நல்ல நடிகரான சார்லியைப் படங்களில் கூட அவ்வப்போதுதான் பார்க்கிறோம். நேரில் பார்ப்பதும் அப்படித்தான். அப்படி ‘டர்னிங் பாய்ன்ட் புரடக்ஷன்ஸ்’ தயாரிக்கும் ‘பிழை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பார்க்க நேர்ந்தது. படத்தில் அவரும் நடித்திருக்கிறார்.
அவருக்கும் நம்மைப் பார்த்தது அப்படித்தான் இருந்தது போல. “காடு, மலை, யானை இவற்றையெலாம் பார்ப்பதற்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்குமோ அப்படி இருக்கிறது உங்களையெல்லாம்ம் பார்ப்பதற்கு…” என்று பேச ஆரம்பித்தவர் படத்தைப் புகழ்ந்து தள்ளினார்.
“படத்தில் சின்னப்படம் எது, பெரிய படம் எது என்பதெல்லாம் ரிலீஸுக்கு முன்னால் தெரியாது. படம் வெளியானதும்தான் ‘அது பெரிய படம்’ என்பார்கள். அப்படி ஒரு படம்தான் இந்தப் ‘பிழை’. போட்ட பணத்தை எடுக்கும் படங்களுக்கு மத்தியில் ஒரு நல்ல விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்று எடுக்கப்பட்ட… தைரியமான படம் இது.
கதை எங்கே நடக்கிறதோ அங்கேயே போய் எடுத்தார்கள். ஆறு மணிக்குக் கிளம்பி பதினோரு மணிக்கு லொகேஷனுக்குப் போய் 12 மணி உச்சி வெயிலில் கல் குவாரியில் நடித்தோம். அவ்வளவு நம்பகத்தன்மை இருக்கிறது படத்துக்குள்.
இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா ஒரு சிறந்த ஓவியர். அதனால்தான் படத்தையும் காட்சிக்குக் காட்சி ஓவியமாக எடுத்திருக்கிறார். என்னையும் மேக்கப் இல்லாமல் டை அடிக்காமல் இயல்பான தாடியுடன் நடிக்க வைத்திருக்கிறார்.
நடிகனுக்கும், அரசியல்வாதிக்கும்தான் தகுதி தேவையில்லை. ஆனால், இது இரண்டிலும் நிலைபெற நிறைய உழைப்பையும், தியாகத்தையும் செலவிட வேண்டும். அப்படி நாடகத்திலிருந்து கிளம்பி வந்தவர்கள் நான், மைம் கோபி போன்றோர்.
நீண்ட காலத்துக்குப் பிறகு பைசல் இசையில் பாடல்வரிகள் புரியும்படி இருக்கின்றன. இதில் நடித்த கோகுல் போன்ற சிறுவர்களும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள். வெளியானதும் இந்தப்படம் பேசப்படும் படமாக இருக்கும். தலைப்பில் ‘பிழை’ இருந்தாலும் பிழையில்லாத வெற்றிப் படமாக இருக்கும்..!”