November 21, 2024
  • November 21, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • தையல் நாயகி ஆகிறார் த்ரிஷா – ராங்கி பட சுவாரஸ்யங்கள்
December 19, 2022

தையல் நாயகி ஆகிறார் த்ரிஷா – ராங்கி பட சுவாரஸ்யங்கள்

By 0 312 Views

த்ரிஷா சமீபத்தில்தான் ‘லைகா புரொடக்‌ஷன்ஸ்’  தயாரிப்பில் மணிரத்தினம் இயக்கி  வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை பாத்திரத்தில் வந்து கலக்கி இருந்தார். 

இப்போது அதே ‘லைகா’ தயாரிப்பில் அவர் கதை நாயகியாக நடிக்கும் ராங்கி படம் வரும் 30ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் கதை எழுதியுள்ள இந்தப் படத்தை ‘எங்கேயும் எப்போதும்’ சரவணன் இயக்கி இருக்கிறார். த்ரிஷாவுடன் அனஸ்வரா ராஜன், ஜான்மகேந்திரன் உட்பட கலைஞர்கள் நடித்துள்ள இந்தப்படத்துக்கு சி.சத்யா இசையமைத்திருக்கிறார். கபிலன் பாடல்கள் எழுதியிருக்கிறார்.

 

இந்நிலையில் இயக்குனர் சரவணன் ராங்கி படம் குறித்து நம்முடன் பேசினார்.

“முருகதாஸ் சார் ஒற்றை வரியில் என்னிடம் சொன்ன கதைதான் ‘ராங்கி’யாக உருவெடுத்துள்ளது. அவர் காதலை மையப்படுத்தி சொன்ன கதையில் அரசியலை கலந்திருக்கிறேன்.

இப்படத்தில் த்ரிஷா, ஜர்னலிஸ்ட்டாக நடித்திருக்கிறார். கடத்தப்பட்ட அவருடைய அக்கா மகளை மீட்கப் போராடுகிறார். ஒருகட்டத்தில் அந்த உள்ளூர் சிக்கல் வெறொரு பரிணாமம் எடுத்து உலக அளவிலான சிக்களின் வேராக  உருவெடுக்க, அதை த்ரிஷா எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் படம்.

கதைக்கான விவாதம் நடந்த போதெல்லாம் மற்ற அனைவரையும் விட த்ரிஷாதான் சரியாக இருப்பார் என்ற பேச்சு அடிக்கடி வரவே அவரையே நாயகியாக்கினோம். அதற்கேற்ப த்ரிஷா தனது முழு ஒத்துழைப்பைக் கொடுத்து நடித்திருக்கிறார்.

லிபியா – அமெரிக்கா சம்பந்தப்பட்ட கதையாக எழுதப் பட்டதால் அங்கே சென்று படம் எடுக்க முடியாது என்பதால் அதை போன்ற லொகேஷன் கொண்ட உஸ்பெக்கிஸ்தான் போய் படம் எடுத்தோம்.

இந்தப்படம் 2020 இலேயே வெளியாகி இருக்க சாத்தியம் இருந்தது. தணிக்கைச் சான்று பெறுவதில் தாமதமானதால் வெளியீடும் தாமதமாகிப் போனது. அதற்குக் காரணம், இந்தப் படத்தில் அமெரிக்கா, லிபியா ஆகிய நாடுகள் கதையில் இடம்பெற்றிருந்தன. அவற்றோடு, அமெரிக்காவின் எஃப் பி ஐ நிறுவனம், இந்தியாவின் ரா நிறுவனம் ஆகியன பற்றிய காட்சிகள் இருந்தன.

இவற்றையெல்லாம் நீக்க வேண்டும் என்று தணிக்கையில் கூறினார்கள். அதனால் பல காட்சிகளை அமைதிப்படுத்திவிட்டோம். ஆனாலும் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு அது தடையாக இருக்காது.

ராங்கி என்றால் திமிர்பிடித்தவள் என்று சொல்வார்கள். தனக்குச் சரியெனப்பட்டதைச் செய்பவர்களை இப்படிச் சொல்வார்கள். இந்தப்படத்தில் த்ரிஷாவின் பாத்திரம் அப்படிப்பட்டதுதான்.அதனால் இந்தப் பெயரை வைத்திருக்கிறோம். 

அதற்காக படத்தில் அவரது பெயரே ராங்கி என்று நினைத்து விட வேண்டாம். படத்துக்குள் அவரது பெயர் ‘தையல் நாயகி..!”

கடந்த 20 ஆண்டு கால திரைப் பயணத்தை சமீபத்தில் த்ரிஷா நிறைவு செய்துள்ள நிலையில், தற்போது ஆக்சன் ரோலில் அவர் கலக்கியுள்ள ‘ராங்கி’, அவருக்கு மட்டுமில்லாமல் இயக்குனர் சரவணனுக்கும் லைக்காவுக்கும் அடுத்த வெற்றிகளை உறுதி செய்யும் என்று நம்பலாம்.