November 23, 2024
  • November 23, 2024
Breaking News
September 26, 2023

ஆதார் பாதுகாப்பில் எந்த கோளாறும் இல்லை – இந்திய அரசு அறிவிப்பு

By 0 456 Views

இந்தியாவில் உள்ள பல கோடி மக்கள் தொகைக்கும் அடையாள எண்ணாக ஒரு தனித்துவ அடையாள எண் ஆதார் எனும் பெயரில் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் சிறப்பமசம் என்னவென்றால், பயோமெட்ரிக் முறை எனப்படும் வழிமுறையில் ஒவ்வொரு தனிமனிதர்களின் கைவிரல் ரேகை மற்றும் முக அடையாளமும் இன்ன பிற விவரங்களும் சேகரிக்கப்படுவதால், ஒவ்வொரு குடிமகனின் அடையாள விவரங்களும் வேறு ஒருவருடன் ஒத்து போகாது.

இத்தகவல்கள் அனைத்தும் மத்திய அரசாங்கத்தினால் நிறுவப்பட்டுள்ள மென்பொருள் கட்டமைப்பான தனித்துவ அடையாள ஆணையத்தால் பாதுகாக்கப்படும். இந்த அடையாள எண் 12 இலக்கங்கள் கொண்டது.

இந்நிலையில் உலகின் முக்கிய நிதி மற்றும் கடன் தரக்குறியீட்டு நிறுவனங்களில் ஒன்றான மூடி’ஸ் (Moody’s) நிறுவனம், ஆதார் கட்டமைப்பில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படலாம் என்றும் அதிக வெப்பம் மற்றும் அதிக ஈரப்பதம் மிகுந்த வானிலை சூழல் மிகுந்த ஊர்களில் நம்பத்தகுந்த வகையில் பயனாளிகளின் கைரேகை சரிபார்ப்பு முறை வேலை செய்யாது என தெரிவித்திருந்தது.

மேலும், கூலி வேலை செய்பவர்களுக்கு பல சேவைகள் மறுக்கப்படுவதாகவும் கருத்து தெரிவித்திருந்தது.

அனைவரது அங்க அடையாளங்கள், விரல் ரேகை, புகைப்படம் மற்றும் இதர விவரங்கள் ஒரே மென்பொருள் தொகுப்பில் இருப்பதால் பயனர்களின் தரவு விவரங்களுக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்படும் ஆபத்து உள்ளதாகவும் எச்சரித்திருந்தது.

ஆனால், இதனை இந்திய அரசாங்கமும் ஆதார் தனித்துவ அடையாள ஆணையமும் திட்டவட்டமாக மறுத்துள்ளன. இது குறித்து இந்திய அரசு தெரிவித்திருப்பதாவது: சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவை ஆதார் திட்டத்தை பாராட்டி வருகின்றன.

பல நாடுகள் இதே முறையை தங்கள் நாட்டில் பின்பற்ற இந்தியாவின் உதவியையும், ஆலோசனையையும் நாடி வருகின்றன. தங்களின் கருத்துக்களுக்கு அவர்களின் அறிக்கையில் எந்தவிதமான அடிப்படை ஆதாரமோ அல்லது வேறு விவரங்களோ ஆதாரமாக மூடி’ஸ் நிறுவனம் வழங்கவில்லை.

ஆதாருக்கான வலைதளத்தை மட்டுமே மேற்கோளாக அந்த அறிக்கையில் காட்டியுள்ளது. மேலும், பயோமெட்ரிக் விவரங்களை சரிபார்க்க அவசியம் ஏற்படும் இடங்களில் பயனாளிகள் தொடுதல் முறை மூலமாக மட்டுமே சேவைகளை பெற வேண்டும் என்பதில்லை.

கண் கருவிழி அல்லது முகத்தை ஸ்கேன் செய்வதன் மூலமாகவோ அல்லது ஓடிபி எனப்படும் கடவுச்சொல் மூலமாகவோ சேவைகளை பெறலாம்.

இந்திய பாராளுமன்றத்திலேயே இது குறித்த விவரங்கள் விரிவாக தெரிவிக்கப்பட்டது. கூலி தொழிலாளிகள் மற்றும் மானிய உதவிகள் பெறுபவர்கள் ஆதார் எண்ணை தர வேண்டிய அவசியமில்லாமல் தங்களுக்கு உரிய பணத்தையோ பிற சேவைகளையோ பெற்று கொள்ள முடியும். இவ்வாறு இந்திய அரசாங்கம் பதில் அளித்துள்ளது.