கடந்தவாரம் வெளியாகி இன்னும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் ‘மான்ஸ்டர்’ பட வெற்றிக்காக செய்தியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. அதில் படக்குழுவினர் பேசியதிலிருந்து…
இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் –
“படத்தின் முதல் வரியை எழுதும்போது இந்தளவு வெற்றி கிடைக்கும் என்று நினைக்கவில்லை. குழந்தைகள் படமாக இருக்கும் என்றும் நினைக்கவில்லை. நம் வீட்டைச் சுற்றி இருக்கும் எலியை பிரம்மாண்டமாக காட்ட வேண்டும் என்று தான் எடுத்தேன்.
பத்திரிகையாளர்கள் எழுதிய விமர்சனத்தில் எஸ்.ஜே.சூர்யாவைத் தவிர யாரையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை என்று இருந்தது. படம் வெளியாவதற்கு மூன்று நாட்களுக்கு முன் சிறிது பதட்டம் இருந்தது. பத்திரிகையாளர்கள் காட்சியைப் பார்த்த பிறகுதான் எனக்கு நம்பிக்கை வந்தது.
இந்தக் குழுவில் இருக்கும் அனைவருக்கும் நன்றி. எல்லோரும் தங்களுக்கு கொடுத்த பணிகளை தாண்டி பணியாற்றினார்கள் என்றார். இதேபோல் தரமான படங்களை இயக்குவேன்..!”
வசனகர்த்தா சங்கர் –
அரசியலில் எல்லோரும் ‘நான் வெற்றி பெற்றேன்…’ என்று கூறுகிறார்கள். நாங்களும் இப்படம் மூலம் வெற்றியடைந்திருக்கிறோம். டிரீம் வாரியஸ் பிக்சர்ஸ்-ன் நோக்கம் குடும்பத்தோடு வந்து பார்க்க வேண்டும் என்று இருக்கிறது. ஏவிஎம்-ற்கு பிறகு இவர்களுக்குதான் அந்த நோக்கம் இருக்கிறது என நினைக்கிறேன். வேறு நிறுவனமும் இருக்கலாம், ஆனாலும் இவர்களை நான் நேரிடையாக பார்க்கிறேன்.
நல்ல வசனங்களையும், இலக்கியங்களையும் திரைப்படத்தில் கொண்டு வரவேண்டும். அதற்கு நெல்சன் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். எஸ்.ஜே.சூர்யா கதாபாத்திரத்திற்கு இந்தளவு பொருத்தமாக இருப்பார் என்ற நினைக்கவில்லை..!”
கருணாகரன் –
“ஒரு எளிமையான படத்தை மிகப்பெரிய வெற்றிப் படமாக்கிய பத்திரிகையாளர்களுக்கு நன்றி. இதுபோல தரமான படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் நெல்சனுக்கு நன்றி. எஸ்.ஜே.சூர்யா அவர்களுடன் நடிப்பவர்களை கதாபாத்திரத்திற்கேற்றவாறு இயல்பாக வைத்துக் கொள்வார். பிரியாவும் நன்றாக பழகுவார்..!”
கதாநாயகன் எஸ்.ஜே.சூர்யா –
“முதல் வார வெற்றி, இரண்டாவது வாரம் இரட்டிப்பு வெற்றியானதில் மகிழ்ச்சி. நாயகனைத் தேர்ந்தெடுத்து படம் பார்க்கும் காலத்தில், கதைக்காக பார்க்க வருகிறார்கள் மக்கள். இப்படத்தில் கதைதான் நாயகன்.
அனைத்து திரையரங்கிலும் சென்று பார்த்தோம். தாத்தா, பாட்டி, குழந்தைகள் என்று குடும்பமாக வந்து பார்க்கிறார்கள். என்னைப் பார்த்து ‘எலி மாமா’ என்று ஒரு குழந்தை கூறினான். அந்தச் சிறுவனை புகைப்படம் எடுத்து எனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறேன்.
இம்மாதிரி குழந்தைகளைப் பார்க்கும்போது இன்னும் 10 வருடங்கள் இதேபோல் தரமான படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பேன். பாகுபலிக்கு பிறகு இப்படத்திற்கு தான் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது என்று கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
எந்த உயிருக்கும் தீங்கு செய்யக்கூடாது என்ற வள்ளலாரின் வரிகள் குழந்தைகள் மனதில் ஆழமாக பதியச் செய்ததே இயக்குநரின் வெற்றி. குழந்தைகள் மனதில் அன்பை விதைத்திருக்கிறார் இயக்குநர்..!”
தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு –
“ஒரு படத்தை உருவாக்குவதற்கு கதை மட்டுமே என்பதைத் தாண்டி, எந்த பிரச்னை வந்தாலும், தடையில்லாமல் வெளியாகும் வரை போராட்டம்தான். இதை இயக்குநர் நெல்சன் நன்றாக செய்திருக்கிறார். ஒரு நல்ல படம் திரையரங்கிற்கு செல்வதில் சிரமம் இருக்கும். ஆனால், முதல் கட்டமாக உதவி புரிந்தது பத்திரிகையாளர்கள்தான். முதல் நாளிலிருந்தே இப்படத்திற்கு ஆதரவளித்த பத்திரிகையாளர்களுக்கு நன்றி.
சிறிய படங்களுக்கு திரையங்குகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். ஆனால், இப்படத்திற்கு திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இதேபோல் தரமான படங்களை கொடுக்க வேண்டும்..!”
Monster Thanksgiving Meet