April 26, 2024
  • April 26, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • என் மனைவி கொடுத்த தைரியம்தான் பரியேறும் பெருமாள் – பா.இரஞ்சித்
September 10, 2018

என் மனைவி கொடுத்த தைரியம்தான் பரியேறும் பெருமாள் – பா.இரஞ்சித்

By 0 835 Views

‘நீலம் புரொடக்சன்ஸ்’ சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் முதல் படம் ‘பரியேறும் பெருமாள்.’ இத்திரைப்படம் செப்டம்பர் 28ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் கலைஞர்களுடன் தன் சீடனுக்காக இயக்குநர் ராம் கலந்து கொண்டார். இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக இருந்தவர்தான் இந்தப்பட இயக்குநர் ‘மாரி செல்வராஜ்’என்பது குறிப்பிடத் தக்கது.

நிகழ்வில் இயக்குநர் பா.இரஞ்சித் பேசுகையில்…

“ஒரு தத்துவம் என்பது நமக்கு முன்னால் உறுதியாக வாழ்ந்தவர்களில் இருந்தே பிறக்கிறது. அப்படி எனக்கு முன்னோடியாக புரட்சியாளர் அம்பேத்கர் மட்டுமே இருக்கிறார்.

அவர் ஒரு விஷயத்தை வேதனையோடு சொன்னார். நான் கஷ்டப்பட்டு ஒருதேரை இழுத்து வந்து ஒரு இடத்தில் நிறுத்தி இருக்கிறேன். தயவுசெய்து அதைப் பின்னோக்கி இழுத்து விடாதீர்கள் என்று சொன்னார். நிச்சயமாக அந்தத் தேரை நான் முன்னோக்கி இழுத்துச் செல்வேன். அதற்கான ஆரம்பம்தான் இந்த ‘பரியேறும் பெருமாள்’ படம்.

நான் போகும் பாதை சரியா என நான் யோசிக்கும் போதெல்லாம், என் மனைவி அனிதாதான் எனக்கு ஊக்கமளிப்பார். “நாம் எங்கிருந்து வந்தோம் என்று நமக்குத் தெரியும். இப்போதிருப்பது இல்லாமல் போனாலும் ஒன்றும் பிரச்சனை இல்லை. நீ செய்யும் வேலையை நிறுத்தாதே..!” என தைரியம் கொடுப்பார். அவர் கொடுத்த தைரியம் தான் இந்த ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம்.

அந்தளவிற்கு மாரி செல்வராஜ் சமரசமில்லாத ஒரு சினிமாவை உருவாக்கித் தந்திருக்கிறார். சந்தோஷ் நாரயணன் இசை படத்திற்கு மிக முக்கியமான தூணாக அமைந்திருக்கிறது. மொத்தத்தில் எனக்கு பிடித்த, நான் நம்புகிற சினிமாவாக பரியேறும் பெருமாள் வந்திருக்கிறது..!” என்றார் சற்றே உணர்ச்சிகரமாக.

இயக்குநர் ராம் பேசுகையில்,

“இந்தப்பட இயக்குநர் மாரிசெல்வராஜ், ஒரு வாழ்வியலை வலியை வாழ்க்கையைப் பதிய வைத்திருக்கிறார். இயக்குநர் ராமின் உதவி இயக்குநர் மாரிசெல்வராஜ் என்பதை விட, மாரிசெல்வராஜின் இயக்குநர் ராம் என்று அடையாளப்படும் நாளை எதிர்பார்க்கிறேன். பரியேறும் பெருமாள் தமிழ் சினிமாவின் அடையாளம், தமிழ் சினிமாவின் அழகியல்…!” என்றார்.

இயக்குநர் மாரி செல்வராஜ் பேசும் போது,

“இந்தப் படத்தைப் பற்றி பேசுவதிலோ, முக்கியமான விசயங்களைப் பகிர்ந்து கொள்வதிலோ எனக்கு எந்த பயமும் இப்போது இல்லை. காரணம் ராம் சாரும், இரஞ்சித் அண்ணனும் எனக்கு தைரியத்தை தந்திருக்கிறார்கள்.

முதலில் நான் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்த இந்த 12 ஆண்டுகளில் என் வளர்ச்சிக்கு பல வழிகளிலும் துணை நின்றவர்களுக்கும் நன்றி. ஜாலியான ஒரு படம் செய்யலாம் என்ற நோக்கத்தில் எழுத ஆரம்பிக்கப்பட்ட கதைதான் ‘பரியேறும் பெருமாள்’. ஆனால், போகப் போக அதன் வடிவமே மாறிப்போனது.

சட்டக் கல்லூரி படிக்கும் போது நான் கடந்து போன பல மனிதர்களும், சம்பவங்களும் இந்தப் படத்தை வேறு தளத்திற்கு எடுத்துப் போயிருக்கின்றன. இந்தக் கதையை கேட்டதும், உடனே ஆரம்பிக்கலாம் என முடிவெடுத்தவர் இரஞ்சித் அண்ணன். ஒரு முதல் பட இயக்குநராக எனக்களிக்கப்பட்ட முழுமையான சுதந்திரம்தான் இந்தப் படத்தை நான் நினைத்த மாதிரி எடுக்க உதவி இருக்கிறது.

இன்று இங்கு என் குடும்பத்தினர் யாரும் இல்லை, ஆனால் மொத்தமாக ராம் சார் இங்கிருக்கிறார்..!” என்று நெகிழ்வாகப் பேசினார்.