May 18, 2024
  • May 18, 2024
Breaking News
April 10, 2023

முந்திரிக்காடு திரைப்பட விமர்சனம்

By 0 317 Views

சாதிய சாயம் பூசிக் கொண்ட படங்கள் ஓடும் சாத்தியம் பெற்ற இன்றைய காலக் கட்டத்தில் இந்தப் போக்கு தொடங்குவதற்கு முன்பிருந்தே எடுக்கப்பட்டு வரும் படம் இது. இயக்குனர் மு. களஞ்சியம் மிகவும் போராடி முடித்து இப்போது வெளியிட்டு இருக்கிறார்.

முந்திரிக் காடு மண்டிக் கிடக்கும் தமிழக கிராமம் ஒன்றில் ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒரு இளைஞனும் பட்டியல் இன யுவதியும் காதலிக்க ஆதிக்க சாதியைச் சேர்ந்த இளைஞர்கள் அவர்களைத் துரத்திப் பிடித்து அந்தப் பெண்ணை கொடூரமாகக் கொலை செய்வதிலிருந்து படம் தொடங்குகிறது.

எந்தக் குற்ற உணர்ச்சியும் அற்ற அந்த ஆதிக்க சக்தி இளைஞர்களை சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப வைக்க எல்லா உத்திகளும் அந்த சாதியினரால் கையாளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அதே ஆதிக்க சாதியை சேர்ந்த நாயகி சுகப்பிரியா மலர், பட்டியலின இளைஞரான புகழ் மகேந்திரனை துரத்தி துரத்திக் காதலிக்க, அவர்களையும் குறி வைக்கிறது அதே கொலைகார கும்பல்.

ஆனால் சுபப்ரியா அப்படி புகழை வலிய காதலிப்பதன் நோக்கம், இந்தக் காதலில் வென்று விட்டால் தங்கள் கிராமம் இந்த தீண்டாமையில் இருந்து விடுபட்டு விடும் என்ற நம்பிக்கையால்.

காதலர்களில் சுபப்ரியா ஐஏஎஸ் தேர்வுக்கும், புகழ், காவலர் தேர்வுக்கும் தயார் செய்து கொண்டு இருக்க, இப்போது ஊர் பஞ்சாயத்தில் பட்டியலின இளைஞர்கள் ஏற்கனவே இது போன்ற காதல் நிகழ்வில் தங்கள் சாதிப் பெண் கொல்லப்பட்டது போல இப்போது ஆதிக்க சாதியை சேர்ந்த சுகப்பிரியாவை கொல்ல நிர்ப்பந்திக்க, அவரது உயிருக்கும் குறி வைக்கிறார்கள் ஆதிக்க சாதி இளைஞர்கள்.

காதலர்களின் கல்வி நோக்கம் நிறைவேறியதா, காதல் வென்றதா அல்லது ஆதிக்க சக்தியனரின் வன்மம் வென்றதா என்ற கேள்விகளுக்கு பதில்தான் இந்த படத்தின் கிளைமாக்ஸ்.

சுபப்ரியா மலர் துரத்தித் துரத்திக் காதலிக்கும் இளைஞனாக புகழ் மகேந்திரன் அப்பாவித் தனத்துடன் நடித்திருக்கிறார். ஆதிக்க சாதி இளைஞர்கள் அவர் உயிருக்குக் குறி வைக்க சுகப்பிரியாவோ தொடர்ந்து காதலிக்க தன் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று நடுங்கும் காட்சிகளில் அருமையாக செய்திருக்கிறார் புகழ்.

அதேபோல் தன் லட்சியப்படி காவலராக வெற்றி பெற்று அதே கிராமத்துக்கு சீருடை மற்றும் முறுக்கு மீசையுடன் வரும்போது அவரா இவர் என்ற அளவில் மிடுக்காக இருக்கிறார்.

தெய்வம் என்ற பாத்திரத்தில் நடித்திருக்கும் நாயகி சுகப்பிரியா மலர் புது முகமாக இருந்தாலும் பல படங்களில் நடித்த அனுபவ நடிகை போல படத்தை முழுதும் தோளில் தாங்கி இருக்கிறார். அதுவும் தங்கள் சாதியாலேயே துன்புறுத்தப்படும் காட்சிகளில் அவருக்கு எவ்வளவு அடியும் உதயம் பட்டதோ  தெரியவில்லை. அத்தனையும் தாங்கி அற்புதமாக நடித்திருக்கிறார் சுபப்ரியா.

படத்தில் அவரைச் சுற்றி தான் கதையே நகர்வதால் அந்த பாத்திரத்திற்கு மிகவும் நியாயம் சேர்த்திருக்கிறார்.

அவரை விட ஒரு படி மேலாக நடித்திருப்பவர் சுகப்பிரியாவின் தந்தையாக வரும் ஜெயராவ். அவர் வயதுக்கு அவ்வளவு கனமான வசனங்களை அத்தனை உணர்ச்சி பூர்வமாகப் பேசி, கம்பு சண்டை இட்டு எத்தனை உழைக்க முடியுமோ அந்த முழு அர்ப்பணிப்பையும் கொடுத்து நடித்திருக்கிறார் ஜெயராவ்.

படத்தின் திரைக்கதை மட்டும் சீராக இருந்திருந்தால் இந்தப் படத்தில் நடித்த சுகப்பிரியாவுக்கும் ஜெயராவுக்கும் விருதுகள் குவிந்திருக்கும்.

காவல் ஆய்வாளராக வரும் சீமான் அவரது வழக்கமான மிடுக்குடன் படம் முழுவதும் வலம் வருகிறார். சீருடை அணியாமல் வரும் காட்சிகளில் அவர் பேசும் வசனங்கள் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளராகவே அவரை உணர வைக்கிறது.

இமையம் எழுதிய ‘பெத்தவன்’ கதையிலிருந்து இந்தப் படத்தின் திரைக்கதையை உருவாக்கி இருக்கும் இயக்குனர் மு.களஞ்சியம், இந்த ஒரே படத்தில் பல அரசியல் விவாதங்களை முன் வைக்கிறார். 

அந்த அரசியல் விஷயங்கள் முதன்மைப் பட்டு விடுவதால் படத்தின் திரைக்கதையில் கவனம் செலுத்த முடியாமல் சில இடங்களில் வேகம் எடுத்தும் சில இடங்களில் தொய்வாகவும் போகிறது படம்.

குறிப்பாக புகழை ஒரு லட்சியத்துடன் வம்படியாகக் காதலிக்கும் சுபப் ரியா அவர்களை குறிவைக்கும் கும்பல் சுற்றி வளைக்கும் போது மட்டும் பயந்து நடுங்குகிறார். இதே காட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக வரும்போது சலிப்பு ஏற்படுகிறது.

“அந்தப் பையனை விட்டு விடம்மா …!” என்று பார்வையாளர்களாகிய நாமே கத்தலாம் போல் தோன்றுகிறது. அதேபோல் புகழ் காவல் அதிகாரியாகி அந்த ஊருக்குள் வந்ததும் சட்டப்படி பிரச்சனைகளை சந்திப்பார் என்று பார்த்தால் அவர் ஒன்றுமே செய்யவில்லை.

பிடித்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள சட்டமே வழி வகுக்க இவர் ஊருக்கு பயந்து ஓடிக் கொண்டிருப்பதெல்லாம் லாஜிக் இல்லாத காட்சிகள். அதற்கு அவர் போலீசாக ஆக வேண்டிய அவசியமே இல்லை.

அடுக்குத் தொடர் மற்றும் கவிதைத்தனமான வசனங்கள் படத்தின் இயல்பை மிகவும் பாதிக்கின்றன.

படத்துக்குள் மேற்படி கதையை சீமான் எழுதுவதாகக் காட்டுவதால் இது நிஜமாக நடந்த கதையா அல்லது அவர் எழுதும் கற்பனைக் கதையா என்பதும் புரியவில்லை.

ஒளிப்பதிவாளர் ஜி.ஏ.சிவசுந்தரம் முந்திரிக் காட்டின் ஊடே பயணித்து காட்சிகளை இயல்பாகப் படம் பிடித்திருக்கிறார். பாடல்கள் பரவாயில்லை என்ற நிலையில் பின்னணி இசையில் உணர்ச்சியைக் கூட்டி இருக்கிறார் ஏ.கே.பிரியன்.

இப்போதைய சாதிய படங்கள் வருவதற்கு முன்னாலேயே எடுக்கப்பட்ட படம் இது என்பதால் அப்போதே வந்து இருந்தால் வெற்றி பெறும் சாத்தியம் இருக்கும்.

பிந்தி வந்த முந்திரி..!