October 10, 2024
  • October 10, 2024
Breaking News
September 5, 2023

நூடுல்ஸ் திரைப்பட விமர்சனம்

By 0 563 Views

உலகிலேயே மிகப்பெரிய வன்மமும், பழிவாங்கலும் ஒருவரது ஈகோவைச் சுட்டு விடுவதில் இருந்துதான் தொடங்குகிறது. அதுதான் இந்தப் படத்தின் அடிநாதம்.

மெல்லிய லைன்தான் இந்த படத்தின் கதைக்களம். அதுவும் ஒரு வீட்டு காம்பவுண்ட் சுவருக்குள்ளேயே முடிகிற கதை. பின் இரவில் தொடங்கி அடுத்த நாள் காலைக்குள் முடிவுறும் இந்தக் கதை ஒரே ஒரு காட்சியில் மட்டுமே  காம்பவுண்ட் தாண்டி பக்கத்து தெருக் கடை வரை போகிறது.

நடுத்தர வர்க்கக் குடியிருப்பின் ஒரு பகுதி. வார இறுதி நாட்களில் ஒரு காம்பவுண்டுக்குள் குடியிருக்கும் மூன்று குடும்பங்களும் சேர்ந்து மொட்டை மாடியில் லூட்டி அடிப்பது வழக்கம்.

அது அக்கம் பக்கத்தில் இருக்கும் – குறிப்பாக ஒரு காவல்துறை ஊழியருக்கு சங்கடத்தைக் கொடுக்க அவர் போலீசில் புகார் கொடுக்கிறார். ரோந்துக்கு வரும் அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் மற்றும் ஹெட் கான்ஸ்டபிள் இருவரும் அவர்களை எச்சரிக்க, கதை நாயகனாக வரும் ஹரிஷும் அவர் மனைவி ஷீலாவும் வாய் துடுக்காக அந்த இன்ஸ்பெக்டரின் ஈகோவைச் சுட்டு விடுகிறார்கள்.

பழிவாங்குவதில் பலே கில்லாடியானவர் அந்த இன்ஸ்பெக்டர் என்று தெரிய வருகிறது. இவர்களைப் பற்றி அந்த இன்ஸ்பெக்டர் இரவெல்லாம் விசாரித்துக் கொண்டிருக்கிறார் என்ற தகவலும் அறியும்போது ஹரிஷுக்கு இதயம் ஒரு கணம் நின்று துடிக்கிறது. 

அத்துடன் காதல் மணம் புரிந்த ஜோடியாதலால் அவரது மனைவி ஷீலாவின் தாயும் தந்தையும் கோபத்துடன் பேசாமல் இருக்க, பல வருடங்கள் கழித்து காலையில் அவர்கள் வீட்டுக்கு வருவதாகத் தகவல் வதிருக்கிறது.

இந்நிலையில் அதிகாலையில் அவர்கள் குழந்தையின் கையில் இருந்த செல்போனை பிடுங்க வந்த திருடனை ஷீலா இழுத்துத் தள்ள அவன் வீட்டுக்குள் வந்து விழுந்து நினைவிழக்கிறான். 

இத்தனை பிரச்சனைகளுக்கு இடையில் இந்தக் கொலைக் கேசும் சேர்ந்து விட்டால் தங்கள் நிலை என்ன என்று பயந்து போன ஹரிஷ் பக்கத்துத் தெரு வக்கீலை நாடுகிறார்.

வக்கீலும் இவர் வீட்டுக்கு வந்து இருவரும் பிணத்தை அப்புறப்படுத்த எத்தணிக்க அந்த நேரம் பார்த்து பழிவாங்கும் எண்ணத்தில் இன்ஸ்பெக்டர் வந்துவிட… அடுத்த ஒரு மணி நேரம் ‘பக் பக்…’ நிமிடங்கள்தான்.

பல படங்களில் தன் அற்புத நடிப்பின் மூலம் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகராக நம் மனதுக்குள் இடம் பிடித்திருக்கும் ‘அருவி மதன்’தான் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் என்பது ஆச்சரியமான விஷயம். 

இயக்குனர் ஆனதில் ‘மதன் தக்ஷிணாமூர்த்தி’ என்று பெயரையும், தன் திறமையையும் நீட்டித்திருக்கிறார்.

அவரது நடிப்புத் திறன் நாம் அறிந்ததுதான். ஆனால் அவருக்குள் இப்படி ஒரு இயக்குனர் இருக்கிறார் என்பதும் வியப்புக்குரிய விஷயமாக ஆகி இருக்கிறது.

அத்துடன் இந்தப் படத்தில் பழிவாங்கும் இன்ஸ்பெக்டராக வந்து மிரட்டி இருக்கிறார்  ம(னி)தன். ஒரு கட்டத்தில் அவர் மீது நமக்கு சினம் ஏற்படுவது நிஜம். அதே நேரத்தில் மக்கள் நினைப்பது போல் போலீஸ் வேலை அத்தனை சுலபமானது இல்லை என்று அவர் புரிய வைக்கும் இடமும் யோசிக்க வைக்கிறது.

வழக்கமாக நிறைய படங்களில் வில்லனாக வந்துவிட்ட ஹரிஷுக்கு இதில் நாயகன் வேடம். அதிலும் தன் குடும்பத்துக்கு ஏதும் நடந்து விடக்கூடாது என்று அஞ்சுகிற சராசரி குடும்பத் தலைவனின் வேடம்.

ஏதோ ஒரு ஃபுளோவில் இன்ஸ்பெக்டரிடம் “எனக்கு உங்களை விடப் பெரிய போலீஸ் அதிகாரிகள், அமைச்சர்கள் எல்லாரையும் தெரியும்…” என்று உதார் விட்டு வைக்க, அதுவே அவருக்கு வினையாகிப் போவது பரிதாபம்.

இன்ஸ்பெக்டர் வேடத்தில் ஹரிஷ் வந்திருந்தாலும் மிகப் பொருத்தமாக இருந்திருக்கும் என்றாலும் அதற்கு நேர் எதிரான இந்த அப்பாவித்தனமான வேடத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.

அவரது மனைவியாக வரும் ஷீலா வழக்கமாகவே மீட்டருக்கு சற்று அதிகமாக நடிக்கக் கூடியவர் என்றாலும் இந்தப் படத்தில் இயல்பாக நடித்திருப்பது ஆறுதல். அப்படியும் ஹரிஷ் அந்தக் கொலையை தான் செய்ததாக போலீஸிடம் சொல்லப் போகிறேன் என்று சொல்வதன் பொருளைப் புரிந்து கொள்ளாமல் “நான்தானே செய்தேன்..?” என்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கும் போது நமக்கே ஒரு அரை விடலாம் போலிருக்கிறது.

இருவரின் குழந்தையாக நடித்திருக்கும் ஆழியாவும் அற்புதமாக நடித்திருக்கிறாள். பெட்ரூமுக்குள்ளேயே அவளை வைத்திருப்பதில் பயந்து போய் எதுவும் பேசத் தோன்றாமல் அவள் அழும் காட்சிகள் நெகிழ வைக்கின்றன.

மாடி போர்ஷன்காரராக வரும் திருநாவுக்கரசுவின் நடிப்பும் படு இயல்பு. ஹரிஷ் வீட்டுக்குள் இன்ஸ்பெக்டர் இருப்பது தெரியாமல் அவரது நண்பரான வக்கீலிடம் போலீசை லந்து பண்ணிப் பேசி இன்ஸ்பெக்டரிடம் மாட்டுவது சீரியஸ் ஆன கதைக்குள் சிரிப்பான பகுதியாகிறது.

அவரைத் தூக்கிச் சாப்பிட்டு விட்டார் வக்கீலாக வரும் மாரிமுத்து. போலீசைப் பார்த்து அவர் நடுங்குவது லாஜிக்கில் இருக்கும் குறைதான் என்றாலும், நம் இறுக்கத்தைத் தளர்த்தி நகைச்சுவையூட்டும் நரம்புகளை நச்சென்று மசாஜ் செய்து விடுகிறது அவர் நடிப்பு.

பிற பாத்திரங்களில் வரும் ஹரிதா, சூரஜ், மஹினா, சுபா, பிரகாஷ், இம்தியாஸ், ஷோபன் மில்லர் போன்றோரும் படு இயல்பாக நடித்திருக்கிறார்கள்.

ஹரிஷ், ஷீலா, மதனைத் தவிர அத்தனைப் பாத்திரங்களும் புது முகங்கள்தான். ஆனால் எவர் நடிப்பிலும் உறுத்தல் இல்லை என்பது ஆகப் பெரிய சிறப்பு. அதைச் செம்மையாக வெளிக்கொண்டு வந்திருப்பதில் மதன் இயக்குனராக வென்றிருக்கிறார்.

ஒரு 700 ஸ்கொயர் ஃபீட் வீட்டுக்குள்ளேயே மடக்கி மடக்கிப் படம் பிடித்து இருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் , இடைஞ்சல் இல்லாத இசையைத் தந்த இசையமைப்பாளருக்கும் பாராட்டுக்கள். 

பேசியதையே எல்லாப் பாத்திரங்களும் மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டிருப்பது சற்றே திரைக்கதையில் தொய்வைத் தருகிறது. அதைக் கொஞ்சம் சரியாக செதுக்கி, இன்னும் சுவாரசியமான ஐந்து காட்சிகளைச் சேர்த்திருந்தால் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ படத்தைப் போல் கொண்டாடப்பட வேண்டிய படமாக இருந்திருக்கும்.

ஆனாலும் படத்தின் தொய்வைக் கடைசி அரை மணி நேரத்தில் ஈடு கட்டி நம்மை ரசிக்க வைத்து விடுகிறது இயக்குனரின் திறமை.

சிறிய முயற்சியாக இருந்தாலும் இந்த சீரிய முயற்சியைத் தட்டிக் கொடுத்து தோளில் தாங்கி திரைக்குக் கொண்டு வரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும் பாராட்டுக்கள்.

நூடுல்ஸ் – சிறப்பான சிற்றுண்டி..!

– வேணுஜி