January 19, 2022
  • January 19, 2022
Breaking News
December 27, 2019

நான் அவளை சந்தித்தபோது திரைப்பட விமர்சனம்

By 0 612 Views

96 என்று ஒரு படம் எப்படி 96-ல் நடந்த ஒரு காதல் கதையை இப்போது பொருத்திச் சொல்லி வெற்றிபெற்றதோ அப்படி அதே 96-ல் நடந்த ஒரு உதவி இயக்குநரின் வாழ்க்கைப் போராட்டக் கதையை சொல்லியிருக்கிறார் இயக்குநர் எல்.ஜி.ரவிசந்தர்.

அதிலும் இது அவர் வாழ்வில் நடந்த உண்மைக்கதை என்று சொல்லிவிடுவதால் நிமிர்ந்து உட்கார்ந்து கவனிக்க வைக்கிறது. 

இயக்குநராகி விட்டுத்தான் காதல், கல்யாணம் எல்லாம் என்று எத்தனை ஆயிரம் பேர் சென்னையில் வண்ணக் கனவுகளுடன் சுற்றித்திரிகிறார்கள். அவர்களில் ஒருவர்தான் இந்தப்பட ஹீரோ சந்தோஷ் பிரதாப். இந்நிலையில் வழி தெரியாத ஒரு இளம்பெண்ணுக்கு வழி கட்டப்போய் அவள் வாழ்க்கைக்கே வழி காட்ட வேண்டிய நிலை அவருக்கு வருகிறது.

வீடில் கோபித்துக்கொண்டு வரும் நாயகி சாந்தினியை ஊரில் கொண்டு விடப்போய், ஊர்ப்பஞ்சாயத்து அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்துவிட, சந்தோஷின் கனவுகள் என்ன ஆயின, அவரது திருமண வாழ்வு என்ன ஆனது என்பது மீதிக்கதை.

சந்தோஷின் நேரத்தைப் பாருங்கள். அவர் அறிமுகமான கதை திரைக்கதை வசனம் படத்திலும் அவருக்கு சினிமா இயக்குநராக போராடும் வேடம்தான். இதிலும் கிட்டத்தட்ட அதே  வேடம் என்பதுடன் இன்று ஒற்றேநாளில் அவர் நடிக்கும் இரண்டு படங்கள் வெளியாகியிருக்கின்றன. இரண்டில் ஒன்று வெற்றி பெற்றாலும் அவரது நிஜ வாழ்க்கைக் கனவும் பலிக்கும் என்பது உண்மை.

ஒரு உதவி இயக்குனர் படும் பாட்டை அனுபவித்து வெளிப்படுத்தியிருக்கிறார் சந்தோஷ் பியரதாப். தாலிகட்ட நிர்பந்தப்படுத்தும்போதும், குழந்தை பாலுக்கு அழுகையில் பாக்கெட்டைத் தடவிப்பார்க்கும்போதும் அவரைப் பார்க்கப்பாவமாக இருக்கிரது. தம்பியின் முன்னிலையில் மனைவி, குழந்தையை யாரோ போல கண்டுகொள்ளாமல் தவிப்பதும் நன்று. சண்டைக் காட்சிகளும் அவரது உடல் வலிமைக்குப் பொருத்தமாக இருக்கின்றன.

ஒரு கிராமத்து அப்பாவிப் பெண்ணாக சாந்தினி வெகு பொருத்தம். அதிகம் பேசாமல் பார்வை முக பாவங்களிலேயே அவற்றைக் காட்டிவிடுவது நல்ல நடிப்புக்குச் சான்று. உதவி செய்ய வந்த சந்தோஷை உபத்திரவத்துக்கு ஆளாக்கி விட்டத்ற்காக வருந்தும்போதும், இவர்கள் திருமணம் பற்ரி அறியாத சந்தோஷ் வீட்டில் அவருக்குப் பெண் பார்க்கும் தகவல் அறிந்து, “பொண்ணு பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்குங்க…” என்று சொல்லும்போதும் வெள்ளந்தி நடிப்பு வெள்ளாமையாக விளைந்து தெரிகிறது.

சந்தோஷின் நண்பர்களாக வரும் சாம்ஸ், கோவிந்த மூர்த்தியால் உதவி இயக்குநர்களின் போராட்ட வாழ்வையும் இறுக்கமில்லாமல் சிரித்து உணரமுடிகிறது. மற்றும் சாந்தினியின் அப்பா ஜி.எம்.குமார், அம்மா சுஜாதா, டைரக்டர் டிபி. கஜேந்திரன் ஆகியோர் படத்தின் தேவையைச் சரியாக நிறைவேற்றுகிறார்கள்.

கதை நடைபெறும் 96-ம் ஆண்டைத் திரையில் கொண்டு வந்திருப்பதில் கலை இயக்குநரின் கைவண்னம் தெரிகிறது. அதேபோல் ஆர்.எஸ்.செல்வாவின் ஒளிப்பதிவும் அந்தக் காலக் கட்டத்துக்கு நம்மை இட்டுச் செல்கிறது. ஹித்தேஷ் முருகவேலின் இசை ஓகோ என்றில்லாவிட்டாலும் ‘ஓகே’ ரகம்.

படத்தின் இறுதியில் உண்மையான நபர்களை கதாபாத்திரங்களுடன் இணைத்துக் காட்டுவது இது உண்மைக்கதைதான் என்ற நம்பகத்தன்மையை ஏற்படுத்துகிறது. 

 

ஆனால், புகழ்பெற்ற மலையாள நடிகரான இன்னசன்ட் பலான பட தயாரிப்பாளராக வருவதும் பிறகு அவரே மனம் மாறி சந்தோஷுக்கு தயாரிப்பாளர் ஆவதும் உண்மைக் கதையில் இருக்காது என்று நம்புவோம்.

90களைப்போல் கதையம்சமுள்ள படங்கள் இப்போது வருவதில்லையே என்று ஏங்குபவர்களுக்கு இந்தப்படம் நிச்சயம் பிடிக்கும். அப்போதே வந்திருந்தால் இது ஒரு சில்வர் ஜூபிளி படம்..!