தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி குடும்ப கார்டு உள்ளவர்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த 9-ந்தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பச்சரிசி, வெல்லம், முந்திரி பருப்பு, ஏலக்காய், திராட்சை, கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 ரொக்கம் சேர்த்து வினியோகிக்கப்படுகிறது.
நெரிசல் இல்லாமல் பொதுமக்கள் வாங்கி செல்ல வசதியாக தெரு வாரியாக பிரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. ஒரு கோடியே 97 லட்சம் பேர் அரிசி பெறக்கூடிய ஸ்மார்ட் கார்டுகளை பயன்படுத்தி இந்த வாய்ப்பைப் பெற்று வரும் நிலையில் பொங்கல் தொகுப்பு பெறுவதற்கு இன்று கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுவரையில் வாங்காதவர்கள், வெளியூர் சென்றவர்கள், முறையான ஆவணங்களை கொடுக்காமல் இருந்தவர்களுக்கு இன்று வழங்கப்படுகிறது. இன்று மாலை 6 மணி வரை பொங்கல் பரிசு வினியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான கால அவகாசத்தை மேலும் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொங்கல் பரிசு வாங்காதவர்கள், ஜனவரி 21-ம் தேதி வரை சம்பந்தப்பட்ட ரேசன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விடுபட்டவர்கள் பொங்கல் முடிந்த பிறகும் பொங்கல் பரிசை வாங்கலாம்.
Related