May 6, 2024
  • May 6, 2024
Breaking News
January 14, 2024

மிஷன் சாப்டர் 1 திரைப்பட விமர்சனம்

By 0 94 Views

தொடக்கத்தில் மறைந்த கேப்டனுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள். தொடர்ந்து வரும் படத்தில் பாகிஸ்தான் தீவிரவாதி கதை உள்ளே வர இதுவும் ஒரு கேப்டன் கதைதான் என்று புரிந்து விடுகிறது.

ஒரு காஷ்மீரிய கிராமத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் உள்ளே புகுந்து இருப்பது தெரிய வருகிறது. அவர்கள் ஏதோ திட்டத்துடன் இந்தியாவுக்கு வந்திருப்பது புரிகிறது.

இங்கே மனைவியை இழந்த அருண் விஜய் தன் மகளின் உடல்நலப் பிரச்சனையை தீர்ப்பதற்காக லண்டனுக்கு போகிறார். அங்கே மருத்துவமனைக்கு பணம் புரட்டும் முயற்சியில் போலீஸில் சிக்கி சிறைக்கு செல்கிறார்.

அந்த சிறையில்தான் அங்கே இந்தியாவில் இருக்கும் தீவிரவாதியின் கைக்கூலிகள் இருப்பதை அறிந்து கொள்கிறார். ஏற்கனவே அந்த தீவிரவாதியின் கொட்டத்தை அடக்கியவர் இப்போது என்ன செய்யப்போகிறார் என்பதுதான் மீதிப் படம்.

படத்துக்கான திரைக்கதை, வசனம், இயக்கம் விஜய்.

பின்பாதியில் காவல்துறை அதிகாரியாக கம்பீரத் தோற்றத்துடன் வருகிற அருண் விஜய், முன்பாதியில் மக்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டிய அவசியத்திலும் உடலை முறுக்கேற்றிக் கொண்டே அலைவது பொருந்தவில்லை.

ஆக்சன் காட்சிகளில் சுழன்று அடிக்கும் அவர், மகளைக் காப்பாற்றப் போராடும்போது கொஞ்சம் நடிக்கவும் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

லண்டனிலுள்ள சிறைச்சாலை ஜெயிலராக வருகிற எமி ஜாக்ஸன் ஆரம்பக் காட்சிகளில் பரபரப்பை ஏற்படுத்தி விட்டு பின் பாதையில் அருண் விஜய்க்கு வழி விட்டு ஒதுங்கி கொள்கிறார்.

அருண் விஜயின் குழந்தை சேர்க்கப்பட்ட மருத்துவமனையில் நர்சாக வருகிறார் நிமிஷா சஜயன். அவரது நடிப்புக்கு சவாலான வேடம் இது இல்லை என்றாலும் முடிந்தவரை நடிப்பை காட்டி இருக்கிறார்.

அருண் விஜய்யின் மகளாக வருகிற பேபி இயல் காட்சிகளின் தன்மையுணர்ந்து, துறுதுறுப்பான நடிப்பால் மனதுக்குள் நிறைகிறார்.

லண்டன் சிறையில் அருண் விஜய்க்கு நண்பனாகிற அபி ஹாசன், தீவிரவாதிகளின் தலைவன், அவனது உத்தரவுக்கு கட்டுப்படுபவர்கள், லண்டன் சிறை அதிகாரிகள் என மற்ற நடிகர்களின் பங்களிப்பு கச்சிதம்.

ஜிவி பிரகாஷின் இசையில் பாடல்கள் மனதைவருட, பின்னணி இசை சண்டைக் காட்சிகளுக்கு சுறுசுறுப்பு சிறகு பொருத்தியிருக்கிறது.

லண்டன் சிறை, அதற்குள் கலவரம் என கடந்தோடும் காட்சிகள் அத்தனையும் விறுவிறுப்புக்கு கேரண்டி தருகின்றன. தொடர்ச்சியான அந்த சண்டை சற்றே அயர்ச்சி தரவும் செய்கிறது.

மிஷன் – இன்னொரு ஜெயிலர் விஷன்..!