June 20, 2024
  • June 20, 2024
Breaking News
April 7, 2020

வாட்ஸ் ஆப் குழுக்களுக்கு புதிய கட்டுப்பாடு..?

By 0 571 Views

தற்போது சமூக வலைதளங்களை குறிப்பாக வாட்ஸ் ஆப், டெலிகிராம் குழுக்களில் உலாவரும் புதிய வதந்தி. . .

~சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, Mandate for All : Tonight 12(midnight) onwards Disaster Management Act~ எனத் தொடங்கும் வதந்தியில் ~Coronavirus பற்றிய செய்திகள், Updates, மத்திய, மாநில அரசுகள் சம்பந்தபட்ட செய்திகள் Memes, PM, CM சம்பந்தப்பட்ட memes, செய்திகள் தடை செய்யப்பட்டுள்ளது~ என்றும் பரப்பப்படுகிறது. மேலும், அவ்வதந்தில் இன்னும் ஒருபடி மேலே சென்று, ~குழு நிர்வாகிகள் அனைவருக்கும் இதனை தெரிவிக்க வேண்டும்~ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் யோசிக்க வேண்டிய விஷயம். வாட்சப் குழு உருவாக்க ரிஜிஸ்ட்ரார் ஆபீசில் பதிவு செய்து,  யார் யார் குழு நிர்வாகிகள் என்ற லிஸ்ட் அரசு வசம் இருக்கிறதா என்ன?

இதில் கொடுமை என்னவென்றால் ஒருவருக்கு கொரானா இருப்பதாக வதந்தி பரப்பியவரைப் பிடித்த வழக்கில் அனைத்து குரூப் அட்மினுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டதாக ஒரு நாளிதழில் செய்தியும் வெளியாகியிருந்தது தான்.

அப்படி எந்த அட்மினுக்காவது செய்தி வந்ததா . .?

விஷயம் இதுதான்.

ஊரடங்கின் போது டெல்லியில் இருந்து வெளியேறிய கூலித் தொழிலாளர்கள் நலன் தொடர்பாக, உச்ச வழக்காடு மன்றத்தில் A.A.ஸ்ரீவஸ்தவா என்பவர் இந்திய ஒன்றிய அரசிற்கு எதிராக பொதுநல வழக்கு [Writ Petition(s)(Civil) No(s).468/2020] தொடுக்கிறார்.

அந்தவழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், _கொரோனா தொடர்பான அதிதீவிரப் பரவலை எதிர்கொள்வதைவிட கொரோனா தொடர்பான வதந்திகளை எதிர்கொள்வதே பெரிய சவாலாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனமே_ புலம்பியதைக் குறிப்பிட்டதோடு,

_தொழிலாளர் வெளியேற்றத்திற்கும், ~3 மாதங்களுக்கும் மேல் தொடரப்போகும் ஊரடங்கு~ எனும் வதந்தியும் காரணமாகியுள்ளது_ என்பதைக் குறிப்பிட்ட உச்ச வழக்காடு மன்றம் மேற்கொண்டு தனது உத்தரவில்,

_’அச்சு – மின்னணு & சமூக ஊடகங்களில் வெளிவரும் வதந்திகள் அனைத்திலும் கவனம் செலுத்துவது என்பது எங்களால் இயலாதது.’_

_’பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005 பிரிவு 54-ன் படி தவறான எச்சரிக்கைகளை உருவாக்குதல் / பகிர்தல் மூலம் நிலைமைத் தீவிரப்படுத்தி / மிகைப்படுத்துவதால் பெரும் அச்சத்தை (பீதி) எழுப்புவது ஓராண்டு சிறைத் தண்டனையோடே தண்டத் தொகையும் விதிக்கப்படக்கூடிய குற்றமாகும். மேலும், மக்கள் பணியாளர்களால் பிரகடனப்படுத்தப்படும் உத்தரவை மீறுதல் என்பது இந்தியத் தண்டனைச் சட்டம் 188-ன் படி குற்றமாகும்.’_

_’பொதுமக்கள் நலன் கருதி இந்திய ஒன்றிய அரசு வெளியிடும் ஆலோசனைகளை, உத்தரவுகளை மாநில அரசுகளும், குடிமக்களும் மதிப்பீர்கள் என நம்புகிறோம்.’_

_’குறிப்பாக அச்சு – மின்னணு & சமூக ஊடகங்கள் தங்களது பொறுப்புணர்வை உணர்ந்து மக்களைத் தேவையற்ற பீதிக்குள்ளாக்காது உறுதிப்படுத்தப்படாத செய்திகளைப் பகிராது இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்’_

_’மக்களுக்கு எழும் அச்சங்களை போக்கும் விதமாக அரசின் தினசரி அறிக்கைகளை சமூக ஊடகம் உள்ளிட்ட அனைத்து ஊடகங்களிலும் வெளியிட இந்திய அரசு 24 மணி நேரத்திற்குள் முடிவாற்ற வேண்டும்.’_

_’ஊடகங்கள், நிலைமையின் முன்னேற்றத்திற்குரிய அரசின் அலுவல்பூர்வ செய்திகளை வெளியிட வேண்டும்’_

_’இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நாட்டிலுள்ள அனைத்து சிறப்பு முகாம்களிலும் 24 மணி நேரத்திற்குள் மனநல ஆலோசகர்கள் உதவியுடன்பீதியில் உறைந்துள்ள மக்களைத் தெளிவுபடுத்தும் நடவடிக்கையை இந்திய ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும்’_

மேலும், _இடம்பெயர் தொழிலாளர்கள் மீதான இந்திய ஒன்றிய அரசின் மனிதாபிமான நடவடிக்கைகளை 07.04.2020-ல் பட்டியலிட_ வேண்டுமென 31.03.2020-ல் உத்தரவிட்டிருந்தது.

பெருங்கொடுமை என்னவெனில்,

மேற்படி தீர்ப்பு குறித்தே ~உச்சநீதி மன்றம் நள்ளிரவு முதல் கொரோனா தொடர்பான செய்திகளைப் பகிரக் கூடாது. அரசு தொடர்பாக பதிவிடக்கூடாது~ என்று உச்ச வழக்காடு மன்றத்தின் பெயரைப் பயன்படுத்தியே மற்றுமொரு வதந்தி 31.03.2020-லேயே பரப்பப்பட்டுவிட்டது.

வழக்கமாக ஏதேனும் ஒரு வதந்தி பரவுகிறதெனில், சில இணையப் பக்கங்கள் *பகிரப்படும் செய்தி* மற்றும் *உண்மை நிலை* எனும் தலைப்பில் உண்மைத் தன்மையைத் தெளிவுபடுத்தும். இதில், ‘பகிரப்படும் செய்தி’ எனும் தலைப்பில் வதந்திக்குரிய பதிவு வலைதளங்களில் பகிரப்பட்ட அமைப்பிலேயே முழுமையாக இருக்கும்.

மேற்படி உச்ச வழக்காடு மன்றத் தீர்ப்பின் மீதான வதந்தி குறித்த உண்மை நிலையை விளக்கி வழக்கமான இரு தலைப்புகளின் கீழ் செய்தி வெளியிட்டிருந்தது LIVE-LAW எனும் ஆங்கில இணையப் பக்கம்.

வழக்கின் முழுவிபரமும் அப்போது குறிப்பிடப்படவில்லை எனினும் வதந்தி என்பதற்கான ஆதாரத்தை வெளியிட்டிருந்தது.

ஆனால் நம் ஆர்வக்கோளாறு மக்களோ, பகிரப்படும் செய்தி எனும் தலைப்பின் கீழான வதந்திச் செய்தியை மட்டும் LIVE-LAW இணைய முகவரியோடே Screen Shot எடுத்து மீண்டும் புது வதந்தியாக LIVE-LAW பெயரிலேயே பகிரத் தொடங்கிவிட்டனர். (உண்மையில் அந்த இணைய முகவரியில் குறிப்பிடப்பட்ட செய்தியும் வதந்தியும் நேர்மாறானவை.)

தற்போது அந்த Screen Shot-ம் உச்ச வழக்காடு மன்ற கட்டிடப் படத்தோடே பகிரப்பட்ட வதந்திக்கான Screen Shot-ம் தான் சமூக வலைதளங்களில் 5 நாள்களுக்கும் மேலாக உலா வந்தது.

நேற்றிரவு முதலோ, மேற்படி வழக்கின் உத்தரவு நகலோடே (PDF) இடம்பெயர் தொழிலாளர்கள் நலன் தொடர்பாக அரசின் நடவடிக்கைகளைப் பட்டியலிட நிர்ணயித்த தேதியான 07.04.2020-ஐ (இன்று) குறிப்பிட்டு மேற்படி வதந்தி மேலும் மெருகூட்டப்பட்டு மானே. . . தேனே. . . பொன்மானே. . . எல்லாம் போட்டு பகிரப்பட்டு வருகிறது.

*வதந்தியைப் பரப்பி பீதியைக் கிளப்பாமல் பொறுப்புடன் இருக்கச் சொன்ன வழக்காடு மன்றம் பெயரிலும், அதைத் தெளிவுபடுத்தப் போன இணையப் பக்கத்தின் பெயரிலும் வதந்தியைப் பரப்பினால் என்னவென்று சொல்வது? 

பெரும்பான்மையினர் சமூக வலைதளங்களில் தகவல்கள் பகிர்வதன் நோக்கமே, ‘எனக்கும் நாலு விசயம் தெரியும்’, ‘நீங்களும் நாலு நல்ல விசயத்த தெரிஞ்சுக்கங்க’ என்ற இரண்டில் ஒன்றிற்காகத்தான்.

எனவே, தற்போதைய அதிதீவிரத் தொற்றுக் காலம் என்றல்ல, எப்போது நாம் ஒரு செய்தியைப் பகிர்ந்தாலும், இயன்றவரை அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்துவிட்டுப் பகிர்தல் என்பது பகிர்பவரின் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கும்.

இது மட்டுமல்லாமல் அரசு எல்லா வாட்ஸ் ஆப் குரூப்புகளையும் கண்காணிப்பதுடன் மூன்று நீல நிற டிக் வந்தால் அரசு கண்காணிக்கிறது என்றும் 2 நீல டிக், ஒரு சிவப்பு டிக் வந்தால் உங்கள் மீது வழக்கு தொடரப்படலாம் என்றும், மூன்று சிவப்பு டிக் வந்தால் உங்களுக்கு சம்மன் வரப்போகிறது என்றும் அறிவித்திருப்பதாக அடுத்த வதந்தி படத்துடன் வெளியிடப்பட்டு வருகிறது.

அதுவும் போலி என்று இப்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.