April 27, 2024
  • April 27, 2024
Breaking News
February 3, 2022

சாயம் திரைப்பட விமர்சனம்

By 0 667 Views

கொஞ்ச காலமாகவே தமிழ் சினிமாவில் சாதிப்பிரச்சினைகள் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. அந்த வகையில் இந்தப் படமும் தென் மாவட்டப் பகுதியில் நடக்கும் சாதிப் பிரச்சினைகள் குறித்துப் பேசுகிறது.

ஊர்ப் பெரிய மனிதரான பொன்வண்ணனும், ஆசிரியர் இளவரசுவும் நல்லது செய்து தங்கள் ஊரில் எல்லோரிடமும் நல்ல பெயர் எடுத்து வைத்திருக்கிறார்கள். அவர்களின் மகன்களும் நல்ல நண்பர்களாக கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் பொன்வண்ணன் மகனாக அபி சரவணன் வருகிறார்.

பொன்வண்ணனின் உறவினரான தென்னவனும், அவர் தம்பி போஸ் வெங்கட்டும் கூட நல்ல பெயருடன் வாழ்ந்து வர, தென்னவனின் மகளான ஷைனியும் அபி சரவணனும் காதலித்து வருகிறார்கள். அபி சரவணனுக்கு ஷைனி முறைப் பெண்ணாகவும் இருக்கிறார். 

இந்நிலையில் ஊரில் அதிக வட்டிக்கு பணத்தைக் கொடுத்து வாழ்ந்து வரும் சாதி வெறியர் ஆன்டனி சாமிக்கும் பொன்வண்ணனுக்கும் உரசல் ஏற்படுகிறது. அதற்குப் பழி வாங்க சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஆன்டனி சாமியின் சதி வலையில் அபி சரவணன் சிக்க என்ன ஆகிறதென்பது மீதிக் கதை.

சமுதாயப் போராளியாக தன்னை தன்னை அடையாளப் படுத்த துடித்துக் கொண்டிருக்கும் அபி சரவணனுக்கு ஒரு வகையில் இந்தப்படம் பொருத்தமாகவே அமைந்திருக்கிறது. அப்பாவியான நாயகன் வேடத்துக்கும், சாதி வெறி ஊட்டப்பட்ட நிலையில் வன்முறையாளராகவும் அடையாளப் படுகிறார். கிளைமாக்சில் தன்னிலை உணர்ந்து அவர் எடுக்கும் முடிவு சாதி வெறியை ஊட்டுபவர்களுக்கு சரியான தண்டனை.

அவரையே நினைத்து உயிர்விடும் ஷைனியைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது. அபி சரவணனின் நண்பனாக வந்து தவறாகப் புரிந்து கொள்ளப்படும் இளைஞனும் அவரது காதலும் கூட அந்தோ பரிதாபம்.

பொன்வண்ணனும், அவர் மனைவி சீதாவும் பாத்திரங்களில் பொருந்துகிறார்கள். 

ஆசிரியராக வந்து மகனைப் பறி கொடுக்கும் இளவரசுவும் நிறைவாக செய்திருக்கிறார். அவரது இழப்புக்குப் பழிவாங்க சாதி வெறியுடன் திரிபவர்களிடம் அவர் சொல்லும் புத்திமதி சிந்திக்க வைக்கிறது. ஆனால், அது பலனில்லாமல் போவதும் கொடுமை.

படத்தை இயக்கி இருக்கும் ஆன்டனி சாமியே வில்லனாகவும் ஆகி இருக்கிறார். சாதாரண நட்புப் பிரச்சினையை சாதிப் பிரச்சினையாக மாற்றி விடும் இவரைப் போன்றவர்கள் இந்த சமுதாயத்தில் நிறைந்தே இருக்கிறார்கள்.

படிக்கும் மாணவர்கள் இவர்களைப் போன்ற சாதி வெறியர்களிடம் சிக்கி விடக் கூடாது என்பதுதான் படம் சொல்லும் செய்தி. ஆனால், அதை இன்னும் நறுக்கு தெரித்தாற்போல சொல்லி இருக்கலாம்.

இரண்டு சாதி பிரிவினரும் மாற்றி மாற்றி சாதி வன்மத்தைப் பெருமையாகப் பேசிக் கொண்டிருப்பது அலுப்பாக இருக்கிறது. அபி சரவணன் அடுத்தடுத்து கொலைகளாகச் செய்வது ஹீரோயிசத்தை வெகுவாகக் குறைக்கிறது.

நாகா உதயன் இசையும், கிறிஸ்டோபர் – சலீமின் ஒளிப்பதிவும் பட்ஜெட்டுக்கு நியாயம் செய்திருக்கின்றன.

சாயம் – ‘ சாதி ‘ சனம்..!