தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுக்க தொடர்ந்து நடந்து வரும் பாலியல் துன்புறுத்தல்களில் சில சம்பவங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்கள் இறந்து விடுவதும் உண்டு.
ஆனாலும் பாலியல் குற்றவாளிகள் கைது செய்யப்படுவதும் சில நாட்களில் அல்லது சில மாதங்களில் அவர்கள் வெளியே வந்து விடுவதும் வாடிக்கையாக இருக்க பாதிக்கப்பட்டவர்களின் நிலை இந்த சமூகத்தில் வாழ முடியாத அளவில் இருக்கிறது.
என்னதான் சட்டங்கள் கடுமையாக இருந்தாலும் அதில் உள்ள சந்து பொந்துகள் வழியாக குற்றவாளிகள் தப்பித்து விடுவதால் இப்படிப்பட்ட பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு என்ன விதமான தண்டனைகள் அளிக்க முடியும் – அவர்களை எப்படி தண்டிக்க வேண்டும் என்று வித்தியாசமாக தன் எண்ணத்தை இந்தப்படத்தில் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் வேலன்.
கதை என்று பார்த்தால் மெல்லிய லைன்தான். தஞ்சாவூரில் ஒரு கிராமத்தில் வேலை வெட்டி இல்லாமல் சுற்றிக் கொண்டிருக்கும் நாயகன் அதே ஊரில் வசிக்கும் செவிலியரான நாயகி மீது காதல் வயப்படுகிறார்.
வழக்கம்போல காதலுக்கு எதிர்ப்பு ஏற்பட, காதலியை திருமணம் செய்து கொண்டு அங்கிருந்து நண்பர்களுடன் சென்னைக்குப் புறப்படுகிறார்.
வந்த இடத்தில் அவர்கள் தங்கியிருக்கும் வீட்டில் பிணம் ஒன்று புதைக்கப்பட்டிருப்பது கண்டெடுக்கப்பட அது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட இளம் பெண் என்று தெரிய வருகிறது. அதற்கு காரணமானவர்களை நாயகன் எப்படி பழி தீர்க்கிறார் என்பது கிளைமாக்ஸ்.
நாயகன் மற்றும் நாயகியாக புது முகங்கள் ஆதவ் பாலாஜி மற்றும் மதுனிகா நடித்திருக்கிறார்கள். இருவரும் புதுமுகங்கள் என்று தெரியாத அளவில் நடித்திருப்பதே இவர்களுக்கு வெற்றி தான்.
ஆதவ் பாலாஜிக்கு சண்டையிடவும் நடனம் ஆடவும் வருவது நல்ல அறிகுறி. மதுனிகாவுக்கு பெரிய வேலை இல்லை.
மதுனிகாவின் தந்தையாக ராஜ்கபூர், ஆதவ் பாலாஜியின் தந்தையாக சூப்பர்குட் சுப்பிரமணி உணர்ச்சிபூர்வமாக நடித்திருக்கிறார்கள்.
வில்லனாக வ.ஐ.ச. ஜெயபாலன் தன் பக்கத்து நியாயத்தை எடுத்து வைக்கிறார். அவர் நல்லவரா, கெட்டவரா என்று கடைசி வரை தெரியவில்லை. அவரது மகன்தான் மோசமானவராக இருக்கிறார்.
ஓஏகே சுந்தர் நல்ல இன்ஸ்பெக்டராக வந்தாலும் அவருடைய அதிகாரமும் கூட வில்லனை எதிர்க்கும் அளவுக்கு இல்லை.
நீண்டநாள் கழித்து பரணி இசையில் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் பாரதமே பாரதமே என்கிற பாடல் உணர்வுபூர்வமாக இருக்கிறது.
மிரட்டல் செல்வாவின் சண்டை பயிற்சியில் சண்டைக்காட்சிகள் நியாயமாக இருக்கின்றன. ஆர்.வேல் கதைக்கு பக்கபலமாக ஒளிப்பதிவு செய்துள்ளார்.
நாயகன் வேலைக்கு போகாமல் இருப்பதற்கான காரணமும் மகள் காதலை வேண்டாம் என்று சொல்லும் ராஜ்கபூர் அதற்கான நியாயத்தையோ சொல்லவில்லை. அதேபோல் ஆதவ் பாலாஜி மதுனிகாவின் காதலிலும் அவ்வளவு ஆழம் இல்லை.
சென்னைக்கு வந்த இடத்தில் தனக்கு சம்பந்தமில்லாத பிரச்சனையில் தலையிட்டு அதை நாயகன் தீர்க்க முயல்வதை வித்தியாசம் என்று நினைத்து இயக்குனர் செய்தாரா என்று தெரியவில்லை. ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும் தொடர்பில்லாத காட்சிகள் படத்தின் குறையாக இருக்கிறது.
இந்தக் குறைகளை தாண்டி சிறிய பட்ஜெட்டில் வணிக ரீதியாக சிந்திக்காமல் சமுதாயத்துக்கு நல்லதொரு கருத்தை சொல்ல வேண்டும் என்று நினைத்த முயற்சியை பாராட்டியே ஆக வேண்டும்.
பாலியல் குற்றங்களுக்கு பாதிக்கப்பட்டவர்களே தண்டனையை தர வேண்டும் என்கிற வாதம் இயக்குனர் முன் வைப்பது. சட்டப்படி அதை செய்ய முடியாவிட்டாலும் தர்மப்படி அதை ஏற்க முடியும்.
மெய்ப்பட செய் – சிறிய ஆனால் சீரிய முயற்சி..!