November 28, 2025
  • November 28, 2025
Breaking News
  • Home
  • Uncategorized
  • ரஜினி கேங் திரைப்பட விமர்சனம்
November 27, 2025

ரஜினி கேங் திரைப்பட விமர்சனம்

By 0 73 Views

ஆவிகள் பழி வாங்குவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் கழுத்தில் கட்டிய தாலியை வைத்துக்கொண்டு அந்த தாலி கட்டியவனை ஒரு ஆவி பழிவாங்கத் துடிப்பது புதுக்கதை. 

நாயகன் ரஜினி கிஷனுக்கு வழிப் பயணத்தில் துணையாகிறார்கள். முனிஷ்காந்தும், கல்கி யும். கூடவே நாயகி த்விவிகா மீது ரஜினி கிஷனுக்கு காதலும் வருகிறது. 

கூல் சுரேஷின் முறைப் பெண்தான் த்விவிகா என்பது ஒரு புறம் இருக்க, திருடனான கல்கி திருடி வைத்திருக்கும் தாலியை வைத்து த்விவிகாவை மணமுடிக்கிறார் ரஜினி கிஷன். அங்கே ஆரம்பிக்கிறது பிரச்சனை.

முதலிரவுக்கு பாட்டு பாடி கிளுகிளுப்பு கிளம்பும் நேரத்தில் த்விவிகா கட்டியிருக்கும் தாலியில் குடி கொண்டிருக்கும் ஆவி கிளம்பி விடுகிறது.

“இந்தத் தாலியை கட்டியவன் எவன்டா..?” என்று துரத்தித் துரத்தித் தேட ஆரம்பிக்கிறது. 

பிறகுதான் தெரிகிறது கல்கி திருடிய தாலி ஒரு இறந்து போன பெண்ணுக்கு சொந்தமாக இருந்து அதில் அந்த பெண் ஆவியாக குடியேறி விட இப்போது அதை த்விவிகா கட்டி இருப்பதால் ஆவி அவர் மேல் இறங்கி விடுகிறது. 

ஆவி தேடிய கணவன் கிடைத்தானா, த்விவிகாவைப் பிடித்த ஆவி இறங்கி ரஜினி கிஷனுடன் அவர் சேர்ந்தாரா என்பது மீதிக் கதை.

நாயகன் சரியான ரஜினி ரசிகர் போல் இருக்கிறது. படத் தயாரிப்பாளர்களில் ஒருவராக இருப்பதால் தலைப்பில் மட்டுமல்லாமல் தன்னுடைய பெயரைக் கூட ரஜினி கிஷன் என்றே வைத்திருக்க, ஆனால் ரஜினியை இமிடேட் செய்யாத அளவில் தனக்கு இயன்ற பாணியில் நடிக்கிறார்.

இரண்டாவது பாதிப் படம் முழுவதையும் த்விவிகா ஆக்கிரமிப்பதில் கதாநாயகிக்கு உரிய முக்கியத்துவமும் கிடைத்து விடுகிறது. 

படம் முழுவதும் பேய்த்தனமான காமெடி இருக்க வேண்டும் என்று முடிவு செய்து இயக்குனர் ரமேஷ் பாரதி எழுதியிருப்பதில் பேய் வந்த பிறகுதான் சிரிக்கக் கூடிய அளவில் காமெடியே வருகிறது.

முனிஷ்காந்தும், கல்கியும் செய்யும் அலப்பறைகளைவிட மொட்ட ராஜேந்திரன் ரொம்ப நாள் கழித்து இந்தப் படத்தில் கலக்கி இருக்கிறார். இசையால் அவர் பேய்களை மயக்குவது புதிய ஐட்டம். அப்படி மயக்கிய ஆவிகளை சாந்தி அடைய வைத்து பாதுகாப்பதும் புது ஐட்டம்தான்.

ஆவி சம்பந்தப்பட்ட கதையாக ஆனால் படத்தின் பெரும் பகுதி இரவிலேயே நிகழ அதற்கான ஒளி அமைப்பில் தன் திறமையை காட்டுகிறார் ஒளிப்பதிவாளர் என்.எஸ். சதீஷ்குமார். 

இசையமைப்பாளர் எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட் தன் சிக்னேச்சர் ஆக போட்டிருக்கும் அந்த ‘ பேய் குத்து’ ரசிக்க வைக்கிறது.

தன் வாழ்க்கையை நாசம் செய்ததாக நான்கு பேரை தேடிக் கொண்டிருக்கும் ஆவியின் கையில் அந்த நான்கு பேரும் கிடைத்துவிட அவர்கள் என்ன பாடுபட போகிறார்கள் என்று பார்த்தால், அவர்கள் அந்தப் பெண்ணை பற்றி சொல்லும் கதை அதைவிட பரிதாபமாக  இருக்கிறது. 

ரஜினி கேங் – ஆவியின் தாலி சென்டிமென்ட்..!

– வேணுஜி