May 18, 2024
  • May 18, 2024
Breaking News
April 12, 2024

ரோமியோ திரைப்பட விமர்சனம்

By 0 157 Views

ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டில் ‘ரோம் காம்’ எனப்படும் காமெடி கலந்த காதல் படங்கள் அடிக்கடி வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் கோலிவுட்டில் இந்த ஜேனர் படங்கள் வருவது  குறைவுதான். 

அந்தக் குறையைப் போக்குவதற்காக முயன்றிருக்கும் இயக்குனர் விநாயக் வைத்தியநாதனின் காமெடி வைத்தியம் வென்று இருக்கிறதா என்று பார்க்கலாம்.

இதில் இரண்டு புதிய விஷயங்கள் தூக்கலாக இருக்கின்றன. ஒன்று, விருப்பமில்லாத (காதலியை அல்ல…) மனைவியைக் காதலிக்கும் கணவன் என்கிற ஐட்டம். இன்னொன்று ரொமான்டிக்கில் இதுவரை பிலோ ஆவரேஜ் ஆக இருந்த விஜய் ஆண்டனியை இதில் முழு ரொமான்டிக் ஹீரோவாக… அதிலும் காமெடியாகக் காட்ட முயற்சித்து இருப்பது.

இதில் விஜய் ஆண்டனிக்கே கொஞ்சம் உற்சாகம் பிறந்திருக்க வேண்டும். பதின் பருவத்தில் ஒரு பிரளயத்தில் தங்கையை இழந்த சோகம் தவிர்த்து, வளர்ந்தவுடன் சம்பாதிக்க மலேசியா சென்று வாழ்க்கையை அணு அணுவாக ரசித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி. 

வீட்டில் திருமணம் செய்து கொள்ளக் கேட்டு அப்பா, அம்மா, மாமா என்று எல்லோரும் முயற்சிக்க, “எனக்கு இன்னும் ‘அது’ வரவில்லை…” என்று தட்டிக் கழிக்கிறார். ‘அது’ அவருக்கு எப்போது வரும் என்கிற தவிப்பில் குடும்பமே கவலையில் மூழ்கி விடுகிறது.

இந்தப் பக்கம் திருநெல்வேலியில் இருந்து சினிமாவில் நடிக்கும் வாய்ப்புக்காக சென்னை வந்து அலைந்து கொண்டிருக்கும் மிருணாளினி ரவி, ஊரில் ஆர்த்தடாக்ஸ் அப்பாவிடம் ஐடி வேலை செய்து கொண்டிருப்பதாக அண்டப்புளுகு புளுகிக் கொண்டிருக்கிறார். 

இந்நிலையில் மலேசியாவில் இருந்து விஜய் ஆண்டனியும், சென்னையில் இருந்து மிருணாளினியும் ஒரு துக்க நிகழ்ச்சிக்காக நெல்லை வர, மிருவைப் பார்த்த மாத்திரத்தில் விஜய் ஆண்டனிக்கு ‘அது’ வந்து விட, சாவு வீட்டில் ஒரு ஜாலிக் குத்து போடுகிறார்.

மகளின் புளுகு மூட்டை விஷயம் மிருவின் அப்பா தலைவாசல் விஜய்க்குத் தெரிந்து “அடுத்து உனக்கு கல்யாணம்தான்…” என்று முடிவு எடுக்கும் வேளையில் ஏற்கனவே அவர் கடன் பட்டிருக்கும் விஜய் ஆண்டனியின் குடும்பம் பெண் கேட்டு வர, ஆன் தி ஸ்பாட் மகளுக்கு அரெஞ்ஜுடு மேரேஜ் செய்து வைக்கிறார். 

ஆச்சா..? மனைவியை முழுதாய் காதலிக்கத் துடிக்கும் விஜய் ஆண்டனிக்கும், உள்ளே புகுந்து ஆட்டத்தைக் கெடுத்த காரணத்தால் விஜய் ஆண்டனி மேல் கடும் கோபத்தில் இருக்கும் மிருவுக்கும் என்ன மாதிரியாக கெமிஸ்ட்ரி இருந்திருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. அது எப்படி வேர் பிடித்து கிளைத்து, பூவாகப் பூத்தது என்பதுதான் முழுக் கதையும். 

விஜய் ஆண்டனியிடம் இவ்வளவு காமெடி கலாட்டாவும் காதலும் இருக்கிறதா என்று ஆச்சரியமாக இருக்கிறது. முதல் நாளே தன் மனைவிக்கு தன்னிடம் ஈடுபாடு இல்லை என்று தெரிந்து அதிர்ந்தாலும், அதை சட்டை செய்யாமல் “நான் என் பொண்டாட்டியை ஒன்சைடாகக் காதலிக்கப் போறேன்..!” என்று முடிவு எடுப்பதிலிருந்து ரொமான்ஸில் அவர் ஸ்கோர் செய்ய ஆரம்பித்து விடுகிறார். 

இங்கிருந்து மதுரைக்கு நேரடியாக போக முடியாத சூழலில் பாம்பே, கோவா எல்லாம் சுற்றி வந்து மதுரையை அடைவது போல் அருகில் இருக்கும் மனைவியை அடைய அவர் சுற்றி வளைத்து எடுக்கும் ஒரு உத்தி, பெரிய அளவில் கை கொடுக்கிறது. 

அந்த உத்தியில் பாறையாக இறுகி கிடந்த மிருணாளினியின் *துள்ளாத மனமும் துள்ளுகிறது*. 

கடைசியில் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி ஒன்று நடக்க, அந்த மகிழ்ச்சியைக் காட்ட முடியாத சூழலில் தள்ளிபோய் நின்று குமுறி அழுவதில் அடடே… ஆண்டனி..! இனிமேல் இவருக்கு நடிப்பு வராது என்று யாராவது சொல்வீர்கள்..?

இதுவரை பார்த்த மிருணாளினி, இந்தப் படத்தில் சான்சே இல்லாமல் ஐந்தரை அடி குதுப்மினாராக குதிர்ந்து நிற்கிறார். நடிப்பிலும் நான்கு கால் பாய்ச்சல் காட்டி இருக்கிறார். தமிழில் ஒரு பெரிய ரவுண்டு வருவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது மிருவுக்கு. 

அவரது நண்பர்களாக ஷாரா உள்ளிட்ட சினிமா தோஸ்த்துகள் வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பானவை என்றால், மிருவுக்கு விஜய் ஆண்டனியுடன் முதலிரவு கூட நடக்க விடாத அளவுக்கு இவர்கள் உள்ளே புகுந்து செய்யும் அலப்பறையும் தொடர்ந்த காட்சிகளில் இவர்களை விஜய் ஆண்டனி வழக்கு கொண்டு வருவதும் லகலகப்பானவை.

போதாக்குறைக்கு விஜய் ஆண்டனிக்கு லவ்ஸ் ஐடியா கொடுக்கும் குருவாக யோகி பாபு வந்து காமெடி கதகதப்பைக் கூட்டுகிறார்.

ஹஸ்கி வாய்ஸ் விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய், ஸ்ரீஜா ரவி, சுதா உள்ளிட்டோர் பிற வேடங்களில் ஃபிட் ஆகப் பொருந்துகிறார்கள்.

பரூக் ஜே.பாட்ஷாவின் ஒளிப்பதிவும், பரத் தனசேகரின் இசையும் படத்தின் தரத்தை பாலிவுட் பட லெவலுக்கு உயர்த்தி இருக்கின்றன. 

இசை உண்மையிலேயே வேற லெவல். 

சட்டென திருமணம் முடிவாகி விட, எதிர்காலக் கனவு இருண்டு போன நிலையில் கல்லாகிச் சமைந்து போய் மிருணாளினி அமர்ந்திருப்பதைச் சொல்ல நினைத்த இயக்குனரின் கற்பனையை, இரவு பகல்கள் மாறி மாறி வருவதை ஒளி அமைப்பில் மட்டும் உணர்த்தி, ஒரே ரவுண்டு ட்ராலி ஷாட்டில் காட்டி இருக்கும் ஒளிப்பதிவாளரின் திறமை ‘வாவ்..!’

இருந்தும் சில க்ளிஷே காட்சிகளை தவிர்த்து இருக்க முடியும்.

எதிர்காலத்துக்காக ஏங்கும் மிருணாளினி மற்றும் நண்பர்கள் ஏதோ சாதிக்கத் துடிப்பவர்களாக பில்டப் கொடுத்து விட்டு… அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது எடுக்கும் படம் அரதப்பழசான கதையைக் கொண்ட மொக்கை மசாலாப் படமாக இருக்கிறது. அந்த குரூப்பே சினிமாவுக்கு அன்ஃபிட் ஆகத் தோன்றுகிறது.

கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தும் கிளைமாக்ஸ் இழுத்துக் கொண்டே போவதும் பலவீனம். 

ஆனாலும் இதெல்லாம் தாண்டி ஜாலியாக ஒரு படம் பார்க்க நினைத்தால் அதற்கு முதல் தேர்வாக இருக்கிறது இந்தப் படம். 

ரோமியோ – ரொமான்ஸ்தான் சாமியோ..!

– வேணுஜி