காதலின் சக்தி குறித்து இலக்கியம் தோன்றிய காலத்தில் ஆரம்பித்து இன்று வரை பல்லாயிரக்கணக்கான கதைகள் சொல்லப்பட்டு விட்டன. ஆனாலும் காதல் கதைகள் அலுப்பதில்லை.
அந்த வகையில் ஒரு காதலின் சக்தி எத்தனை ஆயிரம் கிலோமீட்டர் பயணப்பட்டு, மொழி கடந்து, இனம் கடந்து, பண்பாடுகள் கடந்து தன்னை மெய்ப்பிக்கிறது என்பதை அழுத்தத்துடன் திரைக் காவியமாகச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன்.
கல்லூரியில் படிக்கையில் அதிதி சங்கர் மீது அதீத காதல் கொண்டு அவரது காதலைப் பெற முயற்சித்துக் கொண்டிருக்கிறார் ஆகாஷ் முரளி. ஆனால் தொடர்ந்து ஆகாஷை மறுத்துக் கொண்டே இருக்கிறார் அதிதி.
காதலை மறுப்பதற்கு அவர் சொல்லும் காரணம் ‘தன்னுடைய தந்தையும் தாயும் இதேபோன்று காதலித்து ஒரு கட்டத்தில் தாயைத் தவிக்க வைத்து விட்டுத் தந்தை சென்று விட்டார்…’ என்பதுதான். ஆனால் தான் அப்படி இருக்க மாட்டேன் என்று ஆகாஷ் உறுதி கூறிய பின் இருவரிடத்தும் காதல் மலர்கிறது.
ஆனால், ஆகாஷின் அந்த அதீத காதலே தன் சுதந்திரத்தைப் பறிப்பதுடன் ஆகாஷின் வளர்ச்சியையும் தடை செய்கிறது என்று கருதுகிறார் அதிதி. நல்ல வேலையில் அதிதி அமர, அவருக்கு உதவுகிறேன் பேர்வழி என்று ஆகாஷ் தன் வளர்ச்சியை சிந்திக்காமல் இருக்க, அது தொடர்பான விவாதம் அவர்களிடையே பிரிவினையை ஏற்படுத்துகிறது.
தொடர்ந்து போர்ச்சுகல் நாட்டுக்கு சென்று விடுகிறார் அதிதி. அவரை மறக்க முடியாமல் போர்ச்சுக்கல் செல்லும் ஆகாஷுக்கு அதிர்ச்சியான செய்தி ஒன்று காத்திருக்கிறது.
அங்கே பெரும் தொழிலதிபரின் மகனைத் திருமணம் செய்து கொண்ட அதிதி, கணவனைக் கொன்றதறகாக சிறையில் இருக்கிறார் என்ற செய்திதான் அது.
மொழி தெரியாத நாட்டில், பெரும் செல்வாக்குள்ளவர் மகனைக் கொன்ற அதிதியை எப்படி மீட்க முடியும் என்ற நிலையில் ஆகாஷின் போராட்டம் வென்றதா, எனில் அது எப்படி..? இன்னொருவரை மணந்த அதிதி, ஆகாஷை ஏற்றுக் கொண்டாரா என்பதெல்லாம் பரபரப்பான பின்பாதி.
ஆறடி உயர ஆகாஷ், இந்தப் படத்தின் ஹீரோ பாத்திரத்தில் நச்சென்று பொருந்துகிறார். காதலைச் சொல்லத் தயங்கிய ஹீரோவாகவே பெயர் எடுத்து விட்ட அவரது அப்பா முரளி போல் இல்லாமல் தோன்றிய காதலை அப்போதே அதிதியிடம் உடைத்தது மட்டுமல்லாமல் அந்தக் காதலுக்காக இறுதிவரை போராடியதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது.
அதிதி ஷங்கருக்கு நவநாகரிக நாயகி.வேடம். காதலைத் தவிர்க்கும் போதும், பின் ஏற்கும் போதும், அதைத் துறக்கும் போதும் சரியான உணர்ச்சிகளைக் கட்டவிழ்த்து கவனத்தைக் கவர்கிறார் அதிதி.
கையறு சூழ்நிலையில் சிறையில் மாட்டிக்கொண்ட போது தன்னைப் பார்க்க வந்த ஆகாஷ், தன்னைப் பார்த்து விடக்கூடாது என்று தயங்கும்போது நெகிழ வைத்து விடுகிறார்.
போர்ச்சுக்கல் நாட்டில் பெரும் தொழிலதிபராக விளங்கும் சரத்குமாரும், அவரது மனைவியாக வரும் குஷ்புவும் தோற்றதிலேயே அந்தப் பாத்திரங்களில் பொருந்துகிறார்கள்.
மகன் இறந்த துக்கத்தை அமைதியாகவே கடக்கும் சரத்தும் ஆக்ரோஷமாக வெளிப்படுத்தும் குஷ்புவும் அதிதியை மன்னிக்கத் தயாராகவே இல்லை என்ற சூழல் பயமுறுத்துகிறது.
ரொம்ப காலம் கழித்து ‘ கடலோரக் கவிதைகள்’ ராஜா, நரைமுடியுடன் இதில் சரத்தின் நல்லெண்ண நண்பராக வருகிறார்.
விஷ்ணுவர்தனின் லக்கி சாம் பிரபு இதிலும் ஒரு சிறிய வேடம் ஏற்று கவனம் பதிக்கிறார்.
மொழி தெரியாத பிரதேசத்தில் தமிழில் பேசிக்கொண்டு வரும் அதிதியின் வழக்கறிஞர் கல்கி கோச்சலின் நம்பிக்கை முனையாக இருப்பது ஆறுதல்.
ஆகாஷின் காதல் தென்றல் என்றால், அவருக்கு உதவும் இலங்கைத் தமிழ் வாலிபர் ஷிவ் பண்டிட்டின் காதல் டெரர். சிறையில் இருக்கும் அவருடைய காதலி, அதிதியைக் கொல்ல முயற்சிக்கும் காட்சி பகீர்.
முதல் பட ஹீரோவுக்கான கட்டுத்திட்டம் எதுவும் வைத்துக் கொள்ளாமல், ஒரு அனுபவ ஆக்ஷன் ஹீரோவுக்கான அளவில் திரைக்கதை எழுதி அதனை பிரமாண்டமாக காட்சிப்படுத்தி இருக்கும் விஷ்ணுவர்தன் மலைக்க வைக்கிறார்.
சதிகாரர்கள் காரைத் தொடரும் ஆகாஷின் பைக் சேசிங், ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடுவதாக அமைகிறது.
தமிழ்நாட்டையே வெளிநாடு போலக் காட்டும் ஒளிப்பதிவாளர் எரிக் பிரைசன் போர்ச்சுக்கல் கிடைத்தால் சும்மா விடுவாரா..? அங்கே ஒரு சந்து பொந்து விடாமல் ஜமாய்த்திருக்கிறார்.
யுவனின் இசை பற்றித் தனியாக சொல்லத் தேவையில்லை. பின்னணி இசையிலும் காதலைக் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார் யுவன்.
காதலை எப்படி சொன்னாலும் சுகமாகத்தான் இருக்கும். அதிலும் இத்தனை பெரிய பட்ஜெட்டில் இவ்வளவு பிரம்மாண்டத்துடன், பரபரப்பான சுவாரஸ்யத்துடன் ஒரு கவித்துவக் காதலைப் பார்க்க நேர்வது கரும்பு தின்ன, பொங்கலையே பரிசாகப் பெற்றது போன்ற அனுபவம்.
நேசிப்பாயா – கடல் கடந்த காதல்..!
– வேணுஜி