March 29, 2024
  • March 29, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • சுப்பிரமணிய சுவாமிக்காக ‘பொறுக்கிஸ்’ என்று டைட்டில் வைத்தேன் – அறிமுக இயக்குநர்
August 6, 2018

சுப்பிரமணிய சுவாமிக்காக ‘பொறுக்கிஸ்’ என்று டைட்டில் வைத்தேன் – அறிமுக இயக்குநர்

By 0 932 Views

இப்போது தயாரிப்பிலிருக்கும் புதிய படம் ‘பொறுக்கிஸ்’. இப்படி ஒரு தலைப்பா என்று பதறிவிடாதீர்கள். அந்த தலைப்புக்குக் கீழே ’அல்ல நாங்கள்’ என்ற சப் டைட்டிலும் இடம் பெற்றுள்ளதாம். ‘கேஎன்ஆர் மூவிஸ்’ சார்பில் ராஜா தயாரித்துள்ள படம் இது.

‘பிசாசு’, ‘சவரக்கத்தி’ படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய மஞ்சுநாத்.எஸ் ‘பொறுக்கிஸ்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் மாறியுள்ளார். ஒளிப்பதிவும் இவரே.

படத்தின் தயாரிப்பாளர் ராஜாவே கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக லவனிகா நடித்துள்ளார். கதையின் மையத் தூணாக ராதாரவி நடிக்க, ரவிவர்மா இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பிரபலங்கள் பேசியதிலிருந்து…

இயக்குநர் மஞ்சுநாத் –

” நமது தமிழகத்தின் ஆதிக் கலையான கூத்துக் கலையையும், அந்த கூத்துக் கலையை நமக்கு தற்போதும் கொண்டுவந்து சேர்ப்பவர்களின் இப்போதைய வாழ்வியல் நிலையையும் அவர்களது இன்ப துன்பம் பற்றிய அலசலாகத் தான் இந்த படம் உருவாகியுள்ளது.

படத்தில் விவசாயப் பிரச்சனையையும் கையில் எடுத்திருக்கிறோம். நாமும் மாறவேண்டும் என்கிற தீர்வையும் சொல்லியிருக்கிறோம். இன்றைய சமுதாயத்தையே அழித்துக்கொண்டிருக்கும் மதுவை ஒழிப்பது குறித்த விழிப்புணர்வு பற்றி இந்த படத்தில் நாங்கள் பேசியிருக்கிறோம்.

சுப்ரமணியசாமி தமிழர்களை ‘பொறுக்கிஸ்’ என அழைத்தார். அந்தக் கோபத்தில் ‘பொறுக்கிஸ்’ என்று மட்டும்தான் டைட்டிலை வைத்தோம். ஆனால், ராதாரவி சார்தான் எங்களை அழைத்து, ‘பொறுக்கிஸ் அல்ல நாங்கள்’ என மாற்றச் சொன்னார். அவரது வேண்டுகோளை ஏற்று டைட்டிலை மாற்றினோம்..!” என்றார்.

இயக்குநர் கருபழனியப்பன் –

“நமக்குக் கிடைக்கும் மேடைகளில், நாம் கூடும் பொது இடங்களில் சமூகத்தின் மீதான அதிருப்தியை நாம் எப்போதும் வெளிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

முன்பெல்லாம் ஒருவரை பிடிக்காவிட்டால் முதலில் கரண்ட்டை ‘கட்’ பண்ணுவார்கள். இப்போது லேட்டஸ்ட்டாக இன்டர்நெட்டை ‘கட்’ பண்ணுகிறார்கள். இப்பொழுது மஞ்சுநாத்தைப் போல, ராதாரவி, சுரேஷ் காமாட்சி, பியூஸ் மனுஷ் போன்றவர்களைப்போல தங்களுடைய சமூக அதிருப்திகளை கடுமையான வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார்களே, அவர்கள் கூறுவதையும் கேட்டு, அதற்கேற்ப ஆட்சி செய்யும் அரசாங்கம்தான் மக்களின் விருப்பமான அரசாங்கமாக இருக்கமுடியும்.

இப்படி ஒரு படம் எடுத்ததற்காக மஞ்சுநாத்துக்கு எனது பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன்..!”

சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் –

“ஒருவகையில் நாங்கள் ‘பொறுக்கிஸ்’தான்.. அரசாங்கம் போடுற குப்பையை பொறுக்கிட்டு இருக்கிறோம். ரிலையன்ஸ் போடுற பிளாஸ்டிக்கை பொறுக்கிட்டு இருக்கிறோம். ஸ்டெர்லைட் ஆசிட் கழிவுகளை உள்ளுக்குள்ள ஊத்திக்கிட்டு இருக்கிறோம். லேட்டஸ்ட்டா ஹெச்.ராஜா, அர்ஜுன் சம்பத் போன்றவர்கள் வார்த்தைகளில் எடுக்கும் வாந்தியையும் பிடித்துக்கொண்டு இருக்கிறோம்.

தமிழ்நாட்டை ஒரு பரிசோதனைச் சாலையாக பயன்படுத்தி வேட்டையாடிக்கொண்டு இருக்கிறார்கள். உங்களை அன்றாடம் பாதிக்கும் விஷயங்கள் குறித்து அஞ்சு வரிகளில் ஒரு கடிதம் எழுதி பிரதமர், முதல்வர், கலெக்டர் என அனைவருக்கும் தினசரி தொடர்ந்து அனுப்புங்கள்.. நிச்சயமாக அதன்மூலம் மாற்றம் வரும்..!”

Porukkies Audio Launch

Porukkies Audio Launch

நடிகர் ராதாரவி –

“இந்தக் குடும்பத்தில் நானும் ஒருவன். மலேசியாவில் எனது நண்பர் ஒருவர் சொந்தப் படம் எடுக்கிறேன் எனக் கூறியபோது மஞ்சுநாத்தை அழைத்துச் சென்று கேமராமேனாக அறிமுகம் செய்துவைத்தேன். மஞ்சுநாத் பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும் புரட்சிகரமான கருத்துக்களை கொண்டவர்.

பியூஸ் மனுஷ் இந்த விழாவில் கலந்துகொள்கிறார் என்றதுமே பயந்தேன். காரணம் அவர் எப்போதும் வாரண்ட்டோடு சுற்றுபவர். அதனால் நம்மையும் வாரண்ட்டோடு சுற்ற வைத்து விடுவாரோ என்றும் அரசியல் மேடை போல இது ஆகிவிடுமோ என்றும் பயந்தேன். படம் சென்சாரில் பிரச்னையில்லாமல் தப்பிக்கவேண்டுமே என்பதுவும் ஒரு காரணம்.

இது அரசாங்கத்தை அட்டாக் பண்ணுகிற படமே அல்ல. அரசாங்கத்தில் உள்ள குறைகளைப் பற்றி சொல்லும் படம்..!”

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி –

“கார்ப்பரேட் ஆதிக்கத்தினால், விளைநிலங்களில் வீடுகளை கட்டிவிட்டு உணவுகளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் காலத்தில், விவசாயத்தின் பெருமைகளை மிகத் தைரியமாகக் கூற ஒரு இயக்குநர் வந்திருக்கிறார் என்பது மிகவும் பெருமையாக இருக்கிறது.

படத்தின் ட்ரெய்லரைப் பார்க்கும்போதே நிறைய அரசியல் இருப்பது தெரிகிறது. ராதாவி சார் சும்மாவே ஆடுவார். அவருக்கு சலங்கையும் கட்டி ஆடவிட்டால் கேட்கணுமா..? நாம வீட்டுக்குள்ளேயே இருந்துகொண்டு போராளிகள் எனச் சொல்லிக்கொண்டு இருக்கக் கூடாது. இந்த மாதிரி கருத்துக்களை தைரியமாக தெரிவிக்க நிறைய சினிமாக்காரர்கள் முன்வரவேண்டும்..!”

ஜே.கே.ரித்தீஷ் –

“ராதாரவியின் அழைப்பை ஏற்றுத்தான் இந்த விழாவுக்கு வந்துள்ளேன். எப்போதுமே சிறிய படங்களும், புதிய நடிகர்களும் வெற்றி பெறவேண்டும் என நினைப்பவன். மீண்டும் நடிகர் சங்க தேர்தலில் வெற்றிபெற்று நாங்கள் பொறுப்புக்கு வருவோம். இந்தப் படத்தில் பாடிய ஆலயமணிக்கு குறைந்தது பத்து படங்களிலாவது நான் வாய்ப்பு வாங்கித்தருவேன்..!”