March 24, 2025
  • March 24, 2025
Breaking News
March 14, 2025

மாடன் கொடை விழா திரைப்பட விமர்சனம்

By 0 193 Views

மண்ணின் மணத்தைக் கொண்டு இருக்கும் கிராமத்துக் கதைகள் எப்போதுமே அனுபவங்களின் அடிப்படையில் அமைந்திருக்கும். அந்த வகையில் இந்தப் படமும் கிராமத்துக்.காவல் தெய்வம் சுடலை மாடன் குறித்த நம்பிக்கையில் விளைந்திருக்கிறது.

நாயகன் கோகுல் கவுதம் குடும்பத்துக்கு சொந்தமான நிலத்தில் அமைந்துள்ள சுடலைமாடனுக்கு வருடம் தோறும் திருவிழா நடக்க, அதைப் பரம்பரை பரம்பரையாக அவர்கள் குடும்பமே எடுக்கிறது.

ஆனால், ஒரு வருடம் அங்கு கூத்துக் கட்டும் திருநங்கை ஒருத்தி இறந்து போக, அதிலிருந்து அந்தத் திருவிழா நின்று போகிறது. அத்துடன் கோகுலின் தந்தையும் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட, இந்தக் காரணங்களால் தொடர்ந்து பல வருடங்கள் திருவிழா நடக்காமல் போக, கோகுலும் வேலைக்காக கிராமத்தை விட்டு சென்னைக்குப் போகிறார்.

சில வருடங்கள் கழித்து திருவிழாவை நடத்த கோகுலைத் தேடி அவரது சித்தப்பா வருகிறார். ஆனால், அந்த நிலத்தை பணத்துக்காக ஒரு பணக்காராரிடம் அப்பா எழுதிக் கொடுத்திருக்க, அந்த நிலத்தைத் திருப்பிக் கொடுக்கும் எண்ணம் அந்தப் பணக்காரனுக்கு இல்லை என்று தெரிகிறது. கடைசியில் நிலம் திருப்பப் பட்டதா, மாடன் கொடை விழா நடந்ததா என்பது மீதிக் கதை.

இதை சினிமாவின் எந்த வணிக சமரசமும் செய்து கொள்ளாமல் சிறிய முதலீட்டில் இயல்பாக எடுத்து இருக்கிறார் இயக்குநர் இரா.தங்கபாண்டி.

நாயகனாக அறிமுகமாகியிருக்கும் கோகுல் கவுதம், எந்த ஹீரோயிசமும் இல்லாமல் இயல்பாக நடித்திருப்பது இந்தப் படத்தின் தன்மைக்குப் பொருத்தமாக இருக்கிறது. சுடலை மாடன் சாமி அவர் மீது ஏறும் காட்சியில் இயன்றவரை நன்றாக சாமியாடி இருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ஷர்மிஷா, சுட்டிப் பெண்ணாக வந்தாலும் தெளிவான பெண்ணாக இருப்பதும், அவரது நடிப்பும் நன்று.

நாயகனின் தந்தையாக வரும் சூப்பர் குட் சுப்பிரமணியம் அப்படியே அப்பாவி கிராமத்தான் பாத்திரமாக மாறி இருக்கிறார். கிறிஸ்தவராக மாறியதற்கு அவர் சொல்லும் காரணமும் மறுப்பதற்கு இல்லை.

அம்மாவாக நடித்திருக்கும் ஸ்ரீப்ரியாவும் அப்படியே.

வில்லனாக நடித்திருக்கும் டாக்டர் சூர்ய நாராயணனை இந்தப் படத்தில் கிராமத்து வேடத்தில் பார்ப்பது புதிதாக இருக்கிறது.

கோகுலின் சித்தப்பா வேடத்தில் நடித்திருக்கும் சிவவேலன் மற்றும் பால்ராஜ், மாரியப்பன், ரஷ்மிதா என அனைவரும் அறிமுகங்கள்தான். ஆனால், அறிந்த முகங்களை விட நன்றாக பங்களித்திருக்கிறார்கள்.

விபின். ஆர் இசையில் பாடல்களும், சாமியாடும் கிராமத்துப் பின்னணி இசையும் சிறப்பு.

சின்ராஜ் ராமின் ஒளிப்பதிவு, அந்தக் கிராமத்தில் பயணித்த உணர்வை ஏற்படுத்துகிறது.

கிராமத்து நம்பிக்கைகள் கொண்ட படமாக இருந்தாலும் வசனங்களில் புரட்சிக் கருத்துகளுடன் எழுதி இருக்கிறார் நெய்வேலி பாரதி குமார், 

படத்தின் மையப் புள்ளியக வரும் அந்த திருநங்கை அற்புதத் தேர்வு. கிளைமாக்சில் அவர் போட்டிருக்கும் ஆட்டம் அபாரம்.

மாடன் கொடை விழா – மாடர்ன் படங்களுக்கு சவால்..!

– வேணுஜி