திருடர்கள் இரவில் மட்டுமே இயங்குவார்கள். ஆனால் வழிப்பறிக் கொள்ளையர்கள்..? எல்லா நேரத்திலும் நகரில் உலவிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வப்போது வீடியோக்களில் வரும் நகை பறிப்பு சம்பவங்களைப் பார்த்தால் நெஞ்சு கொதிக்கிறது.
இதை அடிப்படையாக வைத்தே இந்தப் படத்தின் கதை மற்றும் திரைக் கதையை எழுதியிருக்கிறார் மெட்ரோ ஆனந்த கிருஷ்ணன்.
இப்படியான கொள்ளையர்கள் யாரும் பசிக்காக திருடுவது இல்லை – பகட்டான வாழ்க்கைக்காகவே இந்தக் குற்றச் செயலில் ஈடுபடுகிறார்கள் என்பதுதான் இதில் சுடும் நிஜம்.
இப்படிப்பட்ட நகை பறிப்புச் சம்பவங்களில் பெண்கள் உயிரை விடுவதும் நெஞ்சைப் பதை பதைக்க வைத்து விடுகிறது. அப்படியான சம்பவங்களின் தொகுப்பில் அமைந்த ஆய்வுதான் இந்தப் படம்.
எல்லோரையும் போல் படித்து முடித்து நல்ல வேலைக்குப் போக வேண்டும் என்கிற எண்ணத்தில் சென்னைக்கு வருகிறார் நாயகன் ‘ மெட்ரோ ‘ சத்யா. வந்த இடத்தில் கால் சென்டரில் வேலை கிடைக்க, மேல் வரும்படிக்காகவும் ஃபீமேல் மீதான மோகத்தை தீர்த்துக் கொள்வதற்காகவும் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட ஆரம்பித்து… அது அவரை எங்கே கொண்டு போய் விடுகிறது என்பதுதான் முழுக்கதை.
இந்த கதையை அப்படியே ராவாக சொல்லாமல், புதிதாக சிறைக்கு வரும் இருவரிடம் அங்கே ஏற்கனவே கைதியாக இருக்கும் சென்ராயன் சொல்வதாக அமைந்திருப்பது விறுவிறுப்பைத் தருகிறது.
சத்யாவின் அறிமுகமும், அவர் கொஞ்சம் கொஞ்சமாக எப்படி கொள்ளை தொழிலுக்குள் வருகிறார் என்கிற விவரணையும், அதில் ஊறிப் போய் எந்த அளவுக்கு மனசாட்சி இல்லாதவராக மாறுகிறார் என்பதையும் இயக்குனர் எஸ்.எம்.பாண்டி அருமையாகச் சொல்லி இருக்கிறார்.
ஏற்கனவே மெட்ரோ படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் இதில் முழு நாயகனாகி இருக்கும் சத்யா நம்பிக்கை தரும் நாயகனாகி இருக்கிறார். இயல்பான நடிப்பு அவருக்கு பிளஸ் ஆகி இருக்கிறது. பெரும்பாலான காட்சிகள் அவர் முகத்தை மறைத்தபடி வர நேர்வதுதான் கொஞ்சம் மைனஸ்.
சத்யாவின் தாயாக வரும் தீபாசங்கர் இதில் ஏற்றிருக்கும் பாத்திரம் முக்கியமானது. மகன் மீது பாசத்தைக் கொட்டும் அவரது அன்பு ஒருபுறமும், ஆனால் அதற்கு தகுதி இல்லாமல் சத்யா வாழ்ந்து கொண்டிருப்பதும், இந்த உண்மை அந்தத் தாய்க்கு எப்போது தெரியுமோ என்று நம்மைப் பதற வைக்கிறது.
இறுதியில் தீபாசங்கர் எடுக்கும் முடிவு மிகக் கனமானது.
மகளைப் பறிகொடுத்து, கையறு நிலையில் இருக்கும் தந்தையாக ஜெயப் பிரகாஷ் அற்புதமாக நடித்திருக்கிறார். மகள் மறைவுச் செய்தி கேட்டு இறுகிப்போகும் அவர் ஒரு காட்சியில் உடைந்து கதறுவது நெகிழ்ச்சி.
சென்ராயன் நடிப்பு பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால், டேனி போப் இப்படி ஒரு சீரியசான வருடத்தில் வந்து பயமுறுத்துவார் என்பது நாம் சற்றும் எதிர்பார்க்காதது.
என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவில் கேமரா சென்னை நகர் எங்கும் ஓடி இருக்கிறது. கொல்லப்படும் இளம் பெண் ஸ்கூட்டரில் இருந்து பறக்கும் காட்சியை அற்புதமாகப் படமாக்கி இருக்கிறார்.
ஜோகன் சிவனேஷ் இசை படத்தின் தன்மை புரிந்து பயணப்பட்டு இருக்கிறது. அதிலும் அந்தோணி தாசன் இடம்பெறும் பாடல் செரி குத்து.
தொடங்கும் படத்தை முடிவடையும் வரை எந்த இடத்திலும் தொய்வில்லாமல் கொண்டு சென்று இருக்கிறார் எடிட்டர் ஸ்ரீகாந்த் NB.
ஒரு குடும்பத்தின் அத்தனை பேரும்… குறிப்பாக பெண்கள் பார்த்தே ஆக வேண்டிய இந்தப் படத்தை பெண் தயாரிப்பாளர் எஸ்.கவிதா தயாரித்திருப்பதும் சிறப்பு.
யோசித்துப் பார்த்தால் முகம் தெரிந்த எந்த கதாநாயகிகளும் படத்தில் இல்லை. ஆனால் அது ஒரு குறையாகத் தெரியாத அளவுக்கு… இருக்கும் நடிகர்களை வைத்து விறுவிறுப்பான ஒரு படத்தைத் தந்திருக்கும் எஸ்.எம்.பாண்டிக்கு நல்வாழ்த்துக்கள்.
பெண்களும், குழந்தைகளும் அவசியம் பார்க்க வேண்டிய படம் மட்டுமல்ல… கற்க வேண்டிய பாடமும் கூட…
ராபர் – எச்சரிக்கை மணி..!
– வேணுஜி