‘காயமே இது பொய்யடா’ என்பது சித்தர் பாடல். அது ஒட்டுமொத்த மனித வாழ்வையும் கேள்விக்குள்ளாக்குகிறது என்றால் இதில் காதலை ‘மாயநதி’ என்று சொல்லி மனிதத்தின் அடிப்படை உணர்வுக்கெதிராகவே கேள்வியை முன்வைக்கிறார் இயக்குநர் அசோக் தியாகராஜன்.
டைட்டில் போடுகையில் ஒரு அப்பா தன் மகளுக்கு தந்தை சொல் மீறாத ‘காசாபியாங்கா’ கதை சொல்லிக்கொண்டிருக்கிறார். தந்தை சொல் மீறாமல் இருந்ததால் மாண்டுபோன அவன் போல் தான் இருக்க மாட்டேன் எங்கிறாள் கதை கேட்ட மகள். அங்கேயே கதைக்கான அடிநாதம் புரிந்து போய்விடுகிறது.
அவள் தந்தையின் பக்கம் நிற்கப்போகிறாளா அல்லது தந்தை சொல்லை மீறப்போகிறாளா..?
தந்தையாக ஆடுகளம் நரேனும், மகளாக வெண்பாவும் வாழ்ந்திருக்கிறார்கள். மகளைப் பிரசவித்தபோது மனைவி இறந்துவிட, மகளைக் கண்ணும் கருத்துமாக வளர்ர்க்கும் நரேன், அத்ற்காகவே மகளை மகப்பேறு பருத்துவராக்க விரும்புகிறார். தந்தை சொல் மீறாத மகளும் அதையே மனத்தில் ஏற்றி படித்து வருகிறாள். எல்லாம் அவளுக்குக் காதல் வரும் வரைதான். காதல் வந்தபின் என்ன ஆனது என்பது மீதிக்கதை.
அப்பாவும், மகளுமே நாயகன், நாயகி ஆகிவிடுவதால் வெண்பாவின் காதலனாக வரும் அபி சரவணனை நாயகனாக ஏற்க முடியவில்லை. பாட்டுப் பாடுகிறார், சண்டை போடுகிறார்… மற்ரபடி நடிக்க வேண்டிய காட்சிகளில் எல்லாம் முகத்தைச் சுளித்து ஏதோ செய்கிறார். காதல் என்றால் என்னவென்று வரையறை இல்லாமல் போகும், வரும் பெண்கள் மேலெல்லாம் காதல் கொள்கிறார். எனவே அவர் வெண்பாவைக் காதலிக்கும்போது நமக்குப் பதைபதைக்கிறது. இவரை நம்பி..?
அப்படியேதான் ஆகிறது தனக்காக தந்தையையும் இழந்து தனிமரமாகிவிட்ட பெண்ணின் எதிர்காலத்தை நினைக்காமல் ஒரு முடிவெடுக்கும்போது…
படம் முழுவதிலும் வெண்பாதான் மனத்தில் நிற்கிறார். அந்த அப்பாவி முகத்துடன் ஆனால், மன முதிர்ச்சியுடன் உருவாக்கப்பட்ட அவர் பாத்திரமும், வெண்பாவின் நடிப்பும் நன்று. அவருக்கு நல்ல பெயர் பெற்றுத்தரும் வேடம் இது.
ஆனால், தான் எது செய்தாலும் கேட்கும் அன்பான தந்தையிடம் தன் காதலை மறைக்கும் அளவுக்கு அவருக்கு என்ன பிரச்சினை இருந்தது..? அதுவும் அதிரடியாக மணம் புரிய வேண்டிய அளவுக்கு அவருக்கு ஏற்பட்ட நெருக்கடி என்ன என்பதில் திரைக்கதை தெளிவாக இல்லை.
அதேபோல், தன்னையே உலகமாக நினைக்கும் மகள் தவறு புரிந்து விட்டால், அவள் தவற்றைச் சீசெய்து செம்மையாக்காமல், அப்படியே விட்டு விட்டா ஒரு அப்பா போய்விடுவார்..? அப்புறம் என்ன அன்பு வேண்டிக் கிடக்கிறது..?
இப்படியான கேள்விகளைக் கேட்டு திரைக்கதையை இன்னும் செம்மைப் படுத்தி இருந்தால் கொண்டாட வேண்டிய படமாக இருந்திருக்கும். ஆனால், நல்ல முயற்சி என்ற அளவில் நின்று வெற்றிக்கோட்டை தவற விடுகிறது படம். எல்லோரும் நல்லவர்கள் என்ற அளவில் ஏன் இவ்வளவு சோகமான முடிவு..?
கடைசியில் என்னதான் சொல்ல வருகிறார் இயக்குநர் என்பது தெளிவாக இல்லை. லட்சியம் கொண்டவர்கள் காதலிக்கக் கூடாது என்கிறாரா, வேலைக்குப் போய்விட்டு காதலியுங்கள் என்கிறாரா, ஆட்டோ ஓட்டுநரைக் காதலிக்கக் கூடாது என்கிறாரா… அல்லது ‘கௌசல்யா’ என்ற பெயருடைய பெண்கள் காதலித்தால் இப்படித்தான் ஆகும் என்கிறாரா..?
ஸ்ரீனிவாஸ் தேவாம்சத்தின் ஒளிப்பதிவு படத்தின் இயல்புத்தன்மை மாறாமல் பயணித்திருக்கிறது. அதேபோல் பவதாரிணியின் பின்னணி இசை படத்தின் உணர்வுக்கு பக்கபலமாக இருக்கிறது.
மாயநதி – நெகடிவ் சென்ஸ்..!