December 12, 2024
  • December 12, 2024
Breaking News
September 7, 2023

ஜவான் திரைப்பட விமர்சனம்

By 0 409 Views

இந்திப் படங்களைப் பார்த்து கோலிவுட் வாயைப் பிளந்தது ஒரு காலம். இப்போது தொழில்நுட்ப ரீதியில் கோலிவுட் படங்கள் இந்தியாவிலேயே முன்னிலை வகிக்க… பாலிவுட்டைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டைத் திரும்பிப் பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

அப்படி இதற்கு முன்னர் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்டோர் பாலிவுட்டில் படம் இயக்கிப் பெயர் வாங்கிய நிலையில், இயக்குனர் அட்லியின் திறமை கண்டு, தான் நடிக்கும் தன்னுடைய சொந்தப் படத்தை இயக்கச் சொல்லி ஷாருக்கான் அவரை அணுகியதில் இருந்து இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு தொடங்கியது.

பான் இந்தியப் படமாக வெளியாகி இருக்கும் ஜவான் அத்தனை எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்ததா பார்க்கலாம்.

தலைப்பே ஒரு கதை சொல்லிவிட, குற்றுயிரும் குலை உயிருமாக ஆற்றில் அடித்து வரப்படும் ஷாருக்கானை ஒரு கிராம மக்கள் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கின்றனர். பதில் உதவியாக அவர்களை ஒரு இன்னலில் இருந்து காப்பாற்றுகிறார் கிங் கான்.

இன்னொரு பக்கம் நகரில் ஒரு மெட்ரோ ரயிலை ஷாருக்கான் உள்ளிட்ட ஆறு பெண்கள் கொண்ட கும்பல் கையகப்படுத்தி அரசாங்கத்திடம் பணயத் தொகை கேட்கிறது.

அதை முறியடிக்க அமர்த்தப்படுகிறார் சிறப்பு அதிரடிப் படைத் தலைவி நயன்தாரா. ஷாருக்கான் கேட்கும் தொகையைக் கொடுப்பது போல் கொடுத்து கடைசியாக அவரைப் பிடிக்கத் திட்டமிடும் நயன்தாராவின் முயற்சி என்ன ஆனது..? உண்மையில் ஷாருக்கான் யார்..? அவர் எதற்கு இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார் என்பதைத்தான் படம்  விவரிக்கிறது.

அதற்காக பெரிய சஸ்பென்ஸ் எல்லாம் வைக்காமல் அவ்வப்போது அதற்கெல்லாம் விடை கொடுத்துக் கொண்டே வருகிறார் இயக்குனர் அட்லி.

ஷாருக்கானின் நடிப்பை விட துடிப்பு படம் முழுவதும் பளிச்சிடுகிறது. வயதான கெட்டப்பிலேயே ஸ்மார்ட்டாக இருப்பவர், இளமை கெட்டப்பில் ஹாட்டாகவும் இருக்கிறார். அந்த அழகையும் மினுமினுப்பையும் இந்த வயதிலும் அவர் காப்பாற்றிக் கொண்டிருப்பது ஆச்சரியமான விஷயம்.

அதனால் திருமணமாகாமல் இந்த வயதுக்குப் பெண் தேடுவதா? என்றெல்லாம் நம்மை யோசிக்க விடாமல் நயன்தாராவைப் பார்த்து அவரைத் திருமணம் செய்து கொள்வது இயல்பாகவே உள்ளது. 

நயன்தாராவின் வனப்பும் கூட படத்துக்குப் பெரிதாக உதவி இருக்கிறது. அத்துடன் தோற்றம் மற்றும் பணியில் மட்டுமல்லாது நடவடிக்கைகளிலும் ஒரு சிங்கப் பெண்ணாகவே அவர் தோன்றுகிறார்.

அவருடைய பாத்திர வடிவமைப்பும் புதுமைப் பெண்ணாகவே இருக்கிறது. தன் வயிற்றில் பிறந்த பெண்ணையும் அப்படி ஒரு சிங்கப் பெண்ணாக வளர்க்க எடுக்கும் அவரது முயற்சியும் கூட சிறப்புதான்.

ஆனால் அவ்வளவு தெளிவாக இருப்பவர், திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்ற தன்னைத் திருமணம் செய்து கொள்பவர் பின்னணி பற்றித் தெரிந்து கொள்ளாததும், தன்னைப் பற்றிய ஒரு உண்மையை அவரே முன்வந்து சொல்ல வரும் போதெல்லாம் தடுப்பதுடன் முதலிரவில் மட்டும் ஆர்வம் காட்டுபவராகவும் வருவது கொஞ்சம் முரண்.

அரசாங்கத்தைக் கையில் வைத்துக் கொண்டிருக்கும் இந்திய கோடீஸ்வரராக வரும் விஜய் சேதுபதியின் பாத்திரம் அவரது வழக்கப்படியே ஆர்ப்பாட்டம் இல்லாமல் பயமுறுத்துகிறது. ஆனால் இதைவிட எல்லாம் அவரிடம் நடிப்பை நாம் பார்த்துவிட்டதால் இந்தி ரசிகர்களுக்கு இவர் நடிப்பு புதியதாகத் தெரியலாம்.

மத்திய மந்திரியின் உதவியாளராக வரும் யோகி பாபுவுக்கு சிறப்பான இந்தி அறிமுகத்தைக் கொடுத்திருக்கிறது இந்தப் படம். நாலு இடங்களில் நச்சென்று வந்து போகிறார் யோகக்கார பாபு.

ஷாருக்கானுக்கு உதவும் ஆறு கைதிப் பெண்களில் பிரியாமணி தனியாகத் தெரிகிறார். 

சிறப்புத் தோற்றங்களில் தீபிகா படுகோனேவும் சஞ்சய் தத்தும் வருகிறார்கள். தீபிகாவின் சென்டிமென்ட் எபிசோடில் இந்திய தாய்மார்கள் கண்கலங்கப் போவது சத்தியம். சஞ்சய் தத்தின் வேட்டிக் கட்டுக்கு ஒரு ‘சபாஷ்..!’

ஜி.கே.விஷ்ணுவின் ஒளிப்பதிவு வர்ணஜாலம் காட்டியிருக்கிறது. பாடல் காட்சிகளில் அப்படி ஒரு பிரம்மாண்டம்.

அனிருத் இசையும் அதிரடி என்றாலும் இன்றைய அவரது முனைப்பு, நான்கு வருடங்களுக்கு முந்தைய படம் இது என்பதால் கொஞ்சம் மிஸ் ஆகியிருக்கிறது.

எடிட்டர், ஆர்ட் டைரக்டர், ஸ்டண்ட் மாஸ்டர்கள், கோரியோகிராபர்கள் என்று அத்தனைப் பேரும் கடுமையான உழைப்பைப் போட்டு இருக்கிறார்கள்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான மக்கள் அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய இந்தியப் பிரச்சினைகள் ஒவ்வொன்றையும் பட்டியல் போட்டு அவற்றுக்கான தீர்வைத் தேடி இருக்கிறார் அட்லி.

கோடீஸ்வரர்களின் ஆயிரமாயிரம் கோடி கடன்களைத் தள்ளுபடி செய்து, கடனைக் கட்ட முடியாத விவசாயிகள் தற்கொலைக்கு உள்ளாகும் அவலம், அரசு மருத்துவமனைகளில் போதிய வசதி இல்லாமை, ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்து போன பிஞ்சுகள், ராணுவத்துக்கு ஆயுதம் வாங்கியதில் நடந்த ஊழல், சுற்றுச்சூழல் சீர்கேட்டை உண்டாக்கும் தொழிற்சாலைகள் என்று நாம் அன்றாடம் செய்தித்தாள்களில் எதிர்கொண்ட அத்தனை விஷயங்களையும் முன்வைத்து அவற்றுக்கான தீர்வுகளை ஷாருக் மூலம் சொல்லி இருப்பது ‘நறுக்’.

பல இடங்களில் வசனங்கள் கைத்தட்ட வைக்கின்றன. நான்காயிரம் கோடி கடன் தள்ளுபடி பெற்ற கோடீஸ்வரர் விஜய் சேதுபதியின் மகளிடம் ஷாருக், “என்னைப் பற்றி உன் அப்பாவிடம்  ‘உன்னை விட ஒரு பெரிய திருடனைச் சந்தித்தேன்’ என்று சொல்..!” என்பது அதில் ஒன்று.

பெண் பாத்திரங்களைப் பெருமைப்படுத்துவதில் அட்லியை அடித்துக் கொள்ள அனைத்திந்தியாவில் ஆளில்லை.

மற்றபடி, பிற படங்களில் நாம் பார்த்த காட்சிகள் மற்றும் லாஜிக் மீறல்கள் படம் முழுவதும் விரவி இருப்பதுதான் குறை. மேற்படி தொட்டுக்காட்டும் இந்தியப் பிரச்சனைகள் எல்லாவற்றிலும் ஒரே விஜய் சேதுபதி சம்பந்தப்பட்டிருப்பது அதில் தலையாய ஒன்று. அதேபோல் தன்னை எதிர்க்கும் ஷாருக்கானைத் தீர்த்துக் கட்ட ஒவ்வொரு முறையும் விஜய் சேதுபதியே நேரில் வந்து கொண்டிருப்பதும் ‘சினிமா க்ளிஷே..!’

ஆனால் இது பற்றியெல்லாம் இந்திய ரசிகர்கள் எப்போதும் கவலை கொள்வதில்லை அவர்களைப் பொறுத்தவரை தங்கள் ஹீரோ பரபரப்பான ஒரு படத்தில் விறுவிறுப்பாக வந்து அற்புதங்கள் நிகழ்த்தினால் போதும் – கோடிகளைக் கொட்டிக் கொடுத்து விடுவார்கள்.

அப்படிக் கோடிகள் கொட்டும் சாத்தியத்தை ஜெட்லியின் வேகத்தில் திரைக்கதையில் வைத்து அள்ளிக் கொடுத்து இருக்கிறார் அட்லி.

அரிய வகை ஹீரோயிசத்தில்…

ஜவான் – ஜாம்பவான்..!

– வேணுஜி