September 24, 2023
  • September 24, 2023
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • தேசப்பற்றுடன் பாசம் கலந்த படமாக உருவான மிஷன் – சாப்டர் 1
July 13, 2023

தேசப்பற்றுடன் பாசம் கலந்த படமாக உருவான மிஷன் – சாப்டர் 1

By 0 117 Views

‘மிஷன் இம்பாசிபிள்’ வந்து உலகையே கலக்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தமிழ்ப் படமாக ‘மிஷன் – சாப்டர் 1’ வெளிவருகிறது. இயக்குநர் விஜய் இயக்கத்தில், அருண் விஜய் நடிக்க தேசப்பற்றுடன் சென்டிமென்ட் கலந்து  உருவாகியிருக்கிறது ‘மிஷன் – சாப்டர் 1’.

லண்டனில் நடக்கும் கதையைக் கொண்ட இப்படத்தில் அருண் விஜய்யுடன் எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், அபி ஹாசன், பரத் போபண்ணா, சிறுமி இயல், விராஜ், ஜேசன் ஷா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

சந்தீப் கே.விஜய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ஏ.மகாதேவ் கதை எழுத, திரைக்கதை, வசனம் எழுதி விஜய் இயக்கியுள்ளார்.

படம் வெளிவரவிருக்கும் நிலையில் நடிகர் அருண் விஜய் மற்றும் இயக்குநர் விஜய் இருவரும் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

 

“இதுவரை என்னுடைய கதைகளை மட்டுமே நான் இயக்கி வந்திருக்கிறேன். இப்போதுதான் முதல் முறையாக மகாதேவ் கதையை இயக்குகிறேன். மகாதேவும், நானும் தலைவி படத்தில் இணைந்து பணியாற்றினோம் அப்போது அவர் சொன்ன இந்தக் கதை பிடித்திருந்தது. இதைப் படமாக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்…” என்று ஆரம்பித்த விஜய் ஆங்கிலத்தில் தலைப்பு வைத்ததற்கான காரணத்தையும் கூறினார்.

“இதற்கு முதலில் ‘அச்சம் என்பது இல்லையே’ என்றுதான் தலைப்பு வைத்தோம். ஆனால் படத்தைப் பார்த்த லைகா புரொடக்‌ஷன்ஸ் குழுவினரும், சுபாஸ்கரன் சாரும் “இது ஆக்‌ஷன் படமாக இருக்கிறது. நிச்சயம் தமிழ் மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெளியிடலாம் என்று சொன்னார்கள். அதனால்தான் படம் வெளியாகும் நான்கு தென்னிந்திய மொழிகளுக்கும் பொருத்தமாக ‘மிஷன் – சாப்டர் 1’ என்ற தலைப்பு வைத்தோம்.”

இந்தப் படம் லண்டனில் படமாக்கப்பட்டதற்கான காரணத்தையும் கூறினார் விஜய்.

“கதை முழுக்க லண்டனில் நடப்பது போல தான் மகாதேவ் எழுதியிருந்தார். அதனால் தான் அங்கு படமாக்கினோம். அதன் அவசியம் படம் பார்க்கும் போது உங்களுக்குத் தெரியும்.

இப்படி ஒரு பலமான ஆக்‌ஷன் கதையை  பண்ண யோசித்தபோது  அருண் விஜய் சார்தான் நினைவுக்கு வந்தார். உடனே அவரிடம் கதையைச் சொன்னபோது அவரும் சம்மதித்தார்.

படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளில் டூப் போடலாம் என்று சொன்னால், நானே செய்கிறேன், என்று சொல்லி நடிப்பார். படப்பிடிப்பில் பல முறை அவருக்குக் காயம் ஏற்பட்டது.

லண்டனில் பேருந்து ஒன்றில் அதன் குறுகிய இடத்துக்குள் சண்டைக்காட்சி ஒன்றைப் படமாக்கினோம், அதில் அவரது இடது காலில் அடிபட்டு வீங்கிவிட்டது. முழங்காலின் உள்ளே சதை கிழிந்து போக, அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில், சில நாள் ஓய்வுக்குப் பிறகு நடித்தார். ஒரு காட்சியில் நடித்து முடித்ததும் முழங்கால் வீங்கிவிடும். உடனே ஐஸ் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இப்படியே எல்லாக் காட்சியையும் நடித்து முடித்தார்.

இன்னொரு முறை சண்டைக்குப் பயன்படுத்த வேண்டிய டம்மி சங்கிலி வரவில்லை என்றதும், ஒரிஜினல் சங்கிலியைக் கையில் சுற்றிக்கொண்டு சண்டை போட ஒத்துக்கொண்டார். மிகக் கனமான அதைக் கையில் கட்டிக்கொண்டு சண்டையிட்டபோது கையில் இரத்தம் வடிந்தது. ஆனால், அதை பொருட்படுத்தாமல் அவர் அந்த காட்சியில் நடித்தார். அது எனக்கு தர்மசங்கடமாக இருந்தது. அந்த அர்ப்பணிப்பு விஜய் சாரின் மிகப்பெரிய பலம்..” என்ற அவரைத் தொடர்ந்து பேசினார் அருண் விஜய்.

“விஜய் சார் சொன்ன இந்தக் கதை நன்றாக இருந்தது. படத்தில் ஆக்‌ஷனோடு எமோஷனும் இருந்ததால் இதில் நடித்தேன். படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது. படம் முழுவதிலும் ஆக்‌ஷன் மூட் இருக்கும். அது தியேட்டரில் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தைக் கொடுக்கும்.

என்னிடம் வருபவர்களே ஆக்ஷன் கதைகளைத் தான் கொண்டு வருகிறார்கள். இருந்தாலும் அதிலும் வித்தியாசமான படங்களைச் செய்ய விரும்புகிறேன். ஹரி சாருடன் செய்த யானை வேறு விதமான கமர்ஷியல் படம். இப்போது பாலா சார் இயக்கத்தில் நடிக்கிறேன். இந்தப் படத்திலும் கடினமாக உழைத்திருக்கிறேன். வெளியில் சொல்வது போல் அவர் ஒன்றும் கண்டிப்பாக இல்லை. நல்ல விதமாகவே படப்பிடிப்பு போய்க் கொண்டிருக்கிறது. இப்படி ஒவ்வொரு படத்திலும் உடலை வருத்திக்கொண்டு நடிப்பது பெரிய இயக்குநர்களின் படங்களில் பணியாற்ற வேண்டும் என்பதற்காகத்தான்..!” என்றார்.

லண்டனில் ஒரு சிறைச்சாலைக் காட்சி எடுக்க வேண்டும். அங்கே அதை எடுக்க முடியாததால் லண்டன் சிறைச்சாலை போன்ற ஒரு செட்டை சென்னையில் போட்டிருக்கிறார்கள்.

5 கோடி ரூபாய் செலவில் 4.5 ஏக்கர் பரப்பளவில் போடப்பட்ட அந்த செட், மழை மற்றும் புயலால் இரண்டு முறை பாதிப்படைந்து மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப் பட்டிருக்கிறது.

அந்த சிறைச்சாலையில் கைதிகளுக்காக 250 வெளிநாட்டினரை சென்னைக்கு அழைத்து வந்து நடிக்க வைத்தது பெரும் சவாலாக இருந்ததாகக் கூறினார் இயக்குநர் விஜய்.

“250 பேருக்கும் தங்கும் வசதி அவர்களுக்கு தேவையான சாப்பாடு மற்றும் மழையினால் பாதிக்கப்பட்ட போது அதற்கான நிவாரணம் என்று எல்லா பிரச்சினைகளையும் சுகமாக  முடித்ததற்கு ஸ்ரீ சீரடி சாய் மூவிஸ் நிறுவன தயாரிப்பாளர் ராஜசேகர் சார் முக்கிய காரணம்..!”

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் விரைவில் வெளியாக உள்ளது ‘மிஷன் – சாப்டர் 1′.

“இதைத்தொடர்ந்து ‘ மிஷன் – சாப்டர் 2’ வருமா..?” என்று விஜய்யிடம் கேட்டபோது “அது இந்த படத்துக்கு நீங்கள் தரும் வரவேற்பை பொருத்தது..!” என்றார்.