சிலந்தி கடித்தால் ‘ஸ்பைடர் மேன்’ ஆக முடியும் என்றால், நாய் கடித்த சேகர் ‘நாய் சேகர்’ ஆக முடியாதா..? என்ற ‘கடி’தான் படத்தின் லைன்.
ஆராய்ச்சியாளரான ஜார்ஜ் மரியான், விலங்குகளை வைத்து மரபணு சோதனை நடத்தி வருகிறார். அவரது முயற்சிகள் சாத்தியமில்லை என்று அவரை விஞ்ஞான கமிட்டி விலக்கி வைக்கிறது. எனவே வீட்டில் இருந்து கொண்டே ஆராய்ச்சிகளைத் தொடர்கிறார்.
ஜார்ஜின் அருகாமை வீட்டில் குடியிருக்கும் ஐடி ஊழியர் சதீஷை ஜார்ஜ் மரியான் வளர்த்து வரும் நாய் கடித்து விட, சதீஷ் கொஞ்சம் கொஞ்சமாக நாயாகவும், நாய் கொஞ்சம் கொஞ்சமாக மனிதனாகவும் ஆகிறார்கள்.
உடனே உருவத்திலும் மாறுகிறார்களா என்று கற்பனை நாயை அவிழ்த்து விடாதீர்கள். நாயின் குணாதிசயங்கள் சதீஷுக்கும், மனித உணர்வுகளும் சிந்தனைகளும் நாய்க்கும் வருகிறது. இதனால் மரியாதை கெட்டு சதீஷ் அலைய, அவருக்கு மாற்று மருந்து தயாரிக்கிறார் ஜார்ஜ்.
ஆனால், ஒரு பிரச்சினை. மருந்தை நாய்க்கும் சதீஷுக்கும் ஒரே நேரத்தில் கொடுக்க வேண்டும். மருந்து தயாரான நிலையில் கடித்த நாய் காணாமல் போகிறது. இறுதியில் நாய் கிடைத்து சதீஷ் மனிதனாக மாறினாரா என்பது படத்தின் மீதிக்கடி.
சதிஷுக்கு இந்த படத்தில் கதாநாயகன் வேடம். எனவே காமெடியைப் போலவே சென்டிமென்ட், காதல் இதியாதிகளில் அவர் வழக்கப்படியே சீரியஸ் இல்லாமல் செய்திருக்கிறார். நாயின் குணங்கள் வந்தவுடன் நாயைப் போல் செயல்களைச் செய்து, அவர் அவமானப்படுவதை நினைத்து பாவமாக இருக்கிறது. எக்ஸ்ட்ரா அதிசயமாக இதில் நடனமெல்லாம் ஆடியிருக்கிறார்.
அழகு, திறமை எல்லாவற்றிலும் நாயகி பவித்ரா லட்சுமி அளவாக தோற்றமளிக்கிறார். அடுத்தடுத்து வாய்ப்புக் கிடைக்கும் பட்சத்தில் அவர் நடிப்பை விமர்சிக்கலாம்.
மிர்ச்சி சிவா பின்னணி பேசியிருப்பதால் நாயையும் ரசிக்க முடிகிறது. குறிப்பாக “ஓ மை காட்…” என்று சொல்ல வேண்டிய ஓரிடத்தில் அவர் “ஓ மை டாக்…” என்பது பொசுக்கென்று சிரிக்க வைக்கிறது.
சங்கீத வில்லனாக வரும் (சங்கர்) கணேஷ் பாடல்களைப் பாடி ராகங்களை தன் அடியாட்களிடம் சோதிப்பதை ரசிக்கலாம். அப்போதெல்லாம் கண்டுபிடிக்காமல் கடைசியில் அவர் ‘ஐட்டத்’தை நாய் சேகர் கவ்வி விட, வலியில் அவர் அனத்தும் அனத்தலில் அவரது அடியாள் ஒருவன் சரியான ராகத்தைக் கண்டு பிடித்துச் சொல்வது நல்ல காமெடி.
படத்தை இயக்கியதுடன் சதீஷின் நண்பனாக நடிக்கவும் செய்திருக்கிறார் இயக்குனர் கிஷோர் ராஜ்குமார். இரண்டாவது பாதிக் கதையில் இருக்கும் விறுவிறுப்பு முதல் பாதியிலும் இருந்திருக்கலாம். ஸ்கிரிப்டில் இருக்கும் நகைச்சுவையைக் காட்சியாகக் கொண்டு வருவதில் கொஞ்சம் கஷ்டப்பட்டிருக்கிறார். காமெடி இயக்கம்தான் சிரமமானது என்பதால் முதல் படமான இதில் அவர் ‘பாஸ்’ ஆகி இருப்பதே பெரிய விஷயம்தான்.
அஜீஸ் – அனிருத் இசையில் பாடல்கள் ஓகே. பிரவீன் பாலுவின் ஒளிப்பதிவும் அஃதே..!
நாய் சேகர் – ரொம்பத்தான் லொள்ளு..!
Related