April 26, 2024
  • April 26, 2024
Breaking News
November 12, 2022

மிரள் திரைப்பட விமர்சனம்

By 0 598 Views

தலைப்பிலேயே நம்மை படத்துக்கு தயார்படுத்தி விடுகிறார் இயக்குனர் சக்திவேல்.

படம் தொடங்கியதுமே பரத்தின் மனைவியான வாணி போஜனுக்கு வினோதமான ஒரு பயங்கர கனவு வந்து அவரை மிரள வைக்கிறது. அதேபோல் அவரது கணவரும் படத்தின் நாயகனுமான பரத்தும் ஏதோ ஒரு  சிக்கலில் இருப்பது அவர் பேசும் தொலைபேசித் தகவலில் இருந்து தெரிகிறது.

இருவரும் காதல் திருமணம் புரிந்து கொண்டவர்கள் என்பதும் நமக்கு புரிய வர எல்லா பிரச்சனைகளிலும் இருந்து விடுபட வாணி போஜனின் சொந்த ஊருக்கு தங்கள் மகன் அங்கித்துடன் குலதெய்வ பிரார்த்தனைக்கு செல்கிறார்கள். அவர்களுடன் பரத்தின் நண்பனான ராஜ்குமாரும் பின்னால் வந்து சேர்ந்து கொள்கிறார்.

அந்த ஊரே வினோதமாக இருக்க அந்த ஊரில் யாரும் கண்ணாடி பார்க்க கூட பயப்படுகிறார்கள். வீட்டின் புழக்கடையில் இருக்கும் ஒரு பொம்மை முதற்கொண்டு சிறுவன் அங்கித்தை மிரட்டுகிறது.

குலதெய்வ பிரார்த்தனை முடிந்த கையோடு பரத் எதிர்பார்த்த ஒரு ப்ராஜெக்ட் நிறைவேற மறுநாள் காலையிலேயே அதற்கான பணத்தை பெற்றுக் கொள்ள இரவோடு இரவாக சென்னைக்கு காரில் மூவரும் பயணப்படுகிறார்கள்.

அப்போது நடக்கும் பயங்கரங்கள்தான் படம் நெடுக. என்ன நடக்கிறது, யார் இதைச் செய்கிறார்கள் என்று தெரியாத அளவில் பயங்கரங்கள் தொடர வாணி போஜன் கண்ட கனவு பலித்ததா, எப்படி இவர்கள் இதிலிருந்து மீண்டார்கள் என்பதுதான் மீதிக் கதை.

உடற்கட்டைப் பேணிக் காத்து வரும் பரத்துக்கு இந்த படத்தில் சவாலான வேடம் கிடைத்திருக்கிறது. தன் புஜ பலத்தை காட்டிலும் அறிவால் சாதிக்க வேண்டியதும், அதே நேரத்தில் முக்கால்வாசி படத்தில் பயந்து நடுங்குவதுமான பாத்திரத்தில் பரத் சிறப்பாக செய்திருக்கிறார்.

வந்தோம், பாட்டு பாடினோம், ஆடினோம் என்றில்லாமல் வாணி போஜனும் நடிப்பதற்கு அதிக அளவு வாய்ப்புள்ள படம். வாணி போஜனும் தன் நடிப்புப் பசிக்கு போஜனம் தேடிக் கொள்கிறார். 

இவர்களின் மகனாக வரும் சிறுவன் அங்கித்தின் நடிப்பையும் பாராட்டியாக வேண்டும்.

வழக்கமாக படங்களில் காமெடியாக நடித்து வரும் ராஜ்குமாருக்கு இந்த படத்தில் சற்றே மாறுதலான வேடம். படத்தின் கடைசி 20 நிமிடங்களை பார்க்காதவர்களுக்கு இந்த கதை புரிய வாய்ப்பில்லை என்கிற அளவில் வித்தியாசமான திரைக் கதையை கொண்டிருக்கிறது படம்.

வாணி போஜனின் தந்தையாக வரும் கே.எஸ். ரவிக்குமார் படத்தொடக்கத்தில் கொஞ்சம் கோபக்காரர் போல தெரிந்தாலும் எவ்வளவு பாசக்காரர் என்பது போகப் போக புரிகிறது.

படத்தின் தன்மையை அறிந்து இசையமைத்திருக்கிறார் பிரசாத். பின்னணி இசையில் மிரள வைத்திருக்கிறார்.

சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவில் இருளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

இது ஹாரர் படமா அல்லது ஒரு திரில்லர் படமா என்று புரியாத படமாக ஆரம்பித்து கடைசியில் ஒரு திரில்லராகவே முடித்திருக்கும் இயக்குனர் சக்திவேலுக்கும், இந்தப் படத்தின் மீது நம்பிக்கை வைத்து படத்தை தயாரித்த டில்லி பாபுவுக்கும் பாராட்டுகள்.

இப்படி செய்திருக்கலாமே என்று ரசிகர்கள் யோசிக்கும் அளவுக்கான லாஜிக் மீறல்கள் படத்தில் இருப்பதைக் குறைத்து இருந்தால் இன்னும் படத்தை ரசித்து இருக்க முடியும்.

மற்றபடி வீட்டுக்குள்ளேயே நம்மை மிரட்டுவதைத் தாண்டி இரவில் வெட்டவெளியிலும் மிரட்ட முடியும் என்பது நிருபித்திருக்கிறது இந்தப் படம்.

மிரள் – மிரட்டல்..!