ஆடு திருடும் கள்வனுக்கும், மந்திரவாதம் செய்யும் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் காதல் வந்தால் என்ன ஆகும்..?
எல்லாக் காதலர்களுக்கும் என்ன ஆகுமோ அதுதான் ஆகும் என்கிறார்
இந்தக் கதை, திரைக்கதை, உரையாடலை எழுதி இருக்கும் எழுத்தாளர் ஜெயமோகன்.
அதை மைனா படத்தை மனதில் வைத்து இயக்கி இருக்கிறார் ஏபிஜி.ஏழுமலை.
மைனாவில் நமக்கு நன்கு அறிமுகமான சேது இந்தப் படத்தின் நாயகன் ஆகி இருக்கிறார். ஆரம்பத்தில் அவர், இரவில் ஒரு பட்டிக்குள் புகுந்து ஆட்டைத் திருடிக் கொண்டு செல்ல காவலாளிகள் அவரைத் துரத்துகிறார்கள்.
தப்பிக்க வேண்டி பாழும் கிணற்றில் குதிக்கும் அவரை மறுநாள் காலையில் மீட்டெடுக்கிறார் ஊரால் ஒதுக்கி வைக்கப்பட்ட மாந்திரீகம் செய்யும் கிழவியின் பேத்தியான நாயகி சம்ருதி தாரா.
தேடுபவர்கள் கண்ணில் இருந்து தப்பிக்க அந்த வீட்டில் ஓரிரண்டு நாட்கள் தங்க வேண்டிவரும் சேதுவுக்கு உணவு, உரையுள் , மருத்துவம் என்று எல்லாம் பகிர்கிறார் சம்ருதி. மருந்தோடு சேர்த்து மையலையும்…
இன்னொரு பக்கம் தன்னுடைய சொத்துக்களை விஸ்தரித்துக் கொண்டே போக, செல்வந்தர் பி.எல்.தேனப்பன் சில கொலைகளைப் புரிகிறார் – போலீசும் அதை கண்டும் காணாமல் அவருக்கு உதவிக் கொண்டிருக்கிறது.
இந்த இரண்டு இழைகளையும் மாற்றி மாற்றி பின்னி கிளைமாக்ஸுக்கு கொண்டு போய் நம்மை நெகிழ வைக்க முயற்சித்து இருக்கிறார் இயக்குனர் ஏழுமலை.
சேதுவின் கண்களில் தெரியும் ஒரு வெள்ளந்தியான பரிதாபம் அவரைக் கள்வனாக நம்மை உணரச் செய்யவில்லை. அப்பா கள்வனாக இருந்ததால் இவரும் கள்வனாக இருக்கிறார் என்பதை ஏற்பதற்கு இல்லை. கடைசி கடைசியாக அவருக்கு ஊரில் நல்ல பெயரும் சொந்த வீடும் இருக்கிறது என்பதெல்லாம் அநியாயத்துக்கு கட்டுக்(கு அடங்காத)கதை.
படத்தின் ஆகப்பெரிய ஆறுதல் நாயகி சம்ருதி தாரா. ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் வந்திருக்கும் குறிப்பிடத் தகுந்த நாயகி இவர். இளமை, அழகு, நடிப்புத் திறன் என்று எல்லாமும் இருந்தும், அவருக்கு இந்தப் படம் உரிய வாய்ப்பாக அமையவில்லை என்பது சற்று வேதனை.
அவரது இறுதிக் காட்சியில் அத்தனை கொடூரமான மேக்கப் போட்டு நடித்திருக்கும் ஈடுபாட்டைப் பாராட்டியே ஆக வேண்டும்.
வருகிற காட்சி எல்லாம் குடித்துக் கொண்டே இருக்கும் தேனப்பன், அதற்காக மட்டுமே ஊரார் சொத்தை எல்லாம் கொள்ளையடிக்கிறாரா என்று தெரியவில்லை.
படம் முழுவதும் ஆட்டுப்பட்டியைச் சேர்ந்தவர்கள் சேதுவை தேடிக் கொண்டிருப்பதும் (இதற்கும் முதல் காட்சியிலேயே திருடப்பட்ட ஆடு மீட்கப்பட்டு விடுகிறது… அப்புறம் எதற்காக அதைத் திருட முயற்சித்தவனை தேடிக் கொண்டே இருக்கிறார்கள் என்பது புரியவில்லை…) போலீஸ் கொலை செய்தவர்களைத் தேடிக்கொண்டிருப்பதுமாகவே செல்லும் திரைக்கதை மிகவும் அலுப்புத் தட்டுகிறது.
ஒளிப்பதிவாளர் பால பழனியப்பன், இசையமைப்பாளர் அமர்கீத்.எஸ் இருவரும் தத்தம் பங்கினைத் திருப்தியாகச் செய்திருக்கிறார்கள்.
ஜெயமோகனால் இந்தப் படத்துக்கோ, இந்தப் படத்தால் ஜெயமோகனுக்கோ எந்தப் பெருமையும் கிடைக்கப் போவது இல்லை.
அப்படி என்ன மாந்திரீகம் செய்ததற்காக சம்ருதியையும், அவர் பாட்டியையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருக்கிறார்கள் என்பதும் புரியவில்லை.
மையல் – பலிக்காத காதல் மந்திரம்..!
– வேணுஜி