சமூகத்தால் மற்றும் குடும்பத்தால் வஞ்சிக்கப்பட்டவர்களும் வாழ்ந்துதானே ஆக வேண்டும்..? எனில் அவர்களது வாழ்க்கை எப்படி இருக்கும்..? என்பதை தன்னால் முடிந்த அளவுக்கு இயல்பாக சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் ராசா விக்ரம்.
பெரும்பாலும் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கை நாம் அதிகம் அறியாததுதான். இப்படியும் நடக்குமா என்ற கேள்வி அவர்களது வாழ்க்கையைப் பற்றிக் கேட்க நேரும்போது நமக்கு ஏற்படுவது இயல்புதான்.
அப்படி கதையின் நாயகனாக வரும் விக்னேஷ், சிறிய வயதிலேயே சுயநலம் கொண்ட தாயால் புறக்கணிக்கப்பட்டு குப்பை மேட்டிலேயே வளர்கிறார். அந்தக் குப்பைமேட்டில் அவருக்கு ஆதரவாக நிற்கும் ஒரே துணை இரு கால்களும் இழந்த ரமேஷ்தான்.
இவர்களைப் போன்று வஞ்சிக்கப்பட்ட வேறு சில சிறுவர் சிறுமியரும் இவர்களுடன் குப்பை பொறுக்கும் தொழிலை மேற்கொண்டு இருக்கிறார்கள். குப்பையில் கிடைக்கும் காகிதம், இரும்பு, மாத்திரைகள் முதலானவைதான் அவர்களுக்கு சம்பளம் பெற்றுத் தரும் தொழிற்கருவிகளாக இருக்கின்றன.
வளர்ந்து வாலிப பருவம் அடையும் இருவரும் நண்பர்களாகவே தொடர, தங்களுடன் வளரும் வருணிகா மீது விக்னேஷ் காதல் கொள்ள வருணிகாவோ குப்பை லாரி ஓட்டும் டிரைவரைக் காதலிக்கிறார்.
இதற்கிடையில் இவர்களிடம் குப்பையில் பிரித்தெடுத்த பொருள்களை வாங்கும் வியாபாரியாக இமான் அண்ணாச்சி இருக்க, பின்னாளில் அவர் குப்பையில் கிடைக்கும் மருந்து மாத்திரைகளை புதியது போல் மாற்றி புதிய வியாபாரம் தொடங்கி கோடிக்கணக்கில் சம்பாதிக்க ஆரம்பித்து விடுகிறார்.
குப்பையில் உழலும் இளைஞர்களின் நேர்மையான வாழ்க்கையும், கோடீஸ்வரன் ஆகிவிட்ட இமான் அண்ணாச்சியின் குறுக்கு வழி வாழ்க்கையும் என்ன ஆனது என்று சொல்கிறது மீதிக் கதை.
‘காக்கா முட்டை’ புகழ் விக்னேஷ், ரமேஷ் இந்தப் படத்தில் மீண்டும் இணைந்து நடித்திருக்கிறார்கள். காக்கா முட்டையில் பார்த்த அந்த வெள்ளந்திப் புன்னகை இருவருக்கும் உதவி இருக்கிறது.
குப்பைமேடு என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டுப் போய்விடுவது சுலபம். ஆனால் மலை போல் குவிந்திருக்கும் குப்பைகளின் இடையே அதன் துர்வாடையில் எப்படித்தான் இவர்கள் நடித்து முடித்தார்களோ என்று ஆச்சரியமாக இருக்கிறது.
படம் முழுவதும் அந்தக் குப்பை மேட்டில்தான் நடக்கிறது. நடிகர் நடிகைகள் மட்டுமல்லாது படத்தின் அத்தனை தொழில்நுட்ப கலைஞர்களும் அங்கேயே முழுப் படத்தையும் எடுத்து முடித்து இருப்பது அசுர சாதனை.
அந்த வகையில் குப்பை மேட்டிலேயே புழங்கி உழைத்து உண்டு இந்த படத்தில் உழைத்த அத்தனை கலைஞர்களின் அர்ப்பணிப்பையும் பாராட்டியாக வேண்டும்.
வருணிகாவுக்கு வழக்கமான கதாநாயகி போன்ற தோற்றம் இல்லைதான். ஆனாலும் குப்பை மேட்டில் வளரும் ஒரு சிறுமி எப்படி இருப்பாரோ அதை அவரது உருவமும், நடிப்பும் பிரதிபலிக்கிறது.
இமான் அண்ணாச்சிக்கு வாழ்க்கையில் இது போன்ற ஒரு படம் இதுவரை கிடைத்ததில்லை – இனி கிடைக்கவும் செய்யாது. முதல் பாதியில் குப்பையில் நடித்திருந்தாலும், இரண்டாவது பாதியில் அவர் வயதுக்கு இளம் குமரிகளுடன் சேர்ந்து லூட்டி அடித்திருப்பது இந்தப் படத்தில் அவருக்குக் கிடைத்த ஜாக்பாட் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஒரு துணைப் பாத்திரத்தில் வருகிறார் சிசர் மனோகர். பட்டணத்தில் வேலை செய்கிறேன் என்று பொய் சொல்லிவிட்டு இங்கே குப்பை பொறுக்கி வாழும் அவரது மறைவிற்குப் பிறகு அவரது மகளும் இதே இடத்தில் வந்து குப்பை பொறுக்குகிறார் என்பதெல்லாம் நம்ப முடியாத விளைவு.
அதேபோல் பள்ளியோ கல்வியோ வெளி உலகோ அறியாத இந்த சிறுவர்களின் பேச்சு வழக்கு மட்டும் இயல்பான பள்ளிச் சிறுவர்களை போலவே இருப்பது மிகவும் அன்னியமாக இருக்கிறது.
இந்தப் படத்தைக் கதையாகச் சொல்லிப் பார்த்தால் ரொம்பவும் உணர்வு பூர்வமாக இருக்கும். ஆனால் இயக்கம் என்று வரும்போது அதன் இயல்புத்தன்மை மாறாமல் எடுத்திருந்தால் இன்னொரு ‘காக்கா முட்டை’ படம் போல வந்திருக்கும்.
அந்த அளவுக்கு திரைக்கதையிலோ, சொல்ல வந்த கருத்தில் தெளிவோ இல்லாமல் இருப்பதால் கவனிக்கப்படாமல் போகிறது இந்தப் படம்.
சிறுவர்கள் குப்பையில் எடுத்தது தன்னுடைய காணாமல் போன ஒரு கொலுசுதான் என்று அறிந்தும் சிறுமி வருணிகா , அவர்கள் அதை வைத்து பிரியாணி வாங்க முடிவெடுக்கும் போது தன்னுடைய கொலுசு அது என்று வாதாடாமல் அவர்கள் வயிறார உண்ணட்டும் என்று நினைப்பதும், கொலுசை விற்று பிரியாணி வாங்க கொடுத்த காசில் நண்பனுக்காக இரண்டு செயற்கைக் கால்களைப் பெற்று வந்து கொடுக்கும் சிறுவனின் நட்பும் நெகிழ வைக்கும் காட்சிகள்.
அதேபோல் தன் காதலி இன்னொருவனிடம் ஏமாந்து நின்றாலும் அவளைக் கைவிட்டு விடாத பாத்திரத்தில் விக்னேஷ் உயர்ந்து நிற்கிறார்.
தன்னை அனாதையாக விட்டு விட்டுப் போன அம்மாவை கிளைமாக்சில் வைத்து விக்னேஷ் மீண்டும் பார்த்து விடுவதும் கூட நெகிழ்ச்சியான காட்சிதான்.
ஏழைகளுக்காக இரண்டு ரூபாயில் வைத்தியம் பார்த்த மருத்துவரையும் இந்த படத்திற்குள் கொண்டு வந்திருப்பது நல்ல விஷயம்.
எப்படி இருந்தாலும் இந்த ஒட்டுமொத்த டீமின் அர்ப்பணிப்புக்காக இவர்களைப் பாராட்ட வேண்டும்.
படம் முடிந்து நெடுநேரம் ஆகியும் அந்த குப்பை வாடை நம் நாசியிலேயே இருப்பது போன்ற ஒரு பிரமை ஏற்படுவது நிஜம்.
புது வேதம் – பட்ஜெட்டுக்கு இது போதும்..!