November 22, 2024
  • November 22, 2024
Breaking News
December 28, 2023

நந்திவர்மன் திரைப்பட விமர்சனம்

By 0 355 Views

தமிழ்நாட்டின் செஞ்சி பகுதியில் அடர்ந்த காட்டுக்குள் ஒருவர் புதையலைத் தேடி வர மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். இப்படி ஆரம்பிக்கிறது படம்.

அவரைக் கொன்ற ஆயுதம் எது என்று தடயவியல் துறையாலேயே கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் அகழ்வாராய்ச்சித் துறையை சேர்ந்த அதிகாரியான நிழல்கள் ரவி,  அகழ்வாராய்சியாளர் போஸ் வெங்கட் தலைமையில் ஒரு மாணவர் குழுவை அந்த இடத்துக்கு அகழ்வாராய்ச்சி செய்ய அனுப்பி வைக்கிறது.

இரவில் அந்த ஊர் மக்கள் அந்தப் பகுதியில் நடமாடுவதைத் தவிர்த்து வந்திருக்க, ஒருவர் கொலையும் செய்யப்பட்ட நிலையில் அகழ்வாராய்ச்சியாளர்களும் வருவதை மக்கள் விரும்பவில்லை. அகழ்வாராய்ச்சி நடைபெறும் நேரத்தில் அந்த ஊர் இளைஞர் ஒருவரும் கொல்லப்படுகிறார்.

இந்தக் கொலைகளைத் தொடர்ந்து அது பற்றி விசாரணை செய்ய சப் இன்ஸ்பெக்டர் நாயகன் சுரேஷ் ரவி நியமிக்கப்படுகிறார். இந்நிலையில் அகழ்வாராய்ச்சி செய்யும் மாணவர்களின் ஒருவரும் அந்த இடத்தில் வைத்து அதே போன்ற இனம் காண முடியாத ஆயுதத்தால் கொல்லப்பட, இது சம்பந்தமாக ஆராய இரவில் வரும் சுரேஷ் ரவியும் தாக்கப்படுகிறார்.

இப்படி சீரியஸாக விஷயம் ஓடிக் கொண்டிருக்க இன்னொரு புறம் அகழ்வாராய்ச்சி மாணவியான நாயகி ஆஷா வெங்கடேசுக்கும் அவருக்கும் ஒரு புரிதலும் போய்க்கொண்டு இருக்கிறது.

அங்கு நடக்கும் எல்லா மர்மங்களுக்கும் விடை கிடைத்ததா, அல்லது அவை எல்லாமே அமானுஷ்ய சக்தியால் நடந்ததா என்பதற்கு கிளைமாக்சில் விடை சொல்கிறார் இயக்குனர் ஜி.வி.பெருமாள் வரதன்.

போலீஸ் வேடத்தில் வரும் நாயகன் சுரேஷ் ரவி அவர் அணிந்திருக்கும் சீருடை போலவே கச்சிதமாக அந்த வேடத்துக்குப் பொருந்தி இருக்கிறார். ஓங்கு தாங்கான அவருக்கு ஆக்ஷனிலும் நல்ல பயிற்சி இருப்பது தெரிகிறது. ஒரே எக்ஸ்பிரஷன் காட்டுவதை மாற்றி இன்னும் கொஞ்சம் அவர் நடிக்க முயற்சி எடுக்கலாம்.

நாயகியான ஆஷா வெங்கடேசும் அப்படியே – நடிப்பதற்கென்று பெரிய முயற்சி எதுவும் எடுக்காமல் ஒரு சில உணர்ச்சிகளுக்குள்ளேயே நடித்து முடித்து விடுகிறார்.

படம் முழுவதும் இரண்டாவது நாயகனாக வருகிறார் போஸ் வெங்கட் இடையில் ஏற்படும் திருப்பம் அவரெல்லாம் நல்ல கேரக்டரில் வரவே முடியாது போலிருக்கிறது என்று நினைக்க வைக்கிறது.

கடைசியில் வில்லன் யார் என்று தெரியும் போது நமக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.

நிழல்கள் ரவியும், கஜராஜும் தங்கள் அனுபவ நடிப்பால் கேரக்டருக்கு நியாயம் செய்கிறார்கள்.

மீசை ராஜேந்தர், ஆடுகளம் முருகதாஸ், அம்பானி சங்கர் இவர்களுக்கு எல்லாம் சிறிய வேடங்கள்.

ஜெரார்ட் ஃபெலிக்ஸின் இசையும், ஆர்.வி.சேந்த முத்துவின் ஒளிப்பதிவும் இந்த பட்ஜெட் படத்துக்கு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்து இருக்கின்றன.

புதையுண்ட கோயிலை அழகாக வடிவமைத்த டைரக்டர் முனி கிருஷ்ணனுக்கு பாராட்டுகள்.

அந்த நிலத்தை பல்லவர் காலத்தில் ஆண்ட நந்திவர்மனின் கதையை பிளாஷ்பேக்கில் அனிமேஷனாக சொல்வது சிறப்பாக இருக்கிறது.

ஆனால் நந்திவர்மன் பயன்படுத்திய வாள் கண்ணுக்கு தெரியாத உலோகத்தில் செய்யப்பட்டிருந்ததாக சொல்வதைக் கதையாக ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அந்த வாள் இப்போதும் கிடைக்கப்பெற்று கண்ணுக்குத் தெரியாமலேயே பயன்பாட்டில் இருப்பதெல்லாம் சுத்த புருடா.

நந்திவர்மன் – பந்திக்கு உட்காரலாம்..!