October 30, 2024
  • October 30, 2024
Breaking News
April 14, 2023

ரிப்பப்பரி திரைப்பட விமர்சனம்

By 0 341 Views

இரண்டு தடவையாவது படித்தால்தான் இந்த படத்தின் தலைப்பைப் படிக்கவே முடியும்- அதற்குப்பின்தான் அதைப் புரிந்து கொள்வது. ஒரு ஜாலியான படம் என்று வேண்டுமானால் இதற்கு பொருள் கொள்ளலாம்.

தமிழில் சமையலுக்கான யூடியூப் சேனல் நடத்தும் மாஸ்டர் மகேந்திரனும் நண்பர்களும் ஊருக்குள் செய்யும் லூட்டியில் ஆரம்பிக்கிறது படம். அந்த youtube மூலம் ஒரு ரசிகை கிடைக்க அவளையே காதலிக்க ஆரம்பிக்கிறார் மகேந்திரன்.

இன்னொரு பக்கம் மகேந்திரனின் நண்பர் ஒருவர் காதல் திருமணம் செய்து கொண்டு ஊரிலிருந்து வர, அங்கே அவர் ஒரு பேயினால் கொல்லப்படுகிறார். அதைப்பற்றி விசாரிக்க போகும்போது அது சாதி வெறிபிடித்த பேய் எனவும் சாதி மாற்றி கல்யாணம் செய்து கொள்பவர்களைக் கொன்றுவிடும் என்று தெரிகிறது.

அந்தப் பேய் பற்றி துப்பறியும் இன்ஸ்பெக்டர், மகேந்திரனையும் நண்பர்களையும் அணுகி அந்த வேலையைக் கொடுக்கிறார். மகேந்திரனின் காதலியின் ஊரும் அந்த பேய் வசிக்கும் ஊரும் ஒன்றாக இருக்க அதற்காகவே அந்தப் பணியை ஏற்றுக் கொள்கிறார் மகேந்திரன்.

அங்கே போனபிறகு தான் தெரிகிறது அந்த பேயின் லிஸ்டில் அடுத்து இருக்கிறார் மகேந்திரன் என்பது. நண்பர்கள் பேயைப் பிடித்தார்களா… மகேந்திரனின் காதல் என்ன ஆனது… சாதிப்பேயின் பின்புலம் என்ன என்பதெல்லாம் இரண்டாவது பாதியில் சொல்லப்பட்டு படம் முடிகிறது.

சின்னக் குழந்தையில் எப்படி நடித்தாரோ அதே ரேஞ்சில் இன்னும் நடித்துக் கொண்டிருக்கிறார் மாஸ்டர் மகேந்திரன். மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் நடித்ததால் விஜய்யின் ரசிகர்களையும் கவர்ந்து விட வேண்டும் என்று விஜய் போலவே சில இடங்களில் மேனரிசம் செய்து, விஜய் பாடிய ஒரு பாடலையும் பாடி ரசிகர்களிடம் கைதட்டல் பெறுகிறார்.

இந்தப் படத்தில் மகேந்திரனுடன் நடிகர் நோபிள் ஜேம்ஸ், நடிகர் ஶ்ரீனி, நடிகை காவ்யா, நடிகை ஆரத்தி பொடி, மாரி ஆகியோர் நடித்துள்ளனர்.  

முதல் பாதியில் மட்டுமே மகேந்திரனுக்கு வேலை இருக்கிறது. இரண்டாவது பாதி முழுமையும் பேயாக வரும் அவரது காதலியின் அண்ணனே எடுத்துக் கொள்கிறார். அவரது கதை, அவருக்கும் பிளாஷ் பேக், அதிலும் ஒரு காதல் என்று அவர் மேலேயே கதை செல்ல, கிளைமாக்சில் மட்டும் மீண்டும் மகேந்திரன் வருகிறார்.

காமெடியாக தொடங்கி, ஒரு கட்டத்தில் ஹாரர் படம் போல் ஆகும் திரைக்கதை மீண்டும் நகைச்சுவைப் படமாக மாறுகிறது. பேய்க்கு எழுதப் படிக்க தெரியாது என்பது நல்ல நகைச்சுவை. அதனாலேயே அது எழுதும் விஷயங்களை எல்லாம் மற்றவர்கள் புரிந்து கொள்வது பெரும் போராட்டமாகவும், நமக்கு சிரிப்பாகவும் இருக்கிறது.

ஒரு கட்டத்தில் “சரி…” என்பதற்கு “சாரி..!” என்று எழுதுகிறது. இப்படி தப்பு தப்பாக எழுதும் பேயை இப்போதுதான் தமிழ் சினிமா முதல் முறையாகப் பார்க்கிறது.

மகேந்திரனுக்கு போட்டி காதலனாக வரும் நபரும் நம்மை அதிகம் சிரிக்க வைக்கிறார்.

ஒளிப்பதிவாளர் தளபதி ரத்தினம் தன்னால் முடிந்த அளவில் தன் பணியை சிறப்பாக செய்திருக்கிறார். இசையமைப்பாளர் துவாரகா தியாகராஜின் இசையும் ஓகேதான்.

தானே தயாரித்து இயக்கி இருக்கும் நா. அருண் கார்த்திக்கை இந்த தைரியத்திற்காகவே பாராட்டலாம். ஆனால் திரைக்கதையில் இன்னும் விறுவிறுப்பு கூட்டி இருக்கலாம்.

ரசிகர்களுக்கு பேய் பிடிக்கிறதோ இல்லையோ இந்த பேயைப் பிடித்து விட்டால் இயக்குனரின் முயற்சி வெற்றி பெறும்.

ரிப்பப்பரி – சிந்தித்து சிரி..!