மின்விசிறிக் காற்றுக்கும், பதனம் செய்யப்பட்ட குளிருக்கும் பழக்கப்பட்டுவிட்ட நம் உடல் கூட ஜன்னலோரம் எப்போதோ வீசும் இயற்கைக் காற்று பட்டதும் சிலிர்க்கிறது அல்லவா..? வெள்ளித்திரையிலும் அதுபோன்ற ஒரு அனுபவம் எப்போதாவதுதான் நேரும்.
அப்படியான ஒரு சிலிர்ப்புதான் இந்தப்படம். ஆதிக்க மனிதர்களின் சுயநல வக்கிரத்தால் பின்தங்கிவிட்ட சமூகத்தில் பிறந்த ஒரு மனிதன், வாழ்வாதாரம் மட்டுமல்லாமல் கல்வி, காதல், தேடல், வழிகாட்டல் என்று வாழ்வின் சகல தேவைகளுக்கும் எப்படிப் போராட நேர்கிறது என்கிற ஒற்றைக் கோடுதான் கதையின் ஒற்றை வரியும்.
அந்த வேதனையையும் வலியையும் இயல்பாக நம்மிடம் கடத்துவதில் வெற்றி கண்டிருக்கிறார் இயக்குநர் மாரிசெல்வராஜ். கலை வடிவமான சினிமாவைக் காசுக்காகப் பயன்படுத்தாமல் சமூகம் சார்ந்து பயன்படுத்துவதில் “நான் வேற மாறி…” என்று புரியவைத்த ‘மாரி’க்கு வந்தனங்கள்..!
ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நாயகன் வேடத்தில் கதிர். படித்து முன்னேற வேண்டிய அவசியம் புரிந்து சட்டக் கல்லூரியில் சேர்ந்து சூழ்ந்து வரும் இன்னல்களின் வீரியம் புரியாமல் எதையும் எதிர்கொள்ளும் அப்பாவித் தனத்தில் கவர்கிறார். தன் பெயரைச் சொல்லும்போது ‘பிஏபிஎல்’லையும் சொல்லி ‘மேல ஒரு கோடு’ என்பது அந்த அப்பாவித் தனத்தின் வெளிப்பாடுதான்.
தனக்கு கல்லூரியில் சீட் கிடைத்ததும் “நான் டாக்டர் ஆகிடுவேன்…” என்று கதிர் மகிழ்வதும் திடுக்கிட்ட கல்லூரி முதல்வர் “நீ படிக்கப் போறது சட்டம். அட்வகேட்தான் ஆக முடியும்…” என்று சொல்ல அதற்கு, “நான் சட்டம் படிச்சு டாக்டர். அம்பேத்கார் ஆகப் போறேன் சார்…” என்று கதிர் விளக்கம் சொல்வது அபாரம்.
அப்படி கதிர் சொல்வதையும் அவரது விண்ணப்பத்தில் குறித்துக் கொள்ளும் முதல்வர் “பின்னால இவன் ஏதாவது தப்பு செய்து மாட்டும்போது உதவும்…” என்பதுவும் அந்தக் கேரக்டருக்கான நியாயம்.
ஆங்கிலம் வராத கதிரின் கேரக்டர் வெறும் கற்பனையானது அல்ல. விளிம்புநிலை மனிதர்களுக்கான கல்வியில் இந்த ஆங்கிலம், கணக்கு பயிற்றுவிக்கும் ஆரிசியர்கள் சரியாக அமையாமல் போனதால் உயர்கல்வியைத் தொடர முடியாத அவலம் காலம் காலமாக நம்மைச் சார்ந்திருக்கும் கல்விக் குறைகளுள் ஒன்று. அதில் தொடங்கி தன் அவலங்களைத் தனக்குள்ளேயே அடக்கிவைத்து காலம் கனியக் காத்திருக்கும் ஒடுக்கப்பட்ட சமூகத்து ஒவ்வொரு இளைஞனின் குறியீடு அவர்.
வெற்றுக் கால்களுடன் வெயில், காடு பாராமல் ஓடுவதில் தொடங்கி தன் நாயைக் காப்பாற்றக் கூடத் துப்பில்லாத அவர் கடைசியில் தன் காதலின் அடையாளத்தையும் உணரமுடியாமல் “அது காதலா என்னன்னு தெரியறதுக்குள்ளயேதான் நாயடிக்கிற மாதிரி கிழிச்சுத் தொங்க விட்டுட்டீங்களே சார்..?” என்று அமைதியாக தோழியின் அப்பாவிடம் கேட்பது மனதை உருக வைக்கும் இடம்.
தன் உண்மையான தந்தையைக் கல்லூரிக்கு அழைத்து வர முடியாத நிலையில் அதற்காக ஒரு ‘செட்டப்’ தந்தையை கதிர் அழைத்து வருவதென்பது சினிமா ஆரம்பித்த நாளிலிருந்து நாம் பார்த்து வரும் காட்சிதான்.
ஆனால், ஏன் அவர் தன் தந்தையை அழைத்து வர முடியவில்லை என்பதற்கான காரணமும், அந்தக் காட்சியில் தந்தையாக ‘செட்டப்’ செய்து அழைத்துவரப்பட்ட சண்முகராஜன் செய்யும் அதகளமும் அருமையானவை.
தவிர, தொடரும் காட்சியில் கதிரின் உண்மையான தந்தையை நமக்கே அறிமுகப்படுத்தும்போது திடுக்கிட வைக்கிறது அந்தத் தந்தையின் பாத்திரம். அடுத்தமுறை அவரைக் கல்லூரிக்கு கதிர் அழைத்து வருவதும் அவருக்கு நேரும் அவமானங்களும் எதிர்பாராத அதிர்ச்சிகள். அந்த அவமானத்தையும் கூட”உங்கப்பாவுக்கு இன்னைக்கு நேத்தா இந்த அவமானம் நடக்குது..?” என்று சகித்துக்கொள்ளச் சொல்லிக் கேட்கும் கதிரின் தாய் கலங்க வைக்கிறார்.
அந்தப் பாத்திரங்களில் நடித்திருக்கும் ஜோடி அற்புதமான தேர்வு. அவர்கள் மட்டுமல்லாமல் குலதெய்வத்துக்கு செய்யும் சேவையாக கூலி வாங்காமல் கொலைகளை அடுத்தவர் அறியாமல் செய்து முடிக்கும் அந்த ஆதிக்க சாதிப் பெரியவரும் மிரள வைக்கிறார். அந்தக் கொலைகளெல்லாம் மறுநாள் தினசரிகளில் வழக்கமான மரணச் செய்திகளாக வந்து ஊர் உலகத்தை நம்ப வைப்பது நம் சமுதாயத்தில் உறைந்து போயிருக்கும் குரூர உண்மை.
அந்தப் பெரியவர் கடைசியில் தனக்கே கொடுத்துக் கொள்ளும் தண்டனை கூட சாதீயம் எந்த அளவுக்கு ஆதிக்க மனம் படைத்தவர்களிடம் ஆலவேராய் ஊன்றிப்போய் இருக்கிறது என்பதற்கு சாட்சி.
தன் குடும்பம், சாதியின் அழுத்தங்கள் தெரியாமல் ‘சுதந்திர அப்பிராணி’யாக வரும் (கயல்) ஆனந்தியும் முயல் குட்டியாகக் கவர்கிறார். கதிரின் மேல் பரிவு காட்டி அது காதலாக மலர மலர நமக்கு பதைதைக்கிறது. ஒரு கட்டத்தில் தன் காதல் நியாயமில்லையோ என்றுணர்ந்து நட்பாகவாவது கதிரின் உறவைத் தொடர அவர் சத்தியம் வாங்கிக் கொள்வது நெகிழ்ச்சி.
ஆனந்தியின் தந்தையாக வரும் மாரிமுத்துவும் அற்புதமான தேர்வு. ஆதிக்க சாதியிலும் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதுவும், ஒரு குடும்பத்துக் கொலையும், தற்கொலையும் கூட அவர்களாக விரும்பாவிட்டாலும் உடன் இருக்கும் சாதீயம் கொடுக்கும் அழுத்தம்தான் என்பதையும் இயக்குநர் இந்தப் பாத்திரத்தின் மூலம் தீர்க்கமாகச் சொல்லியிருக்கிறார்.
மாரிமுத்துவின் ‘இனம்’ என்னவென்று சொல்லாவிட்டாலும் அவரது மூத்த மகளின் திருமண அலங்காரத்தில் ஒரு நடிகரின் படத்தை வைத்து புரிந்துகொள்ளச் செய்துவிடுவது இயக்குநரின் புத்திசாலித்தனம். ‘இளையராஜாக்கள் கபடிக்குழு’வும் கூட அப்படி ஒரு குறியீடே.
மிக அழுத்தமான இந்தக் கதையின் கனம் தெரியாமல் நம் தலைமீது இறக்கிவைக்க இயக்குநர் நம்பிய முக்கியப் பாத்திரம் யோகிபாபு. “நான்சென்ஸ்…” என்று திட்டும் ஆசிரியரிடம் “ஸேம் டூ யூ…” சொல்லிக் கல்லூரிக் காட்சிகளில் கலகலக்க வைக்கிறார்.
கதையின் ஒட்டுமொத்த செய்தியை கல்லூரியின் அடுத்த முதல்வராகப் பணியேற்ற ‘பூ’ ராமுவின் மூலம் சொல்கிறார் ‘மாரி’.
தனக்கு முன்பிருந்த முதல்வர் கதிரின் விண்ணப்பத்தில் எழுதி வைத்த ‘டாக்டர் அம்பேத்கராக விரும்பிய மாணவன்’ என்ற வாசகத்தைப் படித்துப் புரிந்து கொண்டவராக கதிரின் மேலான குற்றங்களுக்கு சாம, பேத, தானங்கள் தந்ததன் முடிவில் நிலைமையைச் சரியாகப் புரிந்து கொண்டு கதிரிடம், “எங்கப்பா செருப்பு தைச்சவர்தான். என்னையும் பன்னியைப் பார்க்கிறமாதிரிதான் பாத்துச்சு உலகம். ஆனா, நான் பேயாப் படிச்சு இன்னைக்கு இந்த நிலைமைக்கு வரவே, எல்லோரும் கையெடுத்துக் கும்பிடறாங்க. நீயும் படிச்சு மேலே வா. இதுக்கு மேல உனக்கு எது சரின்னு தோணுதோ அதைச் செய்.!” என்று தண்டனை கொடுக்காமல் அனுப்புகிறார்.
அதைக் கண்ட பேராசிரியை, “இப்படிச்சொல்லி அனுப்பினா அவன் மீண்டும் சண்டைக்குப் போயிடப் போறான் சார்..!” என்று பதற, “போகட்டும். ரூமுக்குள்ள தற்கொலை பண்ணிக்கிட்டு சாகறதைவிட போராடிச் சாகட்டும். எத்தனை காலம் இப்படி அடக்கி வைக்கிறது..?” என்று அமைதியாக ஆனால் அழுத்தமாகச் சொல்லும் இடம் எழுந்து நின்று கைத்தட்ட வேண்டிய கட்டம்.
அதே முதல்வர் முன்னால் வேறு முதல்வர் இருந்த கட்டத்தில் ஒரு காட்சியில் ஒரு பேராசிரியராக… அதுவும் முக்கியக் காட்சியில் இல்லாமல் காட்சியின் பின்னணியில் நின்று கொண்டிருந்த காட்சியை கவனமாகப் பதிவு செய்திருக்கும் ‘மாரி’யின் இயக்கத் திறன் வியக்க வைக்கிறது.
இந்தக் கதையை இன்னும் பெருவலியுடன் முடித்திருக்க முடியும். ஆனால், என்ன நடைபெற வேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ அது நடைபெற வேண்டும் என்கிற நம்பிக்கையில் முடிகிற கிளைமாக்ஸ் கலை வெளிப்பாட்டின் காரண காரியத்தைக் கச்சிதமாக உணர்த்திவிடுகிறது. ‘கடும் டீ, பால் கலந்த டீ’ கிளாஸ்களுக்கு மத்தியில் விழுந்திருக்கும் மல்லிகைப்பூ ‘கிளாஸ்’ கற்பனை. அழகிய விடியலை விரும்பும் அற்புதக் குறியீடு அது.
படத்தில் குறை சொல்லியே ஆக வேண்டுமென்றால் அதன் நீளத்தைச் சொல்லலாம். கல்லூரிக் காட்சிகளில் கொஞ்சம் கைவைத்து பட வெளியீட்டுக்கு முன்பே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கருப்பி’ நாயின் வேட்டை எபிசோடை அதிகப்படுத்தியிருந்தால் களத்தின் இன்னொரு சுவாரஸ்யத்தை நாம் ரசித்திருக்க முடியும். ‘கருப்பி’க்கான அஞ்சலிப் பாடலின் வலியையும் நாம் முழுமையாக உணர்ந்திருக்க முடியும்.
களத் தேர்விலும் எங்கே இந்தக் கதை நடைபெற வேண்டுமோ அங்கேயே புளியங்குளம், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, தூத்துக்குடி என்று அந்தந்த மண்ணிலேயே படமாக்கப்பட்டிருப்பதும் ஆகச்சிறப்பு. படத்தின் ஆக்கத்தில் பங்கேற்ற அனைவருமே பாராட்டுக்கும், பெருமைக்கும் உரியவர்கள்.
‘எல்லாப் புகழும் இயக்குநர் மாரிக்கே’ என்றாலும் இப்படியான நல்ல கருத்துகள் கொண்ட எத்தனையோ படங்களுக்குத் தேவையான படைப்புச் செலவு கிடைக்காமல் நேர்த்திக் குறைவுடன் குறைப்பிரசவங்களாக வெளியாகி நாம் கவனிக்காமல் கடந்து போன படைப்புகள் இங்கே ஏராளமாக இருக்க… அப்படி ஆகிவிடாமல் ஒளிப்பதிவுக்கு ஸ்ரீதர், இசைக்கு சந்தோஷ் நாராயணன் என்று தந்து படைப்பை நேர்த்தியாக்கியதுடன், சிறந்த வெளியீட்டுக்கான சாத்தியத்தையும் தந்து மக்களிடம் சரியாகக் கொண்டு சேர்த்த ‘நீலம் புரடக்ஷன்ஸ்’ தயாரிப்பாளர் பா.இரஞ்சித்துக்கும் புகழில் பாதி சேரும்.
பரியேறும் பெருமாள் – குறிஞ்சியாகக் கொண்டாட வேண்டிய நெருஞ்சி..!
– வேணுஜி