“ஆள்வதற்கு மட்டுமல்ல வாழ்வதற்கே அதிகாரம் வேண்டும்…” என்ற நிலைப்பாட்டைக் கோட்பாடாக்கும், சமூக அடித்தட்டு மக்களின் கதைதான் நந்தன்.
சமூக நீதிக்காக அரசு ஆயிரம் திட்டங்கள் வகுத்தாலும், அவற்றைக் கூட ஆதிக்க சாதியினர் எப்படிக் கூட்டிப் பெருக்கி, கழித்துத் தங்களுக்குச் சாதகமாகக் கணக்குப் போடுகிறார்கள் என்பதை இதுவரை சொல்லாத களம் மூலம் சொல்லி இருக்கிறார் இயக்குனர் இரா.சரவணன்.
“இப்படி எல்லாம் நடக்கிறதா என்று கேட்பவர்களைக் கைப்பிடித்து அங்கே அழைத்துச் சென்று காட்டத் தயாராக இருக்கிறேன்..!” என்று படத்தின் ஆரம்பத்தில் இயக்குனர் கட்டியம் கூறுவதே அவரது ‘கெத்தை’க் காண்பிக்கிறது.
வணங்கான்குடி கிராமத்தில் காலம் காலமாக வணங்காத முடிகளாக ஆட்சி செலுத்தும் ஆதிக்க சாதியினரின் கோவில் கூட்டம் நடக்க, வெளியே அவர்கள் விட்டுச் சென்றிருக்கும் செருப்புகளைக் காட்டி ஆரம்பிக்கிறது படம். அந்த செருப்புகளின் மேல் அவர்கள் தங்கள் சிறப்புகளை பேசிக்கொள்வதாகக் குரல் விரியும் காட்சி ஆதிக்க மனப்பான்மையை செருப்பால் அடித்ததைப் போன்ற சிறப்பு.
அங்கே வரவிருக்கும் ஊராட்சித் தேர்தலில் தலைமைப் பதவியைக் காலம் காலமாக அனுபவித்து வருவதை இம்முறையும் விட்டுவிடக் கூடாதென்று ஊராட்சித் தலைவரைப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கும் கூட்டம் அது.
அப்படி அன்அப்போஸ்டாகத் தேர்ந்தெடுக்க பாலாஜி சக்திவேலின் ஆதரவாளர்கள் கோர, அவருக்கு எதிராகக் கொடி பிடிக்கிறார் குட்டிப்புலி சரவண சக்தி. எனவே இருவரின் பெயரையும் சாமியின் முன்னால் போட்டு சாமி தரும் உத்தரவுக்கு கட்டுப்படுவதாக முடிவாகிறது.
அப்படி சீட்டின் மூலம் பாலாஜி சக்தி வேலையே சாமியும் அடையாளம் காட்ட, அடுத்த காட்சியிலேயே நமக்குப் புரிய வைக்கப்படுகிறது அது சாமியின் வேலை அல்ல, அந்த பலே ஆசாமி பாலாஜி சக்திவேலின் வேலை என்று.
அந்தக் கூட்டத்துக்கு எதிராகக் குரல் கொடுக்கும் தாழ்த்தப்பட்ட இளைஞன்தான் நந்தன்.
பாலாஜி சக்திவேலைக் கேள்வி கேட்ட நந்தன் அடுத்த காட்சியிலேயே விபத்தில் இறந்து போகிறார்.
சசிகுமார் ஹீரோவாகும் படத்தில் நாம் என்ன நினைக்கிறோம் – அவர்தான் நந்தனாக இருப்பார் என்று. ஆனால் சசிகுமாரோ ஆண்டான்களின் அடிமையாக பாலாஜி சக்திவேல் மீதான விசுவாசத்தில் வளர்ப்பு நாயாக இருக்க, நந்தனோ இரண்டாவது காட்சியிலேயே இறக்க… அப்புறம் எப்படி தலைப்பு? – அதுதான் சிறப்பு..! அதைக் கடைசியில் பார்க்கலாம்.
வேட்புமனு தாக்கல் செய்யவிருக்கும் சூழலில் அதை ரிசர்வ்டு தொகுதியாக அறிவிக்கிறது அரசு. இது ஆதிக்க சாதியினருக்கு நெருக்கடியைத் தர, அதற்கான விசுவாசியைப் பிடித்து ஊராட்சித் தலைவராக்கி அதன் பின்னணியில், தான் அதிகாரம் செலுத்தத் திட்டமிடுகிறார் பாலாஜி சக்திவேல்.
அப்படி ஏற்கனவே அவருக்கு அடிமையாக இருக்கும் விசுவாசி சசிகுமாரை ஊராட்சித் தலைவராகவும் ஆக்குகிறார். அதன் விளைவு என்ன என்பதுதான் மீதிக் கதை.
இப்படி ஒரு வேடத்தில் இதற்கு முன் சசிகுமாரை நாம் பார்த்ததே இல்லை. படத்தின் 99 விழுக்காடு காட்சிகளில் பரட்டைத் தலை, கருத்தமுகம், அழுக்கு உடையுடனேயே வரும் அவரை இழுத்துக் கொண்டு போய்க் குளிப்பாட்டி நல்ல உடை அணிவிக்க மாட்டோமா என்று நம் கை பரபரக்கிறது.
இதுவரை நட்புக்கான பிராண்ட் அம்பாசிடராக இருந்தவர் இந்தப் படத்தின் மூலம் விசுவாசத்துக்கான உலகத் தூதராகி இருக்கிறார்.
அவருக்கு மனைவியாக வரும் சுருதி பெரியசாமியும், பள்ளியில் படிக்கும் மகன் மாஸ்டர் மாதேஷும் கூட அப்படியே.
வில்லன் பாலாஜி சக்திவேல்தான் பளிச்சென்று இருக்கிறார்.
“இந்தியாவுக்கு பிரசிடென்ட்டா எந்த சாதிக்காரர் வேண்டுமானாலும் வரட்டும், ஆனா இந்த ஊர் பிரசிடென்டா நாமதான் இருக்கணும்..!” என்று முழங்குவதிலிருந்தே அவரை ‘இனம்’ கண்டுகொள்ள முடிகிறது.
கொல்லப்பட்டவன் வீட்டில் நின்று கொண்டே “இந்தக் குடும்பத்துக்கு ஒரு ஆக்சிடென்ட் போதும்…” என்று சொல்லும் அவர் எருமை இல்லாத எமனாகவே காட்சியளிக்கிறார்.
சுதந்திரக் கொடியை ஏற்றக் கூட ஊராட்சித் தலைவருக்கு சுதந்திரம் இல்லாமல் செய்வதும் பாலாஜி சக்திவேலின் தந்திரம்தான்.
காட்சிக்குக் காட்சி வரும் வசனங்கள் ஒவ்வொன்றும் கண் முன் நாட்டில் நடப்பவற்றைப் பதிவு செய்து கொண்டே போகிறது. அந்தப் பதிவில் தூக்கலாக நிற்பது பகடியே.
சாவுக்கு வந்த வீட்டில், தாழ்த்தப்பட்டவர்களில் இருந்து ஊராட்சி தலைவருக்கான கொத்தடிமையைத் தேர்ந்தெடுக்கும் பாலாஜி சக்திவேல் கண்களில் ஒருவர் சிக்க, அவரைப் பற்றி விசாரிக்கும் போது குடித்து விட்டால் அவர் ஒரு புலியாகி விடுவார் என்கிறார்கள். அதற்கு பாலாஜி சக்திவேல் சொல்லும் பதில் – “இந்த புலி, சிறுத்தை எல்லாம் நமக்கு ஆகவே ஆகாது..!” என்பதுதான்.
காவல் தெய்வத்தின் சிலையைக் காட்டி “இது நமது முப்பாட்டன்..!” என்று சசிகுமார் சொல்ல, அவர் தோளில் தூக்கிச் செல்லும் மகன், “என்னப்பா நீ சீமான் மாதிரியே பேசுற..?” என்பது எந்தக் கோமானுக்கும் ஈடு கொடுக்கும் எள்ளல்.
“சிங்கம் என்பதற்காக தங்கச் சொம்பில் குண்டி கழுவ முடியுமா..?” என்ற ஒரு வசனம் சிலிர்க்க வைக்கிறது. (நம் சந்தேகமெல்லாம் சிங்கம் குண்டி கழுவுமா என்பதுதான்…)
இந்த ஏகடியங்களைத் தாண்டிய சோகத்தையும் தாங்கி நிற்கிறது இயக்குனர் சரவணனின் உரையாடல்.
தங்கள் இனத்தவரின் பிணத்தை எரிக்க சுடுகாடு இல்லாததைச் சொல்லும் சசிகுமார், “வாழறதுக்குதான் முடியலைன்னா சாகறதுக்குக் கூட எங்களுக்கு பயமா இருக்கு..!” என்பதில் சோகம் சுடுகிறது.
நடமாடிக் கொண்டிருக்கும் அரக்கனாக பாலாஜி சக்திவேல் இருக்க, படுத்து கொண்டே வில்லத்தனம் செய்வதில் 16 அடி தாண்டி இருக்கிறார் அவரது தந்தையாக வரும் ஜி.எம்.குமார். படுத்த படுக்கையாக கிடக்கும் அவருக்கு மூத்திரப்பை செருகப்பட்டு இருக்க, அதைக் கூட நக்கலாக, “உங்களுக்கெல்லாம் முக்குனாதாண்டா வரும். எனக்கு முக்காமலேயே வரும்..!” என்பது முக்காத நக்கல்.
பாதிப் படத்துக்கு மேல் எதிர்பாராமல் வரும் பி.டி.ஓ சமுத்திரக் கனியும் கூட “சபாஷ்..!” வாங்கி விடுகிறார். “போட்டியில்லாமல் ஜெயிக்கிறது இல்ல பெருமை இல்லை..!” என்று பாலாஜி சக்திவேலின் பொட்டில் அடித்தாற்போல் சொல்லும் அவர் உட்கார்ந்திருக்கும்போதே நின்று விடுகிறார். எழுந்து நிற்கும்போது ‘உயர்ந்தே’ விடுகிறார். அப்படி ஒரு பாத்திரப் படைப்பு.
உடைத்துப் புதைத்தாலும், சிதைத்து எறிந்தாலும் முளைத்துக் கிளைக்கும் காட்டாமணக்குச் செடியை வைத்து சசிகுமாரின் மகன் எதிர்கால நம்பிக்கை கொள்வது இயக்குனரின் இன்டர்நேஷனல் தர சிந்தனை.
இப்படிப் பாராட்ட இத்தனை விஷயங்கள் இருந்தும் செய் நேரத்தியில் சற்றே பின் தங்கியிருக்கிறது படம்.
ஆரம்பத்திலேயே இறந்து போன நந்தன் ஒரு குறியீடு என்பதுடன், படத்தைத் தாங்கிச் செல்லாவிட்டாலும் கிளைமாக்ஸ்-கான விதையாக விழுந்ததை தலைப்பில் சொல்லி இருக்கும் புத்திசாலித்தனம் பாராட்டத்தக்கது. ஆனால், அவரது இழப்பு அவர் மக்களால் உணரப்படாததாகவே நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. குறிப்பாக சசிகுமாராவது அந்த மரணத்தின் வலியையும், இழப்பின் வெற்றிடத்தையும் உணர்ந்திருக்க வேண்டும்.
திடீரென்று சசிகுமார் குடும்பத்தை நையப் புடைக்கும் பாலாஜி சக்திவேலின் செய்கை ஏற்புடையதாக இல்லை. அவரது ஆதரவாளர்கள் படத்திலேயே சொல்வது போல் “நீங்க ரொம்ப ஓவரா போயிட்டீங்க.!” என்பதுதான் நம் கருத்தாகவும் இருக்கிறது – அதற்கு என்னதான் பாலாஜி சக்திவேல் விளக்கம் சொன்னாலும்…
ஒளிப்பதிவாளர் ஆர்.வி. சரணும், இசையமைப்பாளர் ஜிப்ரானும் இன்னும் கொஞ்சம் மெனக்கட்டிருந்தால் படத்தின் உணர்வுகள் மிகச் சரியாகக் கடத்தப்பட்டிருக்கும்.
ஆனாலும் இதுவரை வந்த அரசியல் படங்களில் இந்த சீசனுக்கான படமாக முன் நிற்கும் இந்தப் படம் முன்னெடுத்திருப்பதும் சமுதாயத்துக்கு முக்கியமான செய்தி.
அந்த வகையில் இந்தவாரம் முந்துகிறான் நந்தன்,
– வேணுஜி