இரண்டு கல்லூரிப் பருவ மாணவர்களின் சிறு வயது அக்கப்போர், ஒரு பல்கலைக்கழகத்தையே வைக்கோல் போராகப் பற்றி எரிய வைப்பதுதான் கதை.
அந்த இரண்டு மாணவர்களாக அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம். அவர்கள் படிக்கும் பல்கலைக்கழகம் புதுச்சேரியில் இருப்பதாகக் கதை விட்டிருக்கிறார்… அல்ல… அல்ல… கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் பிஜோய் நம்பியார்.
நமக்கென்னவோ கேட்பார், மேய்ப்பார் இல்லாமல் போதை வஸ்துகள், அடிதடி, அராத்து மாணவர்கள், அவர்களின் ‘பலான’ பழக்க வழக்கம் என்று புழங்கும் அந்தப் பல்கலைக்கழகம், கலாப தேசமான கைலாசாவில் இருப்பதாக ஒரு பிரமை ஏற்படுகிறது.
மாணவர்கள் ஆள் ஆளுக்கு ஒரு ஆள் வைத்துக்கொண்டு சுற்றுகிறார்கள். இதில் காளிதாசின் ஆளாக சஞ்சனா நடராஜன், அர்ஜுன்தாசின் ஆளாக டி. ஜெ. பானு… இவர்கள் மட்டுமின்றி நித்யஶ்ரீ, அம்ருதா ஸ்ரீனிவாசன் என்று பிரேம் கொள்ளாமல் ஏகப்பட்ட கூட்டம்.
எல்லோரும் ஏதோ ஒரு பிரச்சினையைத் தூக்கித் தலையில் சுமந்து கொண்டே சீரியஸாக படத்தின் குறுக்கும், நெடுக்கும் அலைகிறார்கள்.
படத்தில் யாருமே மாணவ, மாணவியராக நம்ப முடியவில்லை. எல்லோருமே alumni நிகழ்வுக்கு வந்த ஓல்ட் ஸ்டூடண்ட்கள் போலவே தெரிகிறார்கள். அதனாலேயே அத்தனை மாணவிகளில் ஒரு பெண்ணும் அழகாகத் தோன்றவில்லை.
அத்தனை பேரும் பணயக் கைதிகள் போலவே அழுக்கு கலந்த உடையுடன் தெரிகிறார்கள் அல்லது திரிகிறார்கள்.
அத்தனை அநியாயங்கள், வன்முறைகள் அரங்கேறும் அந்த வளாகத்தில் அவர்களைக் கண்டிக்க யாரும் இல்லை. இரண்டரை மணிநேரப் படத்தில் நடக்கும் வன்முறைகளுக்கு ஒரு 15 எப்.ஐ.ஆராவது போடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், போர்க்களக் கிளைமாக்சில் கூட போலீஸ் வந்து வேடிக்கை மட்டும் பார்த்து விட்டுக் கிளம்பிப் போகிறது.
அர்ஜுன் தாசிடம் யாரோ ‘உங்கள் குரல் சூப்பர்…’ என்று சொல்லி விட்டார்கள் போல… அவரும் நாபிக்கமலத்தில் நட்டு போல்ட்டெல்லாம் வைத்து முடுக்கியது போல் ஆழத்தில் பேசி… குண்டுபல்பையும், ஆக்சா பிளேடையும் நொறுக்கி மிக்ஸியில் போட்டு ஓட விட்டது போல் ஆகிவிட்டது… அது Voice இல்லீங்கோ Noice..!
அந்த மினியேச்சர் உருவத்துக்கு அவரது ‘ஹல்க்’ குரல் ஒட்டவே இல்லை. அவர் வரும் காட்சிகள் எல்லாம் பின்னணியில் ஒரு டப்பிங் படம் ஓடுவது போலவே இருக்கிறது.
அவரை(யும்) ஒரு தாதா என்று நினைத்து அந்தப் பல்கலைக் கழக மாணவர்கள் அவர் பின்னால் திரள்வதெல்லாம் மகா போங்கு.
என்றால்…
காளிதாசை ஒரு வுமனைசர் போலவும், அவரது அழகில் மயங்கி அத்தனை மாணவிகளும் ஜொள்ளுவது போலவும் சித்திரித்திருப்பதும் பீர் பாட்டிலில் பினாயில் ஊற்றி வைத்தது போல் ஒட்டவே இல்லை. காதலுக்காக மாணவி விஷம் குடிப்பதெல்லாம் பழைய ஏற்பாட்டுக்கு முந்தைய நிகழ்வு மிஸ்டர். நம்பியார். இப்போதைய மாணவிகளைக் கொஞ்சம் படியுங்கள்.
(அர்ஜுன்)தாஸும், (காளி) தாஸும் மோதப்போகிறார்கள் என்பதுதான் கதையின் அண்டர் கரண்ட். ஆனால், அப்படி ஒரு சம்பவம் நடக்கும்போது நமக்குக் கொட்டாவி வந்து வாட்ஸ் ஆப்பை நோண்டத்தான் தோன்றுகிறது.
ஓரினச் சேர்க்கை, சாதிப்பிரச்சினை, அரசியல் சூதுகள் என்று எல்லாப் பிரச்சினையையும் பேசுகிறோம் என்று நுனி நாக்கில் பேசியதற்கு நீங்கள் பேசாமலேயே இருந்திருக்கலாம்.
இத்தனை மெகா வெப் சீரிஸ் படத்தைக் கையாள ஒரு ஒளிப்பதிவாளர், ஒரு இசையமைப்பாளர், ஒரு கலை இயக்குனரெல்லாம் போதாது என்று நன்றாகவே உணர்ந்திருக்கும் இயக்குனர், ஒளிப்பதிவாளர்களுக்கு ஜிம்ஷி காலிட், பிரெஸ்லி ஆஸ்கர் டிசோசாவையும், பின்னணி இசைக்கு ஹரீஷ் வெங்கட், சச்சிதானந்த் சங்கரநாராயணன் மற்றும் கௌரவ் கோட்கிண்டியையும்,
கலை இயக்குநர்களாக லால்குடி இளையராஜா, மானசி சாவரேயையும் பயன் படுத்தி இருக்கிறார். அவர்களும் ஓயாமல் உழைத்து நம்மைப் ‘படுத்தி’ இருக்கிறார்கள்.
படத்தொகுப்பைக் கவனித்திருக்கும் பிரியங்க் பிரேம் குமாரின் பொறுமைக்கு அந்த கைலாசா பல்கலைக்கழகத்திலேயே சிலை வைக்கலாம்.
திரைக்கதை, பாடல்கள், உரையாடல் என்று எதுவுமே நினைவில் நிற்கவில்லை.
ஏதோ ஒரு காட்சி, “பரவாயில்லையே… ஏதோ முயன்றிருக்கிறார்கள்..!” என்று நினைத்தால் அடுத்த காட்சியிலேயே, “ஐயையோ… அப்படி எல்லாம் தப்பாக நினைத்து விடாதீர்கள்..!” என்று சொதப்பி, நம்மைச் சுதாரிக்க வைத்து விடுகிறார்கள்.
ஒரு பால்வாடி சண்டையை போர் என்று சொல்வதற்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும். அந்த தைரியம் பிஜோய் நம்பியாருக்கு இருக்கிறது.
பல கலைஞர்களின் அசுர உழைப்பை அநியாயமாக வீணாக்கி இருக்கிறது இந்த முயற்சி.
போர் – போறாத காலம்..!
– வேணுஜி
Related