கோலிவுட்டில் யாராலும் தீர்க்க முடியாத பிரச்சினைகள் சில காலம் காலமாக இருந்து வருகிறது.
இப்போது உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்பாளர் சங்க நிர்வாகமோ, நடிகர் சங்க நிர்வாகமோ இல்லாமல் தமிழ் சினிமா தடுமாறிக் கொண்டிருக்கிறது.
அதில் ஒன்று சின்ன பட்ஜெட் படங்கள் வெளியாக இருக்கும் முட்டுக்கட்டைகள். எனவே, சின்ன பட்ஜெட் தமிழ்ப் படங்களை தமிழக அரசே ஒரு குழு அமைத்து அவற்றை வியாபாரம் செய்யவும், திரையுடவும் உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் ‘*தண்டச்சோறு*’ என்ற படத்தை இயக்கித் தயாரித்திருக்கும் ராஜன் போஸ் என்பவர் செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு நடைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
பிப்ரவரிமாதம் 8ம் தேதி தன்னுடைய நடைப்பயணத்தை ஆரம்பித்தவர் ஒரு நாளைக்கு 30 கி.மீ வரை நடந்து, வரும் 9 அல்லது 10ம் தேதி சென்னையை அடைய உள்ளார். தமிழக முதல்வரைச் சந்தித்து கோரிக்கை மனுவை அளிக்க உள்ளாராம்.
“ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவன் நான். 17 வயது முதலே சினிமா மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தேன். ஆனால், ராணுவத்திற்கு சென்று விட்டேன்.
ரிட்டயர்ட் ஆன பிறகு நானே ‘தண்டச்சோறு’ என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்து, இயக்கி முடிச்சிருக்கேன்.. இப்ப படத்தை வியாபாரம் செய்ய வினியோகஸ்தர்களிடம் பேசினால் அனைத்து உரிமைகளையும் எழுதிக் கொடுக்கச் சொல்கிறார்கள். மேலும் தியேட்டர்கள் கிடைப்பதும் கடும் சிரமமாக உள்ளது.
இது மாதிரி 1000க்கும் மேற்பட்ட படங்கள் திரைக்கு வராமல் தடுமாறிக்கிட்டிருக்குது . அப்படிப்பட்ட படங்களை வெளியிட அரசு உதவி செய்ய வேண்டும்.
நான்’டைட்டானிக்’ படத்தை மலையாள டிவியில் ஒளிபரப்ப மொழி மாற்ற வசனம் எழுதிக் கொடுத்துள்ளேன். ‘ஹலோ’ என்ற தெலுங்குத் திரைப்படத்திற்கு மலையாளத்தில் வசனம் எழுதியுள்ளேன். ‘ராமாயணம்’ தொடருக்கு மலையாளத்தில் வசனம் எழுதியுள்ளேன். நானே பலகுரலில் பேசுவேன். இப்படி எனக்கும் சினிமாவுக்கும் நிறையவே தொடர்பு உண்டு.
இப்படி நோக்கத்தோட நடக்கும் எனது நடைப் பயணத்திற்கு சினிமா தரப்பினர் யாருமே உதவி செய்யலை. ஆனால், வழியெங்கும் பொதுமக்கள் ஆதரவு தருகின்றனர். இன்று மதியம் கூட கூழ் குடித்துத்தான் பசியைத் தீர்த்துக் கொண்டேன்.
ஓட்டலில் கூட ரூம் எடுக்காமல், நடைபாதையிலும், கோயில்களிலும் தான் தங்குகிறேன். சினிமா எடுக்க பலர் வருகிறார்கள். ஆனால், அவர்கள் சரியான விதத்தில் தொழில் செய்ய இங்கு யாருமே ஆதரவு தருவதில்லை,” என்று வருத்தத்து டன் சொ ல்கிறார் ராஜன் போஸ்.