா ஹீரோவுக்கு உரிய இலக்கணங்களுடன் இருக்கிறார். ஆனால் காதலிக்கும் காட்சிகளில் கூட ஏன் சோகம் தூக்கலாய் முகத்தை அப்படி வைத்துக் கொண்டிருக்கிறார் என்பது புரியவில்லை. மலையாளியான அவர் தமிழில் பேச முடிவெடுத்ததை வரவேற்கலாம் – தப்பில்லை. ஆனால் மலையாளம் கலந்த தமிழ், அவரை அந்நியப்படுத்துகிறது.

கடுகு படத்தில் அறிமுகமான சுபிக்ஷா எண்ணையில் போட்ட கடுகாகப் பொரிந்து இளமைப் பூரிப்பாக இருக்கிறார். அவருடன் படுக்கையை பகிர்ந்த பின்பு ருத்ராவுக்கு அவர் பாத்திரத்தின் மேல் ஏற்படும் சந்தேகம் நமக்கு அவரை காதலிக்கும் முன்னாலேயே ஏற்பட்டுவிடுகிறது. அந்த அளவுக்கு எஃப் எம்மில் முதலாளி ஜொள்ளு விடும் அளவில் நெருக்கமாகப் பழகுகிறார் சுபிக்ஷா.

அது ஏன் அப்படி நடந்து கொள்கிறார் என்பதற்கு பின்னால் ஒரு வலுவில்லாத காரணத்தைச் சொல்கிறார்கள்.

ஆனால் சுபிக்ஷா தவிர படத்தில் வரும் ஏனைய பாத்திரங்கள் எல்லோருமே ஒருவித நாடகத் தன்மையுடன் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். காட்சி அமைப்புகளும் அப்படியே இருக்கின்றன.

அழகான ஒரு காடு, இளமையான ஹீரோ ஹீரோயின் கிடைத்தும் பிஜு விஸ்வநாத் – சிபி ஜோசப் என்று இருவர் கையாண்டும் ஒளிப்பதிவு ஏன் இருள் கவிந்து கிடக்கிறது என்று தெரியவில்லை. ராஜேஷ் அப்புக்குட்டனின் இசை பரவாயில்லை. ஒரு சவுண்ட் இன்ஜினியரின் கதை என்பதற்காகவாவது படத்தின் ஒலிப்பதிவில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

“ஒரே துறையில் முன்னேற விரும்பும் இருவரும் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்…” என்று அந்த வெளிநாட்டுக்காரர் ஏன் அட்வைஸ் செய்கிறார் என்று புரியவில்லை. அதன் காரணமாகவே எப்படி படத்தை முடிப்பது என்று தெரியாமல் தொங்கலில் விட்டு விடுகிறார் இயக்குனர்.

இந்தப் படம் பல நாடுகளில் திரையிட்டு விருதுகளைப் பெற்றதாகச் சொல்கிறார்கள். அதற்குக் காரணம் அவர்கள் எடுத்துக்கொண்ட சவுண்ட் இன்ஜினியரிங் என்ற களமாக இருக்கலாம்.

தலைப்பில் இருக்கும் சக்கரையை கொஞ்சம் கிளைமாக்சிலும் தூவி இருக்கலாம்..!