May 2, 2024
  • May 2, 2024
Breaking News
June 10, 2023

போர் தொழில் திரைப்பட விமர்சனம்

By 0 389 Views

சமுதாயத்தில் குற்றவாளிகள் பெருகுவதில் பெற்றோரின் கவனிப்பின்மை மிகப்பெரிய பங்கு வகிக்கிறது என்ற ஒற்றை வரிச் செய்தியை ஒரு விறுவிறுப்பான சஸ்பென்ஸ் திரில்லராக கொடுத்து அசத்தியிருக்கிறார் அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா.

அத்துடன் ஏட்டுப் படிப்பு மட்டுமே உயர்ந்தது என்று நினைக்கும் இளைஞனும், ஆற்றல் மிகுந்த ஒரு அனுபவசாலியும் ஒரே இடத்தில் பயணம் செய்ய நேரும்போது ஏற்படும் முரண்களையும் சுவாரசியம் குறையாமல் கொடுத்திருக்கிறார் அவர். 

திருச்சியைக் களமாகக் கொண்டு சொல்லப்பட்டிருக்கும் இந்தக் கதையில் ஒரு சைக்கோ கில்லர் வித்தியாசமான முறையில் இளம்பெண்களாக பார்த்து தொடர்ந்து கொன்று கொண்டிருக்க, அது போலீசுக்கு மிகப்பெரும் சவாலாகி க்ரைம் பிரான்ச் கைக்கு மாறுகிறது.

அதில் துப்பறிய எஸ்பி சரத்குமார் நியமிக்கப்பட, அவருடைய டீமில் புதுமுக டிஎஸ்பி அசோக் செல்வனும், நிகிலா விமலும்  இணைகிறார்கள்.

சைக்கோ கில்லரைக் கண்டுபிடிக்காமல் படம் முடிவுக்கு வராது என்பது புரிந்த நிலையில், இரு துருவ மனநிலைகளைக் கொண்ட சரத்தும், அசோக் செல்வனும் சேர்ந்து அதை எப்படி கண்டுபிடித்தார்கள் என்பதைப் படு சுவாரசியமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

ஹீரோவாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்னுடைய கதாபாத்திரம் பேசப்பட வேண்டும் என்ற முடிவுடன் படத்துக்குப் படம் வித்தியாசமாக நடித்துக் கொண்டிருக்கும் சரத் குமாருக்கு இந்தப் படம் ஒரு ஜாக்பாட் முயற்சியாக அமைந்திருக்கிறது. அனுபவமும் உணர்ச்சியும் பொங்க காட்சிக்குக் காட்சி ரசிக்க வைக்கிறார் சரத்குமார்.

ஒயிட் காலர் ஜாப் போல மழித்த மீசை, வழித்து வாரிய தலை சகிதம் போலீஸ் துறைக்குள் வந்தாலும், அனுபவசாலி சரத்துக்கு டஃப் கொடுக்கும் வகையில் பேசியும், நடித்தும் “அடடே…” சொல்ல வைத்திருக்கிறார் அசோக் செல்வன்.

இவர்கள் இருவருமே படத்துக்குப் போதும் என்ற நிலையிலும் ஒரு பெண் பாத்திரம் கூட இல்லை என்றால் எப்படி என்கிற அளவில் இட ஒதுக்கீட்டுக்காக பயன்பட்டிருக்கும் நிகிலா விமலுக்கும் அந்த அளவே வேலையும் தரப்பட்டிருக்கிறது. இருந்தாலும் தன்னுடைய பளிச் முகத்தால் கவர்கிறார் நிகிலா .

படத்தை அலுப்பில்லாமல் தாங்கிச் செல்வது வசனங்கள் தான். “பயப்படுபவன் கோழை இல்லை – பயந்து ஓடுபவன்தான் கோழை…”, என்று சரத் பேசும் வசனம் ஒரு சாம்பிள்.

அத்துடன் சிறு வயதில் பெற்றோரின் முறையான வளர்ப்பில்லாமல்தான் பெரும்பாலானவர்கள் குற்றவாளிகள் ஆகிறார்கள் என்று உண்மையை கண்டுபிடித்தது போல் அசோக்செல்வன் சொல்ல, “மயிரு… இதெல்லாம் குற்றங்களை நியாயப்படுத்திக் காட்டற முயற்சி. சின்ன வயதில் பாதிப்புக்கு உள்ளாகிறவன் குற்றவாளியாதான் மாறனும் என்றில்லை – போலீசாகவும் ஆகலாம்..” என்று தன்னை முன்னிறுத்தியே சரத் பேசுவது அமர்க்களம்.

அதற்கு கவுண்டர் பாயிண்டாக “நீங்க திறமையான போலீஸ்தான். ஆனால் நல்ல போலீஸ் இல்லை…” என்று அசோக் செல்வன் பஞ்ச் அடிப்பதும் அட்டகாசம்..!

சமீபத்தில் மறைந்த நடிகர் சரத்பாபு இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் வந்து நம்மை நெகிழ வைக்கிறார். படத்தில் நிறைய அடி வாங்கும் அவரை, “ஐயோ பாவம் அடிக்காதீங்க ஐயா…” என்று கத்தத் தோன்றுகிறது.

உருவத்தை வைத்து பயமுறுத்தும் தமிழ் பட வில்லன்கள் மத்தியில் இப்படியும் ஒருவர் பயமுறுத்த முடியுமா என்று வித்தியாசமான உருவம் மற்றும் பாடி லாங்குவேஜில் திகைக்க வைக்கிறார் திடீர் வில்லன்.

ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை இந்த சஸ்பென்ஸ் திரில்லர் படத்துக்கு பெரும் பலம். ஒரு ஒளிப்பதிவாளரின் திறமை இரவுக் காட்சிகளில் தெரியும் என்பார்கள். இதில் பெரும்பாலும் இரவு காட்சிகள் வர, கலைச் செல்வன் சிவாஜி, தான் ஒரு சிறந்த ஒளிப்பதிவாளர்தான் என்று நிரூபிக்கிறார்.

வந்தே பாரத் போன்று முன்பாதிப் படம் பறந்து, வைகை எக்ஸ்பிரஸ் ஆக பின் பாதியில் வேகம் குறைந்தாலும், படம் முழுவதும் ஏதோ ஒரு எக்ஸ்ப்ரஸ் ஆகவே கடக்கிறது.

போர் தொழில் – போர் அடிக்காத த்ரில்..!