May 4, 2024
  • May 4, 2024
Breaking News
October 20, 2023

லியோ திரைப்பட விமர்சனம்

By 0 230 Views

நம்ம ஹீரோக்களுக்கு ஒரு வீக்னஸ் உண்டு – தங்கள் சொந்த வாழ்க்கைக் கதையை அப்படியே டைரக்டர்கள் படக் கதையாக சொல்லி விட்டால் ‘படக்’கென்று அப்பீலே இல்லாமல் அதை ஒத்துக் கொள்வார்கள்.

அந்த வகையில் லோகேஷ் கனகராஜ்
இப்படி விஜய்யிடம் கதை சொல்லி இருக்கக் கூடும்.

“படத்துல நீங்க நடுத்தர வயதுள்ள அப்பாவா வர்ரீங்க. உங்களுக்கு டீன் ஏஜ்ல ஒரு மகன்… அதைவிட சின்னதா ஒரு மக இருக்கா. திரிஷாதான் உங்க மனைவி. உங்களைப் பெற்ற அப்பா உங்களுக்கு எதிரி.
அப்பா உங்களை ஜெயிக்கிறாரா, நீங்க அவரை ஜெயிக்கிறீங்களா அப்படிங்கறதுதான் கிளைமேக்ஸ்..!

இதுக்கிடையில உங்க கேரக்டரைசேஷன்ல உங்க மனைவிக்கு சந்தேகம் வந்து அதை கண்டுபிடிக்கப் போராடுறாங்க. மகனும் உங்களை நம்ப மறுக்க, அழுது புரண்டு பொய் சொல்லி கடைசி வரைக்கும் உங்க நிஜமுகம் தெரியாம அவர்களை ஏமாத்திடறீங்க…”

So… கதை ஓகே ஆயிடுச்சா..?
ஆனால், இதை எக்சிகியூட் பண்ண ஒரு டைரக்டராக லோகி என்ன டைவெல்லாம் அடித்ததாக வேண்டும் பாருங்கள்..?!

இதை நேரடியான நரேஷனில் சொல்லாமல் கூடவே ‘ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ்’ படத்தையும், வாட்ஸ் ஆப், பேஸ்புக்கில் நாம் அன்றாடம் பார்க்கும் ரீல்ஸ்களையும் மேட்ச் பண்ணி, அன்பறிவ்வை விட்டு நீள நீளமாக மூணு நாலு பைட் வைத்து… நிற்க..!

ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்தை அப்படியே எடுத்து விட்டார் என்று விமர்சகர்கள் குறை சொல்வார்களே என்பதையும் முன்னாலேயே யூகித்த லோகி, “இது ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்தின் இன்ஸ்பிரேஷனில் எடுத்தது…!” என்று டைட்டிலிலேயே ஒரு கார்டையும் போட்டு நம்மை ‘ நான் வயலன்ட் ‘ ஆக்கி விடுகிறார்.

முன்பாதிப்படம் அதே ஹிஸ்டரி, அதே ஜியாக்ரபிதான். ஹிமாச்சலப் பிரதேசத்தில் விஜய் நடத்தி வரும் காபி ஷாப்புக்கு, மிஷ்கின் தலைமையிலான ஒரு திருட்டு கோஷ்டி வருகிறது. அதில் கொலை செய்ய அஞ்சாத டான்ஸ் மாஸ்டர் சாண்டி, காபி ஷாப்பில் வேலை செய்யும் பெண்ணுக்கு காம டிகாக்ஷன் போட்டு சண்டித்தனம் பண்ண, அதைத் தொடர்ந்த சண்டையில் மிஷ்கின் உள்ளிட்ட ஐந்து பேரையும் விஜய் சுட்டுக் கொல்ல, மிஷ்கினின் மனைவி ‘ஸ்நேக் சாந்தி’, ஓ வென்று அலறி “விஜய்யின் தலையை எடுக்காமல் ஓய மாட்டேன்…” என்று மிஷனில் இறங்குகிறார்.

தொடர்ந்து அவரது ஆட்கள் விஜய்யை சுற்றி வளைக்க எல்லோரையும் சுத்தியலை வைத்து சுத்தி சுத்தி அடித்துப் பொளந்து கட்டி அனுப்புகிறார் விஜய்.

கடைசியாக ஸ்நேக் சாந்தியுடன் மோதுவார் விஜய் என்றுதானே நினைக்கிறீர்கள்..?

அதுதான் செகண்ட் ஆப் மேட்டர் என்று நீங்கள் நினைத்தால் அதுதான் இல்லை. அங்கே ஒரு ஆப்பு கொடுத்து நம்மை ஜெர்க்காக வைக்கிறார் லோகி.

மேற்படி சம்பவத்தில் விஜய்யின் ஒரு புகைப்படம் தெலங்கானாவில் இருக்கும் இருக்கும் தாதா சஞ்சய் தத் கைக்குப் போய், “அட… பய இன்னும் உயிரோட இருக்கானா..?” என்றபடி விஜய்யை சந்திக்க சுமார் 25க்கும் மேற்பட்ட கார்கள் சகிதம் வருகிறார்.

ஓகே… அப்படியானால் விஜய்க்கும் சஞ்சய் தத்துக்கும் ஏற்கனவே பகை என்றுதானே நினைக்கிறீர்கள் – அதுவும் இல்லை.
சஞ்சய் தத்’தான் விஜய்யின் அப்பா என்று ஒரு குழாயைத் தூக்கி நம் குரல்வளையில் இறக்குகிறார் லோகி.

இறந்து போனதாக நம்பப்பட்ட ‘லியோ ‘ விஜய்தான் இந்த பார்த்திபன் விஜய் என்று அவர் நம்ப, அந்தக் குடும்பமே விஜய் வாயால் “நான்தான் உங்க பிள்ளை லியோ…” என்று சொல்ல வைக்க அத்தனை பேரின் ‘உயிரையும் விட்டுப் ‘ போராடுகிறது.

ஆனாலும் மனைவி முதற்கொண்டு இந்தியா முழுக்க எல்லோரிடமுமே தான், “லியோ இல்லை…” என்று ஜியோ மீது சத்தியம் செய்து சாதிக்கிறார் விஜய்.

ஆனால், இவர் ஒரு கட்டத்தில் “நான்தான் லியோ…” என்று சொல்லிவிடுவார் என்பது கர்ப்பம் தரித்து சில நிமிடங்களே ஆன  சிசுவுக்கு கூட தெரிந்துவிடும் சீக்ரெட்.

தலைப்பிலேயே லியோ என்று வைத்துவிட்டு அப்புறம் என்ன சீக்ரெட் மண்ணாங்கட்டி..?

ஆனால் அவர் எப்போது தான்தான் லியோ என்று சொல்லப் போகிறார் என்பதுதான் லோகி நமக்கு வைக்கும் டெரர் டெஸ்ட்..!

அப்படி என்ன சஞ்சய் தத்துக்கும் விஜய்க்கும் ஆகாமல் போகிறது என்று தெரியாத்தனமாக கேட்டு இருக்கிற பாயிண்டையும் இழந்து விடாதீர்கள்.

சஞ்சய் தத் தன்னுடைய பிசினஸ் முன்னேற வாஸ்து ஐட்டங்களை நம்பாமல் ஆடு, மாடு, பன்றி என்று ஜடாரிக்கு நான் வெஜ் ஐட்டங்களாக பலி கொடுத்து கடைசியில் ஆளையே பலி கொடுக்கும் அளவுக்கு மூடத்தனத்தில் முன்னேறுகிறார்.

அதற்காக ஒரு விசேஷ ஜாதகக்காரரைப் பிடிக்க ஒரு ஜோசியர் டீமையே வைத்துத் தேட இரண்டு பேர் அதற்கு தேர்வாகிறார்கள். அந்த இரண்டு பேருமே சஞ்சய் பெற்ற இரட்டைக் குழந்தைகளான விஜய்யும், மடோன்னாவும்.

புல்லரித்தால் ரெண்டு அருகம்புல்லை எடுத்து சொரிந்து கொண்டு மீதியைக் கேளுங்கள்.

இப்படிப்பட்ட ஒரு டுபாக்கூர் கதையில் உலக சினிமாவில் ஒருவர் கூட யோசித்திராத நரபலி சமாச்சாரத்தை உள்ளே வைத்த லோகியின்  கற்பனை, போகியில் வைத்துக் கொளுத்தப்பட வேண்டிய கொடூரம்.

வழக்கமான படங்களை விட விஜய் உற்சாகமிழந்து பலவீனமாகத் தெரிகிறார். அவர் கொஞ்சம் வயதானவர் என்பது லாஜிக்காக இருந்தாலும், ஓரளவுக்கு சுறுசுறுப்பாக வரும் இளவயது காட்சிகளும் சட்டென்று முடிந்து விடுகின்றன.

ஆனால் எந்நேரமும் புகையும், போதையும், கொலையுமாக விஜய்யைப் பார்ப்பதற்கு பயமாகவே இருக்கிறது. அவரிடம் சாக்லேட்டை கொடுக்கும் மகள், “ஸ்வீட்டாக இருக்கிறதா..?” என்று கேட்க, “பிளடி ஸ்வீட்..!” என்று பதில் சொல்லி மேலும் பயமுறுத்துகிறார். ஒரு அப்பா மகளிடம் இப்படித்தான் பேசுவாரா..?

அதைவிட கொடூரமாக பயமுறுத்துகிறது அவரது தலைமுடி.

படத்தில் அடிக்கடி வரும் “மயிரு மயிரு…” என்ற வசனங்களை விட அவரது மயிரு ரொம்பவும் பெரியதாக இருக்கிறது.

அந்த ‘விக் ‘ செய்தவரை கூட்டிப் போய் கேரளாவில் ஒரு ஷவர்மா ட்ரீட் கொடுக்கலாம்.

மற்ற கேரக்டர்களுக்குள்ளும் எந்த லாஜிக்கும் இல்லை, ஒரு மேஜிக்கும் இல்லை.

விஜய்யின் மனைவியாக வரும் த்ரிஷாவுக்கு வேலையே இல்லையே என்பதை யாராவது கண்டுபிடித்து விடுவார்களோ என்று திடீரென்று ஒருநாள், “இன்றைக்கு கம்பெனியில் வேலை அதிகம். இரவு இருந்து முடித்து விட்டு நாளைக்குதான் வருவேன்..!” என்று ஒரு காட்சியில் சொல்லிவிட்டு வேண்டாத வேலை பார்க்கப் போகிறார்.

படத்தில் பாரஸ்ட் ரேஞ்சராக வருகிறார் கௌதம் வாசுதேவ் மேனன். ஒரு ரேஞ்சரின் அதிகாரம் எந்த ரேஞ்சுக்கு உட்பட்டது என்பதே லோகிக்குத் தெரியவில்லை – பாவம். எல்லா போலீஸ் நடவடிக்கைகளிலும் கௌதம் மேனன் உள்ளே வந்து குட்டையைக் குழப்பிக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், அந்த போலீஸ் ஸ்டேஷனில் வைத்தே சட்டத்துக்குப் புறம்பாக விஜய்க்கு உதவிக் கொண்டிருக்கிறார்.

அதைவிட, ஐந்து பேரை நெற்றிப் பொட்டில் சுட்டுக்கொன்ற வழக்கில் விஜய்யை விசாரிக்கும் நீதிபதி ஒரு படி மேலே போய் விஜய்யை நிரபராதியாக விடுதலை செய்வதுடன் வீர சாகசத்துக்கான விருதுக்கும் விஜய் பெயரை பரிந்துரை செய்கிறார். அடுத்த கேசில் விஜய் மாட்டும் போதும் அதே நீதிபதி உள்ளே வர, எங்கே விஜய் பெயரை ‘பாரத ரத்னா விருது’க்குப் பரிந்துரை செய்வாரோ என்று நமக்கு பயம் வந்து விடுகிறது.

இதற்கெல்லாம் உச்சமாக இருப்பது இமாச்சலப் பிரதேசத்தில் ஒரு ஓரமாக காபி ஷாப் வைத்துக் கொண்டிருக்கும் ஒருவர் ஊர் பெயர் தெரியாத ஐந்து ரவுடிகளை சுட்டுக்கொன்ற நிகழ்வை உளவுத்துறை ஆராய்ந்து விஜய்யின் குடும்ப உறுப்பினர்களின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று கண்டுபிடித்து விஜய் இருக்கும் ஏரியா இன்ஸ்பெக்டருக்கு தகவல் அனுப்புவதுதான்.

ஒரு அவுன்ஸ் அளவுக்காவது நாட்டு நடப்பு தெரிய வேண்டாமா லோகி..?

ஆனாலும் லோகியின் தீர்க்க தரிசனத்தைப் பாராட்டியே ஆக வேண்டும்.

லியோவின் கதையை சொல்லும் மன்சூர் அலிகான், “பாதிக் கதையை கேட்டதுக்கே மிரண்டு போயிட்டாரு. மீதிக் கதையும் கேட்டா அவ்வளவுதான்..!” என்று கௌதம் மேனனை பார்த்துப் பேசுவதும், கிளைமாக்ஸுக்கு சற்று முன்னதாக விஜய்யே, “லியோவைப் பாக்கணும், லியோவைப் பார்க்கணும்னு ஏண்டா அலையுறீங்க… இப்ப போதுமா..?” என்று கேட்பதும் அந்த வகையறா.

இப்படி கதையே ஐசியூ வில் படுத்துக் கிடக்க, தன்னுடைய ரசிகர்கள் எதிர்பார்ப்பார்களே என்று லோகி யோசித்து இருக்கும் எல்சியூ க்கள் அதைவிடக் காமெடியானவை.

விஜய்யின் பாதுகாப்புக்கு நீதிபதி உத்தரவின் பேரில் தமிழ்நாட்டிலிருந்து வரும் வீர தீரமான போலீஸ், ஆக்ஷன் கிங் அர்ஜுனாக இருப்பார் என்று நாம் எதிர்பார்த்தால், ‘கைதி ‘ படத்தில் கொசு மருந்தடிக்கும் துப்பாக்கியை கார்த்திக்கு எடுத்துக் கொடுத்த ‘மரியம் ஜார்ஜ் ‘ தான் அந்த சிரிப்புப் போலீசாக வருகிறார். இது ஒரு எல்சியூ.

அதேபோல் விக்ரமில் கமலின் இச்சைக்கு  வெறும் முனகல் சத்தம் மட்டுமே கொடுத்த நடிகையை ஒரு காட்சியில் காட்டி… “ஸ்ஸ்ஸ்ஸ்…ஆஆஆ… ஸ்ஸ்ஸ்ஸ்… ஆஆஆ…” என்று பேக்ரவுண்டில் முனக விட்டு இருப்பதும் இன்னொரு எல்சியூ.

அடுத்தது, மாஸ்டரில் கழற்றிப் போட்ட கை வளையத்தை இந்தப் படத்தில் விஜய் ஒரு காட்சியில் எடுத்து மாட்டுவது. படமே முடிந்து போய்விட்டது என்று நினைக்கையில் போனில் வரும் விக்ரம் கமல் வாய்ஸ் ஓவர், எண்ட் கார்டு எல்சியூ.

இசை அமைப்பாளர் அனிருத்தும் முடிந்தவரை இருக்கிற டிரம்ஸ் செட்டை எல்லாம் அடித்து நொறுக்கி அசந்து போகிறார். எனவே முன்பாதி சண்டை ஒன்றில் இரண்டு பழைய பாடல்களை எடுத்துப் போட்டுவிட்டு குப்புறப்படுத்து விட்டார்.

தேசப்பற்று புகழ் அர்ஜுன் இப்படி போதைப்பற்று ஆசாமியாக விஜய்யிடம் அடி வாங்கிச் சாவது என்ன நேர்த்திக்கடனோ..?

ஒரே ஒரு காட்சியில் வந்து விஜய்யிடம் குண்டடி பட்டுச் சாகும் அனுராக் காஷ்யப்பை விட, தூக்கில் மாட்டப்படும் ராமகிருஷ்ணன் பரவாயில்லை… இரண்டு காட்சிகள் கூடுதலாக வருகிறார்.

படம் ரிலீஸ் ஆவதற்கு இரண்டு நாள் முன்பு “படத்தின் முதல் பத்து நிமிடத்தைத் தவற விட்டு விடாதீர்கள்…” என்று லோகி சொன்னதில் அவனவன் அடித்துப் பிடித்து ஓடி வந்து பார்த்தால் படத்தின் கதைக்கு சம்பந்தமே இல்லாமல் ஒரு கழுதைப் புலியை விஜய் விரட்டிப் பிடிக்கும் காட்சிதான் அது.

(அது துண்டாக தொக்கி நிற்கக் கூடாது என்று அந்த ‘ஹைனா ‘வை எடுத்து சுப்பிரமணி என்று பெயர் எல்லாம் வைத்து வளர்க்கிறாராம் விஜய். என்னதான் ரேஞ்ச்  உணராத ரேஞ்சர் கௌதம் மேனன் விஜய்யின் நண்பர் என்றாலும் கழுதைப் புலியை எல்லாம் வீட்டில் வைத்து வளர்க்க முடியுமா லோகி..?)

அந்த ஹைனாவும், விஜய்ணாவும் போடும் சண்டையில் ரசிகர்கள் புல்லரித்துப் போய் விடுவார்கள் என்பது லோகியின் நினைப்பு.

ஆனால் புலியானாலும் சரி, கழுதைப்புலியானாலும் சரி விஜய்யின் காலை வாரி விடுகின்றன என்பதுதான்  நடப்பு..!

லியோ – அய்யய்யோ..!

– வேணுஜி