நியாயப்படி இந்தப்படத்துக்கு நினைவெல்லாம் நீயடி என்று தலைப்பு வைத்திருக்க வேண்டும். அந்த அளவுக்கு நாயகன் பிரஜன் கடந்து போன காதலியின் நினைவாகவே வருடக் கணக்கில் மணமாகாமல் வாழ்கிறார்.
அவர் காதலி வெளிநாட்டில் வசிப்பதாக நம்பப்படுகிறது. ஆனால் இன்னொரு பக்கம் பிரஜனின் முறைப் பெண் மனிஷா யாதவ் சதாசர்வ காலமும் பிரஜனிடம் நினைவெல்லாம் நீ மட்டும்தான்டா என்று அவரையே சுற்றிச் சுற்றி வருகிறார்.
ஒரு கட்டத்தில் மனிஷா தற்கொலைக்கே போக, வேறு வழியில்லாமல் அவரையே திருமணம் செய்து கொள்ளும் பிரஜன், ஒரு கண்டிஷன் போடுகிறார். பழைய காதலி மீண்டும் வந்து, அவளுக்குத் திருமணமும் ஆகாமல் இருந்தால் செத்துப்போய் விடுவேன் என்பதுதான் அது.
பிறகென்ன… எல்லோரும் எதிர்பார்ப்பதைப் போலவே அந்தக் காதலி திரும்பி வருகிறார். வெளிநாட்டில் இருந்ததால் தொடர்பு கொள்ள முடியவில்லையாம்… (!) பிரஜனுக்குத் திருமணம் ஆகிவிட்டது என்று தெரிந்து அவரும் தற்கொலைக்கு முயல…
இப்படி காதலுக்காக ஆளாளுக்கு சாக முடிவெடுக்க… யார் தப்பிப் பிழைக்கிறார்கள் என்பது கதை.
பள்ளிப்பருவ காதல் எபிசோட்தான் படத்தின் பலம். அதில் பிரஜன் வேடத்தில் வரும் ரோஹித், அசப்பில் ஆரம்ப கால அஜித்தை நினைவு படுத்துகிறார். தேவையான நடிப்பையும் வழங்கி இருக்கிறார்.
அதேபோல் அவரது காதலியாக வரும் யுவா, அற்புதமான கண்டுபிடிப்பு. அழகிலும், இளமையிலும் கவரும் அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.
ஆனால், வெளிநாடு போய் விட்ட யுவா திரும்பி வரும்போது பிரஜனை விட நாம்தான் அவ்வளவு எதிர்பார்க்கிறோம். ஆனால், பல வருடங்களுக்குப் பிறகு வளர்ந்த நிலையில் வரும் அந்தப் பாத்திரத்தின் (சினாமிகா) தோற்றத்தில் அவ்வளவு ஏமாற்றம். பிரஜனுக்கு அக்கா… அல்லது அம்மா என்றே சொல்லும் அளவில் இருக்கிறார் அவர்.
ஆனால், நல்லவேளை… கடைசியில் ஒரு ஆன்ட்டி கிளைமாக்ஸ் கொடுத்து அந்த ஆன்ட்டி மீது பழி வராமல் பார்த்துக் கொள்கிறார் இயக்குனர் ஆதிராஜன்.
பிரஜன் கணக்கில் இன்னொரு படம். எனினும்.அவரால் முடிந்த அளவுக்கு நடிப்பிலும், ஆக்ஷன், நடன இத்யாதிகளிலும் நன்றாகச் செய்திருக்கிறார்.
மனிஷா யாதவ் மதர்ப்பாக இருக்கிறார். அருகில் அவரை வைத்துக்கொண்டு இன்னொரு பெண்ணை எதிர்பார்த்து கொண்டிருக்கும் பிரஜினை நினைத்தால்… செம்ம காண்டாகிறது.
அழகான ஶ்ரீ பிரியங்காவை சின்னப் பாத்திரத்தில் காட்டியதிலும் ஏமாற்றமே..!
மனோபாலா, ரெடின் கிங்ஸ்லி, மதுமிதா அங்கங்கே நம்மைச் சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார்கள்.
இளையராஜாவின் இசையில் பாடல்கள் இதம். பின்னணி இசைக்குப் பேர் போன ஞானியிடம் இதில் ஈர்ப்பு குறைவாகவே இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜி பாடல் காட்சிகளில் காட்டியிருக்கும் தரத்தை ஒட்டுமொத்தப் படத்திலும் காட்டியிருக்கலாம்.
படத்தின் நீளமும், தேவையில்லாத திருப்பங்களும் தவிர்க்கப் பட்டிருக்கலாம்.
நினைவெல்லாம் நீயடா – காலம் கடந்த காதல்..!