December 12, 2024
  • December 12, 2024
Breaking News
April 15, 2023

சொப்பன சுந்தரி திரைப்பட விமர்சனம்

By 0 521 Views

இந்தத் தலைப்பைக் கேட்டவுடனேயே கரகாட்டக்காரன் கவுண்டமணி – செந்தில் காமெடி நினைவுக்கு வந்து விடும். அதேபோல் இது ஒரு காமெடிப் படம் என்பதும் புரிந்து விடும்.

ஆனாலும் ஒரு மெசேஜுடன் இந்த காமெடிப் படத்தை சொல்லி இருப்பதால் இந்தப் பட இயக்குனர் எஸ்.ஜி.சார்லஸ்க்கு பாராட்டுகளைத் தெரிவிக்கலாம்.

அது என்ன மெசேஜ்..?

“நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும்“ என்ற குறள் சொல்லும் விளக்கமான “பிறருடைய பொருளைத் தன்னுடையதாக்க நினைத்தால் அது குற்றச் செயலாகத்தான் முடியும்…” என்ற கருத்து காமெடியான இந்தக் கதையின் மூலம் கடத்தப் பட்டிருக்கிறது.

தமிழ் சினிமாவில் எப்படி நயன்தாரா ஒரு ஹீரோவை எதிர்பார்க்காமல் நாயகி மட்டுமே தாங்கிச் செல்லும் கதைகளில் நடிப்பதை மேற்கொள்கிறாரோ அதைப் போல ஐஸ்வர்யா ராஜேஷும் அப்படியான வேடங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பது பாராட்டுக்குரியது.

‘டிரைவர் ஜமுனா’, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ்தான் முதன்மைப் பாத்திரம் ஏற்று இருக்கிறார்.

குடிப்பழக்கத்தால் கை கால்கள் முடங்கிப் போய் படுக்கையில் சரிந்து விட்ட தந்தை, வாயாடும் அப்பாவித் தாய், வாய் பேச முடியாத அக்கா, பொறுப்பில்லாத அண்ணன் என்று சிக்கலான குடும்ப அமைப்பில் ஏழைப் பெண்ணாக வாழ்ந்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், நகரத்தின் நகைக்கடை ஒன்றில் ஊழியராக வேலை பார்க்கிறார்.

அவரது பொறுப்பில்லாத அண்ணன் கருணாகரன் கார் டிரைவராக இருப்பதுடன் காரில் பயணம் செய்யும் பணக்காரர்களுக்கு தங்கையின் சலுகையை வைத்து நகைகளை குறைந்த விலைக்கு வாங்கித்தந்து கமிஷன் பெறுபவராக இருக்கிறார். 

இந்நிலையில் சகோதரிகளைப் பற்றி கவலைப்படாத கருணாகரன் தான் காதலித்த பெண்ணையே மணந்து கொண்டு குடும்பத்தை விட்டு பிரிந்து வாழும் சூழலில் ஒரு பணக்காரருக்கு நகை வாங்கி கொடுக்கப் போய் அதற்குக் கிடைக்கும் பரிசுக் கூப்பனை ஐஸ்வர்யா ராஜேஷ் முகத்தில் ஏளனமாக வீசிவிட்டுப் போகிறார்.

அதை நிரப்பி பரிசுப் போட்டியில் கலந்து கொள்ளும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு முதல் பரிசாக 10 லட்சம் மதிப்புள்ள கார் விழுகிறது. அதை விற்று தன் வாய் பேச முடியாத அக்காவின் திருமணத்தை நடத்திவிட ஐஸ்வர்யா ராஜேஷ் நினைக்கிறார்.

ஆனால், தான் வாங்கிக் கொடுத்த நகைக்குப் பரிசு கிடைத்ததால் அந்தக் கார் தனக்கே சேர வேண்டும் என்று கருணாகரன் படை திரட்ட, இந்த பிரச்சனை சென்று சேரும் இடமான காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருக்கும் சுனில் ரெட்டிக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் மீது ஒரு கண் இருக்க… இந்தப் பிரச்சனைகள் எப்படி போய் முடிகின்றன என்பதுதான் கிளைமாக்ஸ்.

மிடில் கிளாஸ் மற்றும் ஏழை குடும்பத்து பாத்திரங்கள் என்றால் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தண்ணீர் பட்ட பாடு. சர்வ சாதாரணமாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தி அந்த பாத்திரத்துக்கு வலு சேர்க்கிறார். அதே நேரத்தில் தன் மீது கண் வைக்கும் சுனில் ரெட்டியிடமிருந்து தன்னை பாதுகாக்க அவர் போராடுவதும் இந்த சமூகத்தின் சராசரி பெண்களின் நிலைமைக்கு எடுத்துக் காட்டு.

ஐஸ்வர்யாவின் வாய் பேச முடியாத அக்காவாக வரும் லக்ஷ்மி பிரியா சந்திரமௌலியும், ஷாராவுடனான அவர் காதலும், பரிசுக் காரை அவர்கள் ஓட்டப் போய் நேரும் ஆபத்தும் விறுவிறுப்பானவை.

எல்லோரையும் நடிப்பில் பின்னுக்குத் தள்ளி விடுகிறார் ஐஸ்வர்யாவின் அம்மாவாக வரும் தீபா சங்கர். அப்பாவியாக வரும் அவரது நடிப்பும், எப்போது அவர் ரகசியங்களை வெளியில் கொட்டி விடுவாரோ என்கிற பதை பதைப்பும் பரிதவிப்பை ஏற்படுத்தி விடுகின்றது.

சுயநலக்கார அண்ணனாக வரும் கருணாகரனின் நடிப்பும் பொருத்தம். அவரது மச்சானாக வரும் மைம் கோபியின் நடிப்பும் நன்று.

அதேபோல் படத்தின் வில்லனாக வரும் சுனில் ரெட்டி பார்வையிலேயே காமத்தை வீசி ஷோக்கு பேர்வழியாக அடையாளம் பதிக்கிறார். 

ஒரு சில காட்சிகளில் வரும் கிங்ஸ்லி ரெடின் சிரிக்க வைக்கிறார். 

காரை அடைய ஒவ்வொருவர் போடும் திட்டங்களும் அவையெல்லாம் எப்படி சொதப்புகிறது என்பதும் ரசிக்க வைக்கும் உ யுத்தியாக இருந்தாலும் அங்கங்கே திரைக்கதை பின்னடைவை சந்திக்கிறது.

இசையமைப்பை எப்படி விஷால் சந்திரசேகர் மற்றும் அஜ்மல் தசின் என்று இருவர் ஏற்று இருக்கின்றார்களோ, அதேபோல் ஒளிப்பதிவையும் பாலமுருகன், விக்னேஷ் ராஜகோபாலன் என்ற இருவர் ஏற்றிருக்கின்றனர். 

திரைக்கதையை கொஞ்சம் செப்பனிட்டு இருந்தால் மறக்க முடியாத நகைச்சுவைப் படமாக இந்தப் படம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கும்.

சொப்பன சுந்தரி – காரை இப்ப யார் வச்சிருக்கா..?