‘பப்ளிக் ஸ்டார்’ என்ற பட்டத்துடன் உலா வரும் வழக்கறிஞர் துரை சுதாகர் நடித்துள்ள படம் “நான் ஒரு முட்டாள்”.
இந்த படத்துக்காக முதல் முறையாக துரை சுதாகரே பாடகர் அவதாரம் எடுத்து ஒரு பாடலை பாடியிருக்கிறார்.
இப்படம் குறித்து அவர், ” இது இன்றைய தலைமுறையின் ஒரு குடும்பஸ்தனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு தயார் ஆகி இருக்கிறது. பொதுவாக இப்போதைய ட்ரெண்டாகி விட்ட மதுப்பழக்கத்தால் கல்லீரல் , கணையம் போன்ற உடல் உறுப்புகள் கெட்டுப்போகும் என்பது எல்லோருக்கும் தெரியும் .
அது தவிர நிறைய உளவியல் பிரச்சினைகளையும் மது குடிப்போர் சந்திக்கிறார்கள். அதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லை . மது அருந்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .
மதுவால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது . அதிக அளவில் புதிய குடிநோயாளிகள் உருவாகும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் மாறி வருகிறது . இந்தச் சூழலில் அந்த பாதிப்பு குறித்து கொஞ்சம் கமர்ஷியல் நோக்கத்துடன் உருவான படமிது..!” என்றார்.
‘களவாணி 2’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், தொடர்ந்து ‘டேனி’, ‘க.ப.ரணசிங்கம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
தற்போது சரவண சுப்பையா இயக்கத்தில் உருவாகி விரைவில் வெளியாக உள்ள ‘மீண்டும்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பதோடு, எழில், சற்குணம் உள்ளிட்ட முன்னணி இயக்குநர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருவதோடு, திரைப்பட தயாரிப்புகளிலும் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.