January 22, 2022
  • January 22, 2022
Breaking News
December 30, 2021

மீண்டும் திரைப்பட விமர்சனம்

By 0 83 Views

நீண்ட காலம் கழித்து இந்தப்படத்தை ‘மீண்டும்’ இயக்கியிருப்பதன் மூலம் களத்தில் இறங்கியிருக்கிறார் ‘சிட்டிசன்’ ஷரவண சுப்பையா. சிட்டிசன் சமயத்தில் அந்தப்படம் மூலம் தமிழில் ஒரு பரபரப்பைக் கிளப்பிய அவர் இந்தப்படத்திலும் ஒரு பரபரப்புடன் வந்திருக்கிறார். 

‘ஒரு மனைவி இரண்டு கணவன் : ஒரு மகன் இரண்டு தந்தை’ என்ற வாசகம்தான் அந்தப்பரபரப்பு ஏற்படக் காரணம். இந்தப்படமும் ஏதோ பிரச்சினையை முன்னெடுத்துச் சொல்லப்போகிறது என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. அதைத் தெளிவாகத்தான் சொல்லி இருக்கிறாரா என்று பார்ப்போம்.

நாயகன் கதிரவன் தொடக்கக் காட்சியிலேயே முழு நிர்வாணமாக ஒரு சித்திரவதைக் கூடத்துக்குள் அடைபட்டிருக்க நிகழ்காலத்தில் துவங்கும் கதை, கடந்த கால பிளேஷ் பேக்காக விரிகிறது.

இந்த பிளேஷ் பேக்கிலும் முதலில் இருந்து ஏ, பி, சி, டி என்று கதையை நகர்த்தாமல் ‘ஹாஃப் வே ஓபனிங்’ என்று சொல்லக்கூடிய பாதியிலிருந்து சொல்லிப் போகும் வித்தியாசமான உத்தியைக் கையாண்டிருக்கிறார் ஷரவண சுப்பையா. அப்படி நாயகன் கதிரவன் தனியாக தன் ஐந்து வயது மகனுடன் வாழ்ந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நாயகி அனகா, ஷரவண சுப்பையாவின் மனைவியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருக்கு இரண்டுமுறை கருச்சிதைவு ஏற்பட்டிருப்பதும் நமக்குச் சொல்லப்படுகிறது.

ஒரு கட்டத்தில் கதிரவனைச் சந்திக்க நேரும் அனகா, பதைபதைப்புடன் அவரைப் பற்றியும், அவர் மகனைப் பற்றியும் அறிய ஆவல் கொள்வதும், அதற்கு அவர் கணவர் உடன்படுவதும் நிகழ, அதற்குப்பின்தான் அனகா ஏற்கனவே கதிரை மணந்தவர் எனத் தெரிகிறது. அப்படியானால அந்தக் குழந்தை யாருக்குப் பிறந்தது, கணவன் உயிருடன் இருக்க ஏன் ஷரவண சுப்பையாவை அனகா இன்னொரு திருமணம் செய்தார், இரண்டு கணவன்மார்களும் உயிருடன் இருக்க, அனகாவின் முடிவு என்ன என்கிற சிக்கலான கதைக் களம்தான் இந்தப்படத்தின் கரு.

சிலருக்கு நடிப்பு ‘ஆசை’ என்ற அளவில் மட்டுமே இருக்க, சிலருக்கோ அதுவே ‘தவமா’க இருக்கும். இந்த இரண்டாவது வகையைச் சேர்ந்தவர் கதிரவன். எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் இதுவரை மூன்று படங்களில் நடித்து, தன் லட்சியத்துக்காக எந்தத் தயாரிப்பாளரையும் பலிகடா ஆகிவிடாமல் அந்தப் படங்களையும் தானே தயாரித்தும் இருப்பதும் நேர்மையான விஷயம்.

இந்தப்படத்திலும் அப்படித்தான். இந்தப்படத்தில் உளவுத்துறை அதிகாரியாக வரும் அவர், உயர் அதிகாரி எஸ்.எஸ்.ஸ்டேன்லியின் உத்தரவின் படி உலகை அச்சுறுத்தும் ஒரு சதியை முறியடிக்கப் புறப்படுகிறார். சிக்கினால் உயிர் மிஞ்சாது என்ற அளவில் உளவாளியாக ஒரு தீவுக்குச் செல்கிறார் அவர். புற வாழ்வில் அப்படி தைரியமானவராகவும், அக வாழ்வில் ஒரு அன்பான தந்தையாகவும் இருமுகம் காட்டி சிறப்பாக நடித்திருக்கிறார் கதிரவன்.

இதுவரை வெளிவந்த இந்திய அளவிலான படங்களிலேயே ஆண்கள் நிர்வாணமாக நடித்த படங்கள் ஒன்றிரண்டு மட்டுமே இருக்கலாம். அதிலும் ஒரு நிமிடம் மட்டுமே அப்படித் தோன்றியிருப்பார்கள். கமலின் கனவுப்படமான மருதநாயகத்தில் கமல் அப்படி நிர்வாணமாக சில காட்சிகளில் நடிக்க இருந்தார். அத்தனை பெரிய தைரியமான முயற்சியை இந்தப்படத்துக்காக எடுத்திருக்கும் கதிரவன், ஒரு இந்திய சினிமாவின் முதல் முயற்சியாக அதில் ‘தில்’ லாக பத்து நிமிடங்கள் நடித்துப் பாராட்டுப் பெறுகிறார்.

அது மட்டுமலாமல் அவர் மேற்கொண்ட ஆபரேஷனில் எதிரிகளின் கையில் சிக்கி தலைகீழாகக் கட்டித் தொங்க விடப்படு, தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு ரொம்பவும் கஷ்டப்பட்டு நடித்திருப்பதுடன், இறுதிக் காட்சியில் கல் மனத்தையும் கலங்க வைத்து விடுகிறார்.

ஏற்கனவே நட்பே துணை, டிக்கிலோனா படங்களில் நமக்கு அறிமுகமாக அனகா, இந்தப்பட நாயகியாகி இருக்கிறார். கதிரவனுடனான காதல் காட்சியில் அத்தனை அழகாகத் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார். நாகரீக உடைகளில் வந்தாலும் ஒரு தாயின் உள்ளத்தையும் அற்புதமாக வெளிக்காட்டி நெகிழ வைக்கிறார். அவருக்குத் தமிழில் கிடைத்த முதல் பட வாய்ப்பு இதுதான் என்பது குறிப்பிடத் தக்கது.

அவரது கணவராக வருகிறார் இயக்குநர் ஷரவண சுப்பையா. இப்படி ஒரு அன்டர்ஸ்டேன்டிங் உள்ள கணவர் வாய்த்தால் எந்தப்பெண்ணும் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பதுடன், டைவர்ஸ் என்ற பேச்சே இருக்காது. படத்தையும் இயக்கி அதில் முக்கிய வேடத்தில் நடித்தும் இருக்கும் அவருக்கு இது இரட்டைக் குதிரை சவாரி.

இந்த மூன்று பேரின் உறவுச் சிக்களுக்குள் சிக்கிக் கொண்டிருக்கும் வேடத்தில் வரும் சிறுவனும் அற்புதத் தேர்வு. அழகும், நடிப்புமாக அவனும் தன் பங்குக்கு அசத்துகிறான்.

இவர்களுடன் சப்போர்ட்டிங் பாத்திரங்களில் வரும் எஸ்.எஸ்.ஸ்டேன்லி, கேபிள் சங்கர் உள்ளிட்டோருடன் அந்த சிலாகி தீவில் வரும் வில்லியான லேடி ஹிட்லரும் தங்கள் பாத்திரங்களை உணர்ந்து செய்திருக்கிறார்கள்.

குடும்பங்களை உள்ளே இழுக்கும் ஒரு அழகான சென்டிமென்ட் கதையுடன் உலகையே அழிவிலிருந்து மீட்கும் ஒரு கதையையும் எப்படி மிக்ஸ் செய்ய வேண்டும் என்று இயக்குநர் முடிவெடுத்தாரோ தெரியவில்லை. அதேபோல் சுனாமி, நிலநடுக்கம் போன்ற இந்தியப் பேரழிவுகள் எல்லாம் செயற்கையாக உருவாக்கப்பட்டவை என்று அவர் சொல்லி இருப்பதை அறிவியல் உலகம் எப்படி எடுத்துக் கொள்ளுமோ..?

படத்தில் அங்கங்கே ஷரவண சுப்பையா எழுதியிருக்கும் இன்றைய நாட்டு நடப்பு பற்றிய வசனங்கள் சென்சாருக்குத் தப்பி வந்திருப்பது ஆச்சரியம்தான். சிலாகி தீவின் காட்சிகளுக்கேற்ற பெரிய பட்ஜெட்டில் இந்தப் படத்தை எடுத்திருந்தால் இன்னும் பிரமாண்டமாகி இருக்கும். 

நரேன் பாலகுமாரின் இசையில் கவிப்பேரரசு எழுதி இருக்கும் பாடல் தாய்ப்பாசத்தின் தேசிய கீதமாய் உள்ளத்தை உருக வைக்கிறது. ‘கர்ணனின் வலியைத் தாயறிவாள், குந்தியின் வலியை யாரறிவார்…’ என்ற வரிகள் வைரம் பாய்ந்த வரிகள். ஸ்ரீநிவாஸ் தேவாம்சத்தின் ஒளிப்பதிவில் படம் நேர்த்தியாகத் தெரிகிறது. 

பட்ஜெட் குறைபாட்டால் சில குறைகள் இருந்தாலும் சென்டிமென்ட்டில் அதைச் சமன் செய்து நிறைவைத் தருகிறது படம்.

மீண்டும் – பிரேவ் சிட்டிசன்..!