May 11, 2024
  • May 11, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • மம்மூட்டியுடன் நடிக்க பயமில்லை தனுஷுடன் நடிக்கையில் பயந்தேன் – பாவெல் நவகீதன்
October 17, 2018

மம்மூட்டியுடன் நடிக்க பயமில்லை தனுஷுடன் நடிக்கையில் பயந்தேன் – பாவெல் நவகீதன்

By 0 1970 Views

‘குற்றம் கடிதல்’, ‘மெட்ராஸ்’, ‘மகளிர் மட்டும்’ படங்களில் தனித்துவமாக நடித்த பாவெல் நவகீதன் இப்போது ‘பேரன்பு’ படத்திலும், ‘வட சென்னை’யிலும் நடித்திருக்கிறார். தன்னைப் பற்றி அவர் கூறியது…

“எனது ஊர் செங்கல்பட்டு. அங்குதான் பள்ளிப் படிப்பை முடித்தேன். ஆனாலும் படிப்பு ஏறவில்லை. எனது ஆசிரியர் என் அப்பாவிடம் உங்கள் மகனுக்கு நன்றாக கற்பனை வளம் இருக்கிறது. ஆகையால் VIS COM படிக்க வையுங்கள் என்றார்.

லயோலாவில் முயற்சி செய்தோம். ஆனால், மதிப்பெண் குறைவாக எடுத்ததால் ‘சமூகவியல்’தான் கிடைத்தது. இரண்டாம் வருடம் காலையில் Socialogy-யும், மாலையில் VISCOM – மும் பயின்றேன். அப்போது இயக்குநராகத் தான் ஆக வேண்டும் என்ற எண்ணம் வந்தது.

அங்கு எனக்கு சீனியரான ‘குற்றம் கடிதல்’ படத்தின் இயக்குநர் பிரம்மா சார் அறிமுகம் கிடைத்தது. பிறகு ‘நாளந்தா வே’ என்ற அமைப்பில் 5 வருடம் குழந்தைகளுக்கு புகைப்படம் எடுத்தல், கதை எழுதுதல், வாழ்க்கைத் திறன், குறும்படம் எடுத்தல் போன்ற துறைகளில் பயிற்சியாளராக இருந்தேன்.

பிரம்மா சார் மூலம் ‘குற்றம் கடிதல்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவே நடித்தேன். அதன் பின் ரஞ்சித் சார் இயக்கத்தில் ‘மெட்ராஸ்’ படத்தில் விஜி என்ற கதாபாத்திரமும் நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது.

அந்த படத்தில் நடித்தாலும் இயக்குனராக வேண்டும் என்ற ஆசை மட்டும் அப்படியே இருந்ததால், ஒரு படம் இயக்கவும் செய்தேன். ஆனால் இரண்டு மாதத்தில் படம் பாதியில் நின்று விட்டது. மூன்று மாதங்களுக்குப் பிறகு படத்தை இயக்கி முடித்தேன்.

அப்படத்தில் நான் நடிக்கவில்லை. கதாநாயகன் கேஸ்ட்ரோ அருண். இவர் ஏற்கனவே ஒரு படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. மலையாளத்தில் சுமார் 15 படங்களில் நடித்த விஷ்ணுப்ரியா கதாநாயகியாக நடித்திருக்கிறார். இது ஒரு திரில்லர் படம். இப்படத்தைப் பற்றிய மேலும் தகவல்களை படம் வெளியாகும் போது கூறுகிறேன்.

இதன் பிறகு ‘மகளிர் மட்டும்’ படத்தில் நடித்தேன். அப்படமும் எனக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. இந்நிலையில், வடசென்னையில் நடிக்கும் வாய்ப்பு வந்தபோது கதையைப் பற்றியும், எனது கதாபாத்திரத்தைப் பற்றியும் எதுவும் கேட்கவில்லை. அந்த அளவுக்கு இயக்குநர் வெற்றி மாறன் சார் மீது நம்பிக்கை இருக்கிறது.

எனது நடிப்பைப் பார்த்து எனது கதாபாத்திரத்தை நீடிக்கச் செய்திருக்கிறார். மேலும், வெற்றி மாறன் சார் என்னிடம் படம் இயக்குவதை பிறகு பார்த்துக் கொள். நடிப்பு உனக்கு நன்றாக வருகிறது என்று ஊக்குவித்தார்.

ஆகையால், இனிமேல் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். வடசென்னையில் பவனுக்கு தம்பியாக ‘சிவா’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இந்த கதாபாத்திரத்தைப் பற்றி குறிப்பிட்டு சொல்ல முடியாது. மம்முட்டி சாருடன் ‘பேரன்பு’ படத்தில் நடித்திருக்கிறேன். அந்த படத்திற்காகக் காத்திருக்கிறேன்.

மம்முட்டி சாருடன் நடிக்கும்போது கூட பயம் வரவில்லை. வடசென்னையில் நடிக்கும்போது பயத்துடன் தான் நடித்தேன். ஏனென்றால், தனுஷ் சாரும், சமுத்திரக்கனி சாரும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த பிறகுதான் அவர்களுக்கான வசனம் கொடுக்கப்படும். அவர்களும் அதைப் படித்து விட்டு எளிமையாக நடித்துவிடுவார்கள். நாமும் இப்படி திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன்.

இனி தொடர்ந்து நடிப்பதுடன் படம் இயக்கவும் செய்வேன்..!”