இயக்குநர்கள் கையில் காசு சேர்ந்ததும் தயாரிப்பாளர்களாக மாறியிருக்கும் கோலிவுட்டில் ஒரு வித்தியாசமாக தயாரிப்பாளராக இருந்து இயக்குநராக மாறியிருக்கிறார் சுரேஷ் காமாட்சி.
‘வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்’ சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது ‘மிக மிக அவசரம்’ படத்தை தயாரித்துள்ளதுடன் இந்தப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைக்கிறார்.
இதில் ‘ஸ்ரீபிரியங்கா’ பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளனர். இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார்.
முதன்முறையாக இயக்குநராக மாறியுள்ள சுரேஷ் காமாட்சி, காவலர்களின் வலியை அறிந்து இந்த ‘மிக மிக அவசரம் ‘படத்தின் கதையை செதுக்கியுள்ளாராம். காவலர்களுக்கும் மனிதாபிமானம், மண் மீதான பற்று, மக்கள் போராட்டம் இவைகளில் அக்கறை உண்டு என்பதை படத்தில் வரும் காட்சிகளும் வசனங்களும் அழகாக பேசியிருக்கிறதாம்.
அதிலும் பெண்காவலர்கள் ’மிக மிக அவசரம்’ படத்தைப் பார்த்தால் ஒருசொட்டு கண்ணீருடன், இந்த படம் உண்மையைத்தான் பேசியிருக்கிறது என அங்கீகரிப்பார்கள் என்கிறார்கள். காவல்துறை உயர் அதிகாரிகளே இப்படத்தை பெண் காவலர்களுக்கு திரையிட்டுக் காட்டச் செய்தார்கள் என்பதை அறியும்போது இது உண்மையென்றே தோன்றுகிறது.
திரையுலகில் உள்ள சில பிரபலங்களும் விநியோகஸ்தர்களும் படம் பார்த்துவிட்டு, இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கதை மட்டுமல்ல, தாய்க்குலங்களை தியேட்டருக்கு கூட்டம் கூட்டமாக வரவழைக்கப் போகும் படமாக இது இருக்கும் என பாராட்டியுள்ளார்கள்..
அந்தவகையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ’மிக மிக அவசரம்’ வரும் அக்-11ஆம் தேதி திரைக்கு வருகிறது.
நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை வெளியிட்டு வரும் லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் மிகப் பிரம்மாண்டமாக படத்தை வெளியிடுகிறார்.