September 15, 2024
  • September 15, 2024
Breaking News
April 27, 2018

ஆட்சி அமைக்க அழைத்தும் மறுத்த பிட்டி தியாகராயர்

By 0 1467 Views

பார்ப்பனரல்லாதார் இயக்கத்தைத் தோற்றுவித்த மும்மூர்த்திகள் டாக்டர்சி.நடேசனார், பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர் ஆவர்.

இந்தப் பெருமக்களை திராவிட இனம் உள்ளவரைக்கும் தமது இதயப் பேழையில் பொன்னெழுத்துகளால் இந்த முப்பெரும் முத்துக்களாகப் பொறித்து வைப்பர் என்பதில் அய்யமில்லை.

1920 சட்டப்பேரவைத் தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்றும், அதன் தலைவரான பிட்டி தியாகராயரைத் தலைமையேற்று ஆட்சியை அமைக்க ஆளுநர் அழைத்தும், சென்னை மாநில பிரதமர் பதவியை (அப்பொழுது அவ்வாறு தான் அழைக்கப்பட்டது) தான் ஏற்காமல், தன் கட்சியைச் சேர்ந்த கடலூர் சுப்பராயலு ரெட்டியாரைப் பிரதமராக்கி மகிழ்ந்த பெருமகன் இவர் ஆவார்.

*(அதேபோல, இருமுறை சென்னை மாநில பிரதமராகப் பதவியேற்க அழைக்கப்பட்டும் அதனை உதறித் தள்ளிய பெருமகன் தந்தை பெரியார் ஆவார்.)*

பதவியே அரசியல் என்று சிறகடித்துப் பறக்கும் மனிதர்களுக்கு நமது முன்னோர்களான முன் னணித் தலைவர்கள் எப்படி நடந்து காட்டினார்கள் பார்த்தீர்களா?

சென்னை மாநகர முதல் மேயரான பிட்டி தியாகராயர் அந்தப் பதவியைப் பொறுப்பாகக் கருதி ஆற்றிய தொண்டு குறிப்பாகக் கல்விப் பணிகள் அளப்பரியன.

1898 ஆம் ஆண்டு தியாகராயர் சென்னைப் பல்கலைக் கழகத்தின் மதிப்பியல் உறுப்பினராகத் (Fellow of the Madras University)தேர்ந்தெடுக்கப்பெற் றார். அவர், பல்கலைக் கழக ஆட்சிக் குழுவிலும், பிற துறை களிலும் பார்ப்பனரல்லாதார் இடம்பெற முடியாத நிலை இருப் பதை நேரடியாக உணர்ந்தார். எனவே, 1910 இல் சட்டமன்ற உறுப்பினரானவுடன், பல்கலைக் கழகத்திற்குரிய தேர்தல்களிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அமையவேண்டும் என்று வற்புறுத் தினார்.

பின்னர் தியாகராயரின் தலைமையில் நீதிக்கட்சி ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், சென்னைப் பல்கலைக் கழகச் சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப் பெற்றன. ஆந்திரப் பல்கலைக் கழகம் ஏற்படுத்தப் பெற்றது. சென்னை, ஆந்திரப் பல்கலைக் கழகங்களுக்கான சட்ட வரைவு நிறைவேற்றப் பெற்றது. சென்னைப் பல்கலைக் கழகம் தமிழுக்குச் சிறப்பிடம் தராததால் தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும், தமிழ் நூல்கள் அச்சிடப் பெறுவதற்காகவும் அண் ணாமலைப் பல்கலைக் கழகம் நிறுவப் பெற்றது.

தியாகராயர் ஆங்கிலம் கற்க வேண்டியதன் இன்றியமை யாமையை உணர்ந்ததுடன், நம் நாட்டு மொழிகளும் அத்துடன் இணைந்து வளர்ச்சியுற வேண்டு மென்று விரும்பினார். நம் நாட்டு மொழிகளிலேயே கல்வி கற்பிக்கப் பெறவேண்டும்; அதே நேரத்தில் ஆங்கிலத்திலும் நாம் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கவேண்டும். இணைப்பு மொழி ஆங்கிலமாக இருக்கவேண்டும் என்பதே அவரது மொழிக் கொள்கையாகவும் இருந்தது.

அத்தகைய பெருந்தகை பிட்டி தியாகராயரின் 167 வது பிறந்ததினம் இன்று..!

*நன்றி : “விடுதலை” நாளிதழ் 27-04-2018.*