March 1, 2024
  • March 1, 2024
Breaking News
January 16, 2024

ஹனு மான் திரைப்பட விமர்சனம்

By 0 81 Views

சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் என்றெல்லாம் அசாத்திய சக்தி படைத்த மனிதர்களை ஹாலிவுட் வழங்குவதை பார்த்து கிட்டத்தட்ட அதே பாணியில் ஹனு மான் (Hanu Man) என்ற பெயர் வைத்திருக்கும் சூப்பர் ஹீரோவின் கதை இது.

மிகவும் புத்திசாலித்தனமாக அமைக்கப்பட்ட திரைக்கதை இந்தப் படத்தின் பலமாக அமைந்திருக்கிறது. அத்துடன் இப்போதைய ராமராஜ்ய காலத்தில் படத்தை வெளியிட்டு  பேரைச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார் இந்த படத்தின் இயக்குனர் பிரசாந்த் வர்மா.

படத்தின் ஆரம்பத்தில் ஒரு சிறுவன் சூப்பர் ஹீரோ ஆக பல விதங்களிலும் ஆசைப்பட்டு தோற்றுப் போகிறான். சூப்பர் ஹீரோக்கள் அனைவருக்கும் பெற்றோர் இல்லை என்கிற உண்மையை அறிந்து கொண்டு, பெற்றோர் இல்லாமல் இருந்தால்தான் சூப்பர் ஹீரோவாக முடியும் என்று தவறாகப் புரிந்து கொண்டு தன் பெற்றோரையே கொல்லும் அளவிற்கு அவன் போகும் போது நமக்கு ‘பக்…’ என்று இருக்கிறது.

அவன் வளர்ந்ததும்தான் தெரிகிறது, நல்லவேளை அது ஹீரோ இல்லை என்று. வில்லன் வினய்தான் அவர். இப்படி வில்லனின் அறிமுகத்தில் ஆரம்பிக்கும் உத்தி புதிது.

அதன் பிறகுதான் நாயகன் தேஜா சஜ்ஜா அறிமுகம் ஆகிறார். குரங்குக்கே டேக்கா கொடுத்து மாங்காய்களை பறிப்பதாக வரும் தேஜா, சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபட்டு ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கிறார். 

அக்கா வரலட்சுமி சரத்குமாரிடம் தண்டச்சோறு சாப்பிட்டபடி திரிந்து கொண்டிருக்கும் அவருக்கு கடவுள் அனுமனிடமிருந்து விசேஷ சக்தி ஒன்று கிடைக்கிறது. அதன் விளைவாக மாவீரன் ஆகிறார் அவர்.

அவருக்கு அந்த சக்தி எப்படி கிடைத்தது என்று அறிந்து கொள்ளும் வில்லன் வினய் அதை அபகரிக்க என்ன முயற்சிகள் செய்கிறார், அதெல்லாம் பலித்ததா என்பது கிளைமாக்ஸ்.

பாத்திரம் என்ன தன்மையுடன் இருக்கிறதோ அதற்கு அச்சு அசலாக பொருந்தி இருக்கிறார் தேஜா சஜ்ஜா. ஒரு சூப்பர் ஹீரோவின் பாத்திரம் என்றாலும் ரொம்ப சீரியஸாக சொல்லாமல் சின்னச் சின்னக் காமெடிகள் செய்து நம்மை ரொம்பவே எங்கேஜ் ஆக்கி விடுகிறார் தேஜா.

அனுமனின் ஆதரவு பெற்ற பக்தன் என்றாலும் இன்னொரு பக்கம் அம்ரிதா அய்யரைக் காதலித்துக் கொண்டிருப்பது அனுமாருக்கே மாரைத் திறந்து ‘ ஹார்ட்டின் ‘ காட்டுகிற மார்க்கம்.

வாங்கிய அடிகளுக்கு கொடுத்த அடிகள் அதிகமாக இருந்ததால் மட்டுமே ஹீரோவாக நினைக்க வைக்கிறார் தேஜா.

அம்ரிதா அய்யருக்கு முக்கியத்துவம் இல்லை என்று சொல்லிவிட முடியாத அளவுக்கு அந்த ஊரையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் ஊர்க் காவலன் என்கிற தாதாவை ஒற்றைப் பெண்ணாய் எதிர்த்து கேட்கிற கேரக்டர் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

மட்டுமல்லாமல் மருத்துவம் படித்து வந்த நிலையில் மனித உயிரின் மகத்துவம் தெரிந்தவராகவும் வந்து முக்கியத்துவம் பெறுகிறார் மிஸ். அய்யர். 

நேரில் பார்த்தால் பரம சாதுவாக… வினயம் இல்லாமல் இருக்கும் வினய் படத்தில் மட்டும் எப்படி வில்லனாக பயமுறுத்துகிறார் என்று தெரியவில்லை. 

தேஜாவுடனே சுற்றிக்கொண்டு காமெடி செய்யும் அந்த தெற்றுப்பல்(பால்)காரர் கவனிக்க வைக்கிறார்.

‘சாது’வாக வரும் சமுத்திரக்கனி கடைசி வரை அப்படி சாதுவாகவே இருந்து விட மாட்டார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

நிஜக் குரங்கையும் ஒரு கேரக்டராக்கி அதன் மைண்ட் வாய்ஸ் நமக்கு கேட்க வைத்திருப்பது ரசிகத்தக்க விஷயம். அதற்குப் பொருத்தமாக அனிமேஷன் பக்காவாக செய்திருக்கும் கலைஞர்களுக்குப் பாராட்டுகள்.

சூரியனைப் பழம் என்று நினைத்து அதைக் குழந்தை அனுமன் பிடிக்கப் போனதில் உலகம் இருண்டு போனதும், சூரியனை அனுமன் பிடியில் இருந்து காப்பாற்ற, இந்திரன் தன் வஜ்ராயுதத்தால் அனுமனைத் தாக்கிய அனுமன் காவியமும் உலகுக்குத் தெரியும்.

ஆனால் அப்படித் தாக்கிய போது சிந்திய ஒரு சொட்டு ரத்தம் கடலுக்குள் இருக்கும் சிப்பியில் விழுந்து சக்தி மிக்க சிவப்பு முத்தாகி அது ஹீரோவின் கையில் கிடைத்தது என்று அநியாயத்துக்குக் கதை விட்டிருந்தாலும் அந்த அபாரக் கற்பனையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் உள்ளிட்ட எல்லா அம்சங்களிலும் அம்சமாக இருக்கிறது படம்.

ராமர் கோயில் திறக்கவிருக்கும் நேரத்தில் அனுமன் கதையைத் தூக்கிப் பிடித்து, இடைவேளை கார்டைக் கூட தூக்கி விட்டு ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று போட்டிருக்கும் டீமின் காவி(ய)த்திறன் புல்லரிக்க வைக்கிறது.

ஹனு மான் – பக்தி மான்கள் இணைந்து உருவாக்கியுள்ள சக்தி மான்..!

– வேணுஜி